

பாரதத்தின் பல்வேறு மொழிகளிலும் இராமாயணம் உண்டு. எழுத்து வடிவில், பாடல் வழியில், வாய்மொழி மரபில் என்று விதவிதமாக உண்டு. ஒவ்வொன்றும் படிப்பவருக்கும் அதை கற்பனை செய்து பார்ப்பவருக்கும் சுவாரசியம் அளிக்க வல்லது. ஒவ்வொரு கதாபாத்திர அறிமுகமும் அவர்களது வீரம், குணாதிசயம் உள்ளிட்டவற்றை விளக்குகின்றன.
பஞ்சாபி மொழியில் இராமகதையைப் படைத்துக் கொடுத்தவர், பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்தர் ஆவார். இராமாவதாரம் என்னும் 864 செய்யுள்களில் இயற்றப்பட்டிருக்கும் இந்நூல், இலக்கியவுலகில் கோவிந்த (இ)ராமாயணம் என்றே குறிக்கப்படுகிறது.
ஜோ இஹ கதா ஸுனை அரு காவை
துக் பாவ திஹ நிகடி ந ஆவை
பிஷன் பகதி கீ ஏ பல ஹோயீ
ஆதி வ்யாதி சவை ஸகை ந கோயீ
இந்தக் கதையைக் கேட்பவர்கள் அன்றியும் பாடுபவர்களின் துக்கமும் பாவமும் நீங்கும்; இனி வாரா. விஷ்ணு பக்தியால், உடல் உபாதைகளும் மனக் கிலேசங்களும் காணாமல் போகும்.
இராமனை அறநெறியாளனாகவும் ஆகச் சிறந்த போர்வீரனாகவும் காட்டும் குரு கோவிந்தரின் நோக்கம், இராம கதையைக் கொண்டு அறத்துக்காகப் போராடும் உத்வேகத்தை மக்களுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதாகும்.
தம்முடைய சூழலில், தம்மைச் சுற்றியிருந்த அரசியல் அழுத்தத்தில் (அவுரங்கசீப்பாலும் முகலாயர்களாலும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர் குரு கோவிந்தர்), வீறு கொண்டு எழ வேண்டிய உற்சாகத்தையும், அறத்துக்காகப் பேணவேண்டிய உறுதியையும் இராமகதை கொடுக்கும் என்பதில் கோவிந்தருக்கு ஐயம் இருக்கவில்லை.