

இறைவனைச் சரணடைந்தால் எல்லாமே கிட்டும் என்பதற்கு வாழும் உதாரணமாகத் திகழ்ந்தவர் படிக்காசுப் புலவர். தொண்டை மண்டலம், பொற்களத்தூரில் (தென்களத்தூர் என்றும் சொல்வதுண்டு) 250 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் இவர். வள்ளல் சீதக்காதியின் சமகாலத்தவர்.
இவரது இயற்பெயர் என்ன தென்று சரியாகத் தெரியாத நிலையில் ஆகிவந்த பெயரான படிக்காசுப் புலவர் என்பதே நிலைத்துவிட்டது; இவரைப் படிக்காசுத் தம்பிரான் எனவும் அழைப்பர் என்கிறது ‘படிக்காசுப் புலவர் சரிதம்’. தொண்டை மண்டல சதகம், பழமொழி விளக்கம் போன்ற பல நூல்களைத் தமிழ் உலகத்துக்குத் தந்தவர் இவர்.
படிக்காசுப் புலவர் என்கிற பெயர் இவருக்கு வந்ததே சுவையானதொரு நிகழ்ச்சி. புலமை இருக்கும் இடத்தில் வறுமையும் இருக்கும்தானே. அதற்கு இந்தப் புலவரும் விதிவிலக்கு அல்ல.
‘நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது’
- என்பார் வள்ளுவர். அதாவது, மந்திரம் முதலியன பயின்று, நெருப்பினுள்ளும் உறங்கிவிடலாம். ஆனால், வறுமையில் இருக்கும் ஒருவன் என்ன மாயாஜாலம் செய்தாலும் உறங்க முடியாது. பசி வயிற்றைக் கிள்ளும்போது எப்படி உறக்கம் வரும்? ஒளவைப் பாட்டியும் ‘கொடியது எது?’ என்று முருகன் கேட்டபோது, ‘கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்! கொடிது கொடிது வறுமை கொடிது / அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்றல்லவா சொன்னார்!
தாயின் பரிவு: கலைமகளின் அருளைப் பூரணமாகப் பெற்றிருந்த அவர், அலைமகளின் அருளைப் பெறவில்லை. ஆகையால் அவரை வறுமை வாட்டி வதைத்தது. குழந்தைக்கு ஏதேனும் குந்தகம் வந்தால், அது தாயை நோக்கித்தானே ஓடும். புலவரும் அகில உலகத்துக்கும் அம்மையும் அப்பனுமான பார்வதி - பரமேஸ்வரனை நாடினார். பூலோக கைலாசம் என்று அழைக்கப்படும் தில்லையை நோக்கி விரைந்தார்.
பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலம் தில்லை. பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு ஈசன் திருநடனக் காட்சி தந்த அற்புதத் தலம். தில்லைக் காளியின் கர்வத்தை அடக்கிய புனிதத் தலம். மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல ஈசன் திருவாசகம் எழுதிய திருத்தலம்.
அப்பர் முதல் மூவரும் பாடிப் பரவிய தலம். இத்தகு பெருமைகளைக் கொண்ட தில்லையை அடைந்தார் புலவர். ஊன் உருக உயிர் உருக ஆடல் வல்லானைத் தரிசித்தார். கண்ணீர் சிந்தினார். அருகில் நின்று அப்பன் ஆடலைக் கண்டு இன்புற்றிருக்கும் அம்மை சிவகாம சுந்தரியை நோக்கினார்.
கடலுலகம் அனைத்துக்கும் அவள் தாய் என்றால் நமக்கும் அவள்தானே தாய் என்று புலவருக்குத் தோன்றியது. கஷ்டம் என்றதுமே தாயிடம் போய் முறையிடும் குழந்தையைப் போல, கண்ணீர் விட்டபடியே அந்த அம்பிகையை இறைஞ்சினார். அந்த வேண்டுதலும், ஓர் அழகான கவிதையாகவே அவர் நாவில் இருந்து வெளிவந்தது.
வேல் கொடுத்தாய் திருச்செந்தூரர்க்கு
அம்மியின் மீது வைக்கக்
கால் கொடுத்தாய் நின் மணவாளனுக்கு
கவுணியர்க்குப்
பால் கொடுத்தாய், மதவேளுக்கு
மூவர் பயப்படச் செங்
கோல் கொடுத்தாய் அன்னையே!
எனக்கு ஏதும் கொடுத்திலையே!
- ‘அம்மா உன் இரண்டாவது பிள்ளை முருகனுக்கு சூரபத்மனை சம்ஹாரம் செய்ய ஞான சக்தி வேலைத் தந்தாய். உன் கணவனான இறைவனுக்குத் திருமணத்தின்போது, அம்மியின் மீது வைக்க உனது பாதத்தைத் தந்தாய். பால் வேண்டி அழுத சம்பந்தமூர்த்திக்கு ஞானப் பாலைக் கொடுத்தாய். ஆணவத்தால் ஈசனை எதிர்த்து, அவர் நெற்றிக் கண் நெருப்பினால் சாம்பலானான் மன்மதன். அவன் உன்னைப் பூசித்து உலகையே வெல்லும் கோலைப் பெற்றான்.
அதாவது அவனுக்குக் கரும்பு வில்லையும் மலர்க் கணைகளையும் கொடுத்தாய். அதை வைத்துக்கொண்டு அவன் அனைத்து உலகத்தையும் வெல்கிறான். ஆனால், இவர்கள் யாரும் உன்னிடம் இதை எனக்குக் கொடு என்று கேட்கவே இல்லை. உன் உள்ளத்தில் பூத்த கருணையால் அவர்களுக்கு நீ செய்த அருள் கொடை இது. ஆனால், உனது குழந்தையான எனக்கு நீ ஒன்றுமே கொடுக்க வில்லையே இது நியாயமா’ என்று அம்மை சிவகாமியைப் பார்த்துப் புலவர் பாடினார்.
ஒரு குழந்தை, தாயிடம் சென்று, ‘அண்ண னுக்கு மட்டும் கொடுத்தாயே எனக்கு ஏன் ஒன்றுமே தரவில்லை?’ என்று கடிந்துகொள்வது போலப் புலவரும், அகில உலகத்துக்கும் தாயான அம்பிகையைக் கேட்கிறார். உடனே, சிவகாமி அம்மை அசரீரியாகப் பேசினாள்.
“அப்பனே என் குழந்தைகள் யாரையுமே நான் கைவிட்டதில்லை. உன்னையும் நான் கைவிடவில்லை. இதோ பஞ்சாட்சரப் படியைப் பார். அதில் உனக்கான பரிசு இருக்கிறது. இனி உனக்கு எப்போது எந்தப் பிரச்சினை என்றாலும் என்னிடம் வா! நான் இருக்கிறேன் உனக்கு. கலக்கம் வேண்டாம். ஆசிகள்” என்று அம்பிகையின் குரல் ஆகாயத்தில் இருந்து அமுதம்போல் ஒலித்தது.
அம்பிகை சொன்னபடியே நடராஜர் சந்நிதித் திருப்படியை அவர் நோக்கினார். அங்கு அவருக்காக அம்பிகை வைத்திருந்த ஐந்து பொற்காசுகள் மின்னியபடி இருந்தன. அதைக் கண்ட புலவருக்குப் பேச்சு வரவில்லை. அம்பிகையின் அருளை எண்ணி கண்ணீர்தான் வந்தது. கை நழுவிய பொருளைப் போல விழுந்து அவளை வணங்கி “அம்மா உன் கருணையே கருணை” என்று அரற்றினார். இப்படி அம்பிகை அவருக்குப் படியில் பொற்காசு தந்து உதவியதால் அவரை உலகமும் ‘படிக்காசுப் புலவர்’ என்று அழைக்க ஆரம்பித்தது.
- ஜி.மேகஷ்