

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் அரை கி.மீ தொலைவில் உள்ள வதாரண் யேஸ்வரர் கோயில், கல்விச் செல்வம் அருளும் தலமாக போற்றப்படுகிறது. திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. குரு பரிகாரத் தலமாக இத்தலம் விளங்குகிறது.
மூலவர்: வதாரண்யேஸ்வரர், (வள்ளலார்)
அம்பாள்: ஞானாம்பிகை.
முன்னொரு காலத்தில் ‘தர்மம்’ ரிஷப உருவமெடுத்து சிவனை, அவர் நினைத்த இடத்துக்கெல்லாம் அழைத்துச் சென்றது. அப்போது, பார்வதிதேவி மயில் உருவமெடுத்து பூலோகத்தில் சிவபூஜை செய்து கொண்டிருந்தாள். இதைக் காண பிரம்மா அன்ன வாகனத்திலும், பெருமாள் கருடன் மீதும், மற்ற தேவர்கள் குதிரைகளிலும் வந்தனர். ஆனால், ரிஷபம், சிவனின் அருளால், மற்ற வாகனங்களை விட வேகமாக சிவனை சுமந்தபடி வந்தது.
இதையடுத்து, நம்மால் தான் உலகையே ஆளும் சிவபெருமான் கூட, விரைவாக செல்ல முடிகிறது என்ற கர்வம் ரிஷபத்துக்கு ஏற்பட்டது. இதையறிந்த சிவன் “நந்தி! என்னால்தான் நீ பெருமையடைகிறாய் என்பதை மறக்காதே” என்று கூறி தன் சடைமுடி ஒன்றை எடுத்து அதன் முதுகில் வைத்தார். அதன் பலம் தாங்காத நந்தி, மயக்கமடைந்து விழுந்தது.