கண்முன் தெரிவதே கடவுள் 01: இருளும் இறைவனே!

கண்முன் தெரிவதே கடவுள் 01: இருளும் இறைவனே!
Updated on
2 min read

கடவுள் எங்கே என்று காட்டுங்கள் எனக்கு என்றான் சீடன். கடவுள் எங்கே இல்லை என்பதை நீ காட்டு; அதன்பின் நான் காட்டுகிறேன் என்றார் குரு.

அறிவு கடவுளா?

ஆம்.

அப்படியானால் அறியாமை?

அதெப்படிக் கடவுளிடமிருந்து வேறாக இருக்க முடியும்?

என்னால் இதை ஏற்க முடியவில்லை. அறிவைப் படைத்தவன் எதற்காக அறியாமையைப் படைக்கவேண்டும்?

பகலைப் படைத்தவன் எதற்காக இரவைப் படைக்க வேண்டும்? சிந்தித்துப் பார். இரவே இல்லாத பகல், பகலே இல்லாத இரவு. இதை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஒன்று மட்டும் போதுமா? ஒருநாள் என்றால் அது இரவும் பகலும் சேர்ந்ததுதானே!

ஆமாம்.

இன்னொன்றையும் எண்ணிப்பார். இரவும் பகலும் பூமிக்குத்தான். உதயமும் அஸ்தமனமும் சூரியனுக்கு உண்டோ?

இல்லை.

எனவே, எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். அதைத்தான் நாம் தெய்வம் என்கிறோம். கடவுள் இல்லாதது, கடவுளுக்கு அப்பாற்பட்டது என்று எதுவும் இருக்க முடியாது. ஏன் தெரியுமா? கடவுள் என்பது எங்கேயோ இருந்துகொண்டு, எதையோ ஒரு மூலப்பொருளாக வைத்துக்கொண்டு இதையும் அதையும் படைக்கவில்லை.

அதுவே எல்லாமுமாக ஆனது! எல்லாமுமாக எப்போதும் இருக்கிறது. நெருப்பு சுடுகிறது. பாத்திரத்தைச் சூடேற்றுகிறது. நீரைக் கொதிக்கவைக்கிறது. அரிசியை வேக வைக்கிறது. பாத்திரத்தில் கரி பிடிக்கிறது. எரிதல் என்னும் நிகழ்விருந்தால், சூடு மட்டுமல்ல, கரி பிடிப்பதையும் தவிர்க்க முடியாது.

இந்தப் படைப்பில் ஒன்றையொன்று பிரிக்க முடியாது. அதனால்தான் மொத்தப் படைப்பையும் ‘அக்னி காரியம்’ என்கிறது நான்மறை. ‘தீயினும் வெய்யன், புனலினும் தண்ணியன்’ என்பார் திருமூலர்.

இதில் கடவுள் தரிசனம் என்பது?

எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்ப்பது.

‘இது கடவுள் அல்ல.. இது கடவுள் அல்ல’ என்று கழித்துக்கொண்டே வந்தால் மிஞ்சுவதே கடவுள் என்றொரு தத்துவம் சொல்கிறார்களே..

உண்மைதான். ஆனால், சிந்தித்துப் பார். இது முடிகின்ற ஒரு செயலா! நீ சாக்கடையைக் கழித்துக் கட்டுவாய். சந்தனத்தைக் கழித்து விடுவாயா?

அப்படியானால் என்னதான் வழி?

‘இது கடவுள் அல்ல’ என்று ஒன்றைக் கழிப்பதற்குப் பதிலாக, ‘இது ஒன்று மட்டும் கடவுள் அல்ல’ என்று கருதத் தொடங்கு! அதன் பிறகு, இது அதுவென்ற வேறுபாடுகள் தீர்ந்துவிடும். எதுவும் இறையாகத் தெரியும்.

உண்மைதான் ஐயா. நமக்குப் பிடித்தவொன்றை இறைவனாகக் கருதிக்கொள்வது சுலபம். பசுவைக் கடவுள் எனலாம். பாம்பை? தேனைத் தெய்வமெனலாம், தேளை? அன்னத்தை இறைவனாகக் கொள்ளலாம். மலத்தை?

ஆம்! ஆனால், மகாகவி பாரதி நம்மைப்போல் மனிதனாகப் பிறந்தவன். நம்மைக் காட்டிலும் வாழ்க்கையில் துன்பங்களை அதிகம் அனுபவித்தவன். அவன் எல்லாவற்றையும் எப்படிச் சேர்த்துப் பார்க்கிறான் பார்!

எப்படி?

கேளப்பா சீடனே! கழுதை யொன்றை

கீழான பன்றியினை, தேளைக் கண்டு,

தாளைப் பார்த்து, இரு கரமும் சிரமேற் கூப்பி

சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்!

கூளத்தை, மலத்தினையும் வணங்க வேண்டும்!

கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்!

மீளத்தான் இதைத் தெளிவாய் விரித்துச் சொல்வேன்

விண்மட்டும் தெய்வமன்று! மண்ணும் அஃதே!

ஆஹா! அவரால் எப்படி இப்படிச் சொல்ல முடிந்தது?

பாரதியால் அப்படிப் பார்க்க முடிந்தது. அதனால்தான் சொல்ல முடிந்தது. ஏன், அண்மையில் வாழ்ந்த கண்ணதாசனும் ‘பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்’ என்று இதையே தெளிவாகச் சொன்னாரே!

‘பார்க்கத் தெரிந்தால்’ என்றால்?

அது ஏதோ தனிப்பட்ட திறமை என்று நினைத்துக்கொள்ளாதே! நம்பிக்கையைத்தான் குறிப்பிடுகிறார் கவிஞர். எதையும் நம்பாமல் இருப்பதற்குக்கூட, ஏதோவொரு நம்பிக்கை தேவைப்படுகிறது! நம்புவதே வழி! நம்பினார் கெடுவதில்லை!

ஓ! நம்பினால் இறைவனைப் பார்க்கலாமா?

இதோ பார்! உன் நம்பிக்கை கடவுளுக்குத் தேவையில்லை. நீ நம்பாமல் போனால் அவனுக்கு அது ஒரு பொருட்டுமில்லை. நம்பிக்கை என்பது உன் தேவை! அதனால்தான் சொல்கிறேன், கடவுளை அறிய உன்னுடைய அறிவு ஒரு தகுதியுமாகாது. உன் அறியாமை ஒரு தடையுமாகாது. இரண்டுமே மிகவும் குறுகியவைதான் என்பதை உணர்ந்துகொள்!

மிக்க நன்றி குருவே! என்னுடைய அறியாமை என்னும் இருளின் விளைவால் அப்படிக் கேட்டுவிட்டேன். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

இதில் சரியென்றும் தவறெனும் எதுவுமில்லை. ஆனால், இதை நினைவில் வைத்துக்கொள். இருள் என்றாய். அந்த இருளிலும் இருப்பது கடவுள்தான் என்பதை மறந்துவிடாதே. இருளும் இறைவனே – ஒளியைப் போலவே! ஒளியில் இருக்கும் இறைவன் இருளில் இல்லையென்றால், இருள் தோன்றியே இருக்க முடியாது.

அதனால்தான் பாரதி, ‘இருள் என்பது மிகக் குறைந்த ஒளி’ என்பான். அதேபோல், ‘என்னுடைய அறியாமை’ என்று சொந்தம் கொண்டாடாதே! அப்படிச் செய்தால் உன்னுடைய குறைவுபட்ட அறிவையும் ‘என்னுடைய அறிவு’ என்று சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிடுவாய்! இரண்டுமே ஆணவம் என்கிற அறியாமைதான் என்பதையும் நினைவில் கொள்.

உன்னில் அவனைக் கண்டால்,

ஊரிலும் அவனைக் காண்பாய்

ஊரில் அவனைக் கண்டால்,

உன்னிலும் அவனைக் காண்பாய்

என்னில் உன்னில் இதனில் அதனில்

என்னும் பேதம் இன்றி,

எதிலும் அவனை எதுவும் அவனாய்

எதிரே சிரிக்கக் காண்பாய்!

மிக்க நன்றி குருவே!

என்ன, விடைபெறுகிறாயா?

இல்லை ஐயா! விடை பெற்றேன்!

(தரிசனம் நிகழும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in