

தெற்காசிய நாடுகள் பலவற்றில் இராம கதை உண்டென்பதை நாமறிவோம். மியான்மர் நாட்டின் பர்மிய மொழியில் மட்டும், ஏறத்தாழ 13 இராம கதை நூல்கள் உள்ளன. இவற்றில் முதன்மையானது, (இ)ராம வத்து என்னும் நூலாகும். வால்மீகி மற்றும் கம்பர் காவியங்களின் தொகுப்பு போன்றே அமைந்திருக்கும் (இ)ராம வத்துவில், சுவாரசியமான மாற்றங்கள் சிலவும் உண்டு.
அயுத்தயா அரசின் பேரரசர் தசரதர்; இவரின் மனைவியர் கொசல்லா, கோக்கே, சுமித்தா; மகன்கள் ராம, பரத, லக்கன, சத்தருக்கன ஆகியோர். நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் நிலையில், எண்பதாயிரம் ஆண்டுகளாக ஆட்சி நடத்தித் தங்களையெல்லாம் குழந்தைகளைப் போல் பார்த்துப் பார்த்துப் பராமரித்திருக்கும் அரசருக்கு ஓய்வு கொடுக்க மக்கள் விரும்புகின்றனர்.
பெருங்கூட்டமாக அரண்மனை வாயிலில் சென்று நிற்கின்றனர். கூட்டம் கூடியிருப்பதைத் தேரோட்டி சுமந்தன் வந்து சொல்ல, மக்களின் பணிவையும் அன்பையும் மகிழ்ச்சியையும் கண்டு மன்னரும் மகிழ்கிறார். (இ)ராமனை அரசனாக்கலாம் என்னும் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்கிறார். பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிக்கிறார்கள்.
பர்மிய நாட்காட்டியின் முதல் மாதத்தின் முழு நிலா நாளின் வைகறைப் பொழுதில் முடிசூட்டு விழா நடத்தப்படும் என்றும் அறிவிக்கிறார்கள். அரசி கோக்கேவின் பணிப்பெண் குப்பாச்சியின் செயல்களால், கோக்கே மனமாற்றமடைய, பட்டாபிஷேகம் தடைபடுகிறது.
உதயத்தி ஜாத்தி பானு பச்சிமே தித்திபவே
ப்ரஸலத்திம் ஜாயதி மேரு
சீதலம் ஜாத்தி மண்டி பிகஸ்ஸத்தி ஜாயதி
பதுமம் பப்பத்தானம் சிகரே
நசுலத்தி கலு
வாக்யம் சுஜனானம் ஜாத்திமி