அணிலரசியின் ஆறுதல் மொழிகள் | இராம கதாம்ருதம் 31

அணிலரசியின் ஆறுதல் மொழிகள் | இராம கதாம்ருதம் 31
Updated on
2 min read

இராமாயணத்தின் அணில் கதை நமக்குத் தெரியும். இலங்கை செல்வதற்காகக் கடல் மீது பாலம் கட்டியபோது, அணில் பெண்ணாள் வந்து, மணல் தூவி உதவினாள். வான்மீகத்திலும் கம்பரிலும் துளசியிலும் இல்லையென்றாலும், தெலுங்கின் ரங்கநாத ராமாயணத்தில் உண்டு. ஆழ்வார் பாசுரத்தில் உண்டு. மக்களின் உள்ளங்களில் உண்டு.

வடக்கு குஜராத் பகுதிகளில், பில் இன மக்களிடையே வழங்கும் இராமகதை, ராம் சீத்மானி வார்த்தா என்பதாகும். பற்பல தலைமுறைகளாக, பாடல்கள், கவிதைகள், ஆடல் அபிநயங்கள் போன்றவற்றின் வாயிலாக வழங்கி வரும் வாய்மொழி மரபைச் சேர்ந்த இக்கதையில், அணில் பெண்ணாள் பாலம் கட்ட உதவவில்லை. வேறொரு உதவியைச் செய்கிறாள்.

சீதையைக் காணாமல் தேடியலையும் இராமனிடம், அரக்கனால் சீதை அபகரிக்கப்பட்டதையும் கடத்தப்பட்டதையும் கூறுகிறாள். மனைவியைக் காணாமல் மறுகிக் கொண்டிருக்கும் இராமனுக்கு, அணிலரசியின் மொழிகளே அடுத்துச் செய்ய வேண்டிய செயலை விளக்கி ஆறுதல் தருகின்றன.

திக்குத் தெரியாத காட்டில், திசை விளக்காக வெளிச்சம் கொடுத்த அணிலைத் தடவிக் கொடுத்து, முதுகில் மூன்று தங்கக் கோடுகளை இழைத்துவிட்டான் இராமன். அதே கோடுகள், ஆனாலும், கோலங்களில் ஒரு மாறுதல்! அது சரி, நாரையின் கழுத்து ஏன் நீளமாக இருக்கிறது தெரியுமா? சீதையைத் தேடி அலைந்த இராமன், வழியில் ஒரு நாரையிடம் தடயங்கள் கேட்டான்.

சீதையைத் தூக்கியது யார் என்னும் விவரம் தெரியுமா என்று வினவினான். அரக்க அரசனுக்கு அச்சப்பட்ட நாரை விடை கூறவில்லை; வாயே திறக்கவில்லை. சினம் கொண்ட இராமன், ‘வாயைத் திறயேன்’ என்று கூறிக்கொண்டே அதன் கழுத்தை இழுத்தான். அன்றிலிருந்து நாரையின் கழுத்து நீண்டுவிட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in