

தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் விஜயநகர ஆட்சி காலத்தில் உள்நுழைந்தாலும் 13-ம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை இந்து மதத்தின் சிறப்பான விழாவாக அனைத்து மக்களாலும் இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இடைக் காலச் சோழர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் விஜயநகர ஆட்சி காலத்தில் தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டதாக கல்வெட்டுகள் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.
குறிப்பாக தீபாவளி பண்டிகை குறித்து கல்வெட்டு சான்றுகள் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் 16 கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. திருமலை திருப்பதி கோயிலில் பல்லவர், சோழர், பாண்டியர், தெலுங்கு பல்லவர், யாதவராயர், விஜயநகர காலக் கல்வெட்டுகள் கிடைக்கப் பெறுகின்றன.
மேற்குறித்த அரசமரபினருள் பல்லவர், சோழர், பாண்டியர், தெலுங்கு பல்லவர், யாதவராயர் போன்றோருடைய கல்வெட்டுகள் காலத்தால் முற்பட்டவையாகும். இக்கல்வெட்டுகளில் தீபாவளி பண்டிகை குறித்து செய்தி ஏதும் கிடைக்க பெறவில்லை.
முதன்முதலாக சாளுவ நரசிம்மர் காலத்தில் சக ஆண்டு 1413-ம் ஆட்சி ஆண்டில் (பொ.ஆ.27.06.1491) கொண்டாடப்பட்டதாக தெரிகிறது. முதலாம் புக்கராயர், இரண்டாம் ஹரிஹரராயர், இரண்டாம் தேவராயர், மல்லிகார் ஜுனர் போன்றோருடைய கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்பட்ட போதிலும் இவர்கள் காலத்தில் தீபாவளி பண்டிகை இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லை.