

பக்தி உலகின் இரு கண்கள் என்று போற்றப்படும் சைவ, வைணவ சமயங்கள் பல ஒப்புமைகளைக் கொண்டுள்ளன. சமய நம்பிக்கை, மனிதநேயம், செருக்கின்மை, தெய்வத் திருவடியில் அடைக்கலம் வேண்டல் போன்ற பல கொள்கைகளுடன் எளிமை, பிறர்நலம் நாடல், உயிரிரக்கம் போன்ற விழுமியங்களை முன்னிலைப்படுத்தும் விதமாக இரண்டு சமயங்களும் செயல்படுகின்றன.
சைவ சமயம் சார்ந்த பெரிய புராணம், வைணவம் சார்ந்த குருபரம்பரையை மையமாக வைத்து ‘பெரிய புராணமும் குரு பரம்பரையும்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார் பே.சா.கர்ணசேகரன். ‘நட்பினும் சிறந்தது நல்ல நூல்’ என்ற தலைப்புடன் அறிமுகமாகி, தொடர்ந்து 22 தலைப்புகளில் ஒப்பீட்டு ஆய்வாக இந்நூல் விரிவடைகிறது.
பன்னிரு திருமுறைகளில் இருந்தும், ஆழ்வார் பாசுரங்களில் இருந்தும் ஆங்காங்கே உதாரணங்கள் சுட்டிக் காட்டப்படுவது ஆசிரியரின் பரந்த அறிவையும் கடின உழைப்பையும் காட்டுகிறது. தில்லைக் கூத்தனையும் திருவரங்கப் பெருமாளையும், கயிலை நாதனையும் கச்சி வரதனையும் வழிபட்டு, சேவித்து மகிழும் வண்ணம் இந்நூல் அமைந்துள்ளது.