

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளோடு மேலும் பல பெருமைகளைத் தன்னிடம் கொண்டு விளங்கும் திருத்தலம் சிவசைலம். சைலம் என்றால் மலை என்பது பொருள். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கருணைநதியின் தெற்குக் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் வௌ்ளிமலை, முள்ளிமலை, சிவசைல மலை ஆகிய மூன்று பெரிய மலைகளுக்கு நடுவில் இயற்கை எழில் கொஞ்ச அமைந்துள்ளது.
விரும்பி உறையும் இறைவன்: ஒரு சமயம் தன் சாபவினை தீர நான்முகன் இத்தலத்தில் வந்து தவம் புரிந்தார். அப்போது இறைவன் விங்கவடிவாய் காட்சி தந்து படைப்புத் தொழிலை அவருக்குக் கற்பித்தருளினார். ஆக, தொன்மைப் பெருமைமிக்க ஆதி மலையாக பரம்பொருள் விரும்பி உறைவதால் நான்முகன் வேண்டுதல்படி, இத்தலம் சிவசைலம் எனப் பெயர் பெற்றது.
மலைமீது குடிலமைத்து அத்திரி மகரிஷியும், அனுசூயாவும் நாளும் சிவநாமம் உச்சரித்து வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு இறைவன் காட்சி தந்தருள வேண்டிக் கொண்டனர். அதனை ஏற்ற பரம்பொருளும் அவர்கள் இருக்கும் திக்கில் அதாவது மேற்குப் பார்த்த வண்ணம் காட்சி தந்தார். இதனாலேயே இத்திருக்கோயில் மேற்குப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.
பிருங்கியால் வந்த பரமகல்யாணி: பிருங்கி முனிவர் பரம்பொருள் மீது அளவற்ற பக்தி கொண்டவர். அவர் எப்பொழுதும் அம்மையை விட்டு அப்பனை மட்டும் வலம் வந்து வணங்கினார். அது கண்டு அம்மை வருந்தி கோபத்துடன் பூலோகம் வந்தாள். சிவசைலத் தலத்தில் வந்து இறைவனை நினைத்து கடுமையான தவம் மேற்கொண்டாள். அவளது தவத்துக்கு இரங்கிய பெருமான் அங்கே காட்சியளித்து, அன்போடு அம்மையை “கல்யாணி” என்று அழைத்தார்.
அதனால் இத்தல அம்பாளை கல்யாணி என அழைக்கப்படும் வழக்கம் உண்டானது. அதுவும் அகிலமெல்லாம் கட்டிக்காக்கும் பரம்பொருளே இப்பெயரைச் சூட்டிய காரணத்தால், அவரது நாமத்தையும் சேர்த்து இத்தல அம்பாளுக்குப் ‘பரமகல்யாணி’ என்ற அழகிய பெயர் ஏற்பட்டது. இத்தல சுவாமியும், அம்பாளும் சுயம்புத் திருமேனிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவசைலத்தை ஒட்டியுள்ள கீழாம்பூரில், ஆழ்வார்க்குறிச்சி மக்கள் பரமகல்யாணி மீதும், சிவசைலநாதர் மீதும் எல்லையில்லா அன்பு கொண்டவர்கள். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சந்தைப்படுத்தும்போது கல்யாணி இரண்டு… மூன்று…. என்றுதான் எண்ணுவது வழக்கம். அதுபோல, ஆழ்வார்குறிச்சி மக்கள் தங்கள் ஊர் அளவையில் சைலப்பர்…. இரண்டு…. மூன்று…. என்றே எண்ணுவது வழக்கம்.
சித்திரை விசு திருவிழா: இதைவிட இன்னும் ஒரு படி மேலே போய் தங்களது அன்பை பாசமழையாய் பொழியும் ஒரு நிகழ்வுதான் சுவாமியையும், அம்பாளையும் கீழாம்பூருக்கு மறுவீடு அழைத்து மூன்று நாள் விழா கொண்டாடி மகிழும் நிகழ்ச்சி.
இதுவும் வேறெங்கும் காணமுடியாத அரிய நிகழ்வே! இத்தலத்தில் நடைபெறும் முக்கியப் பெருவிழா பங்குனி மாதம் நடைபெறும் பன்னிரண்டு நாள் பிரம்மோற்சவத் திருநாள். சிவசைலம் காட்டுப் பகுதி என்பதால் பத்து நாள் திருவிழா ஆழ்வார்குறிச்சியில் நடைபெறுகிறது.
விழாவின் முத்தாய்ப்பாக பங்குனி மாதம் கடைசி நாள் பதினோராம் நாள் திருவிழாவான தேர்த் திருவிழாவும் ஆழ்வார்குறிச்சியில் நடைபெறும். இதனைத்தொடர்ந்து `சித்திரை விசு' என்ற தீர்த்தவாரி விழா சிவசைலத்தில் நடைபெறும். அதே சித்திரை அல்லது வைகாசி மாதத்தில் ஒரு நல்ல நாளில் சிவசைல நாதரும், பரமகல்யாணி அம்பாளும் கீழாம்பூருக்கு எழுந்தருள்கிறார்கள்.
ஒட்டுமொத்த ஊர்மக்களும் கூடி, திருமணமான தங்கள் வீட்டு பெண்ணுக்கு மறுவீடு அழைப்பு நிகழ்ச்சியாக மூன்று நாள்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். இது போன்ற மக்கள் பேரன்பை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது என்பதுதான் உண்மை! `வசந்த மண்டகப்படி' என்று அழைக்கப்படும் இந்தத் திருவிழாவில், தங்கள் வீட்டு மகளுக்குக் காட்டும் அன்பையும், உபசாரத்தையும் கீழாம்பூர் மக்கள் அம்பாளுக்குச் செய்வார்கள்.
சிவசைலம் கோயில் எதிரே பொ.ஆ.(கி.பி.) 1905இல் இவ்விழாவுக்காகவே வசந்த மண்டபம் ஒன்றை கட்டியுள்ளனர்.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு நடைபெறும். சிவசைலத் தலபுராணம், சிவசைலேசர் துதிக் கலிவெண்பா, பரமகல்யாணி அம்பாள் ஆசிரிய விருத்தம் என பல பாடல் திரட்டுகள் இத்தலத்தின் பெருமையை எடுத்துச் சொல்கின்றன.
இங்கு தினமும் ஆறுகால பூசை சிறப்பாக நடைபெறுகிறது. சித்ரா பௌர்ணமியை ஒட்டி கடநா நதியில் மீன் விளையாட்டு விழா நடைபெறும். வைகாசி மாதம் முதலாம் திங்கள்கிழமை அல்லது வௌ்ளியன்று சுவாமி, அம்பாளை வசந்த விழாவுக்கு கீழாம்பூருக்கு கூட்டிச்செல்லும் அழைப்பு சம்பிரதாயம் நடைபெறும்.
கோயிலுக்கு எதிரே பிரம்மாண்டமாக உள்ள வசந்த மண்டபத்தில் சுவாமி, அம்பாள் அலங்காரம் முடிந்து வாகனங்களில் கீழாம்பூருக்கு எழுந்தருளும் வைபவம் சிறப்பாக நடைபெறும். கடந்த ஆண்டு இத்திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
| அமைவிடம் திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலையில் 40 கி.மீ தொலைவில் ஆழ்வார்குறிச்சி பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து 6 கி.மீ பயணித்தால் சிவசைலம் கோயிலை அடையலாம். ஆட்டோ, மினிபஸ் வசதி அடிக்கடி உள்ளது. தரிசன நேரம்: காலை 7. மணி - பகல் 12.15 மணி. மாலை 5.00 மணி - இரவு 8.00 மணி. |
- வெ. கணேசன் | vganesanapk2020@gmail.com