

மியூசிக் அகாடமியின் 16ஆம் ஆண்டு நாட்டிய விழாவில் பரத நாட்டியம் மட்டுமல்லாமல் குச்சிபுடி, மோகினியாட்டம், கதகளி, விலாசினி நடனம், ஒடிசி போன்ற இந்தியாவின் பாரம்பரிய நாட்டிய வகைமைகளும் அரங்கேறி பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தின. இந்த ஆண்டுக்கான நிருத்திய கலாநிதி விருதைப் பிரபல நாட்டியக் கலைஞர் பிரஹா பெசல் அலங்கரித்தார்.
மீனாட்சியின் ஆறுதல்
நாட்டிய கலா ஆச்சார்யா அலர்மேல்வள்ளியின் பேர்சொல்லும் சீடர்களில் மீனாட்சி நிவாசனும் ஒருவர். கட்டிடக் கலை நிபுணராகவும் திகழும் மீனாட்சி சிங்கப்பூரில் கட்டிடக் கலை தொடர்பான பணிகளிலும் ஈடுபடுபவர். அங்கிருக்கும் சிங்கப்பூர் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியில் நடனக் கலைஞர் கிரீஷ்குமாரிடம் தொடர்ந்து நடனக் கலையின் பல நுணுக்கங்களில் நிபுணத்துவம் பெற்றார். பரத நாட்டியத்தில் பாரம்பரியமாக ஆடப்படும் ‘மார்கம்’ போன்ற வகைமைகளோடு நவீன அணுகுமுறைகளையும் பரத நாட்டியத்தில் சாத்தியப்படுத்திய பெருமைக்குரியவர் மீனாட்சி.
மியூசிக் அகாடமியில் அரங்கேறிய அவரது நிகழ்ச்சி ராகமாலிகையில் சுவாதித் திரு நாளின் ‘கல்யாணி காலு’ என்னும் சாகித்யத்துக்கு விறுவிறுப்பான அவரின் நடன முத்திரைகளோடு தொடங்கியது.
பரத நாட்டியத்தில் முக்கிய உருப்படியான வர்ணத்துக்கு ஒரு நடனக் கலைஞர் எப்படி ஆடுகிறார் என்பதுதான் முத்தாய்ப்பாக இருக்கும். இதற்குச் சிலரின் நாட்டியம் ஆடும் முறையால் அவர்களும் சோர்ந்துவிடுவார்கள், பார்ப்பவர்களுக்கும் சோர்வு ஏற்பட்டு விடும். ஆனால், மீனாட்சியின் வர்ணத்துக்கான நிருத்தங்களும் அபிநயங்களும் அரங்கின் மேடையை அவர் முழுமையாகப் பயன்படுத்திய பாங்கும் பார்ப்பவர்களையும் நிமிர்ந்து உட்காரவைத்தன.
யதுகுலகாம்போஜியில் தஞ்சை நால்வர் அமைத்த ஸ்வரஜதி அப்படியொரு அனுபவத்தைப் பார்ப்பவர்களுக்கு அளித்தது. தொடர்ந்து சாரங்கபாணியின் ‘ஏமிட்டிகி’ சாகித்யத்துக்கு அவரின் நடனம், கலாபூர்வமான நாட்டிய அனுபவத்துக்குச் சான்றாக விளங்கியது.
வதந்திகள் இந்தக் காலத்தில் மட்டுமல்ல எல்லாக் காலத்திலும் இருக்கும் விஷயம். மதுர கவியின் ‘யாருக்காகிலும் பயமா’ சாகித்யத்துக்கு மீனாட்சி யிடமிருந்து அநாயாசமாக நாட்டிய முத்திரைகள் வெளிப்பட்டன. புறணி பேசுபவர்களைப் புறங்கையால் தூசு தட்டுவதுபோல் தட்டிய அவரின் பாணி, அவரது நாட்டியத்தின் மேன்மைக்கு ஒரு பதம்! சுவாதித் திருநாளின் தேஷ் ராகத்தில் அமைந்த தில்லானாவை விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் வழங்கினார் மீனாட்சி. இந்த ஆண்டு அலர்மேல்வள்ளியின் நாட்டியத்தைக் காண முடியாதவர்களுக்கு மீனாட்சியின் நாட்டியம் ஆறுதல்!
நர்த்தகிக்குக் கிடைத்த கௌரவம்
தஞ்சை நால்வரின் வழிவந்த கே.பி. கிட்டப்பா பிள்ளையிடம் நேரடியாக நடனம் கற்றுக்கொண்டவர்களில் நர்த்தகி நடராஜும் ஒருவர். மியூசிக் ஆகாடமியின் நிருத்திய கலாநிதி விருதை 2021ஆம் ஆண்டுக்காகப் பெற்றிருக்கும் அவரின் நிகழ்ச்சி அண்மையில் மியூசிக் அகாடமியில் நடந்தது.
அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி யில் இருந்து ராகமாலிகையாகத் தொடுக்கப்பட்ட சொற்கட்டுக்குத் தனது நடன முத்திரைகளை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கினார் நர்த்தகி. தொடர்ந்து தஞ்சை நால்வரின் கமாஸ் ராகத்தில் அமைந்த ‘சுவாமியை அழைத்து வாடி’ வர்ணத்துக்குத் தன்னுடைய அசாத்தியமான கற்பனை களால் அழகூட்டினார். அன்றைய நாட்டிய நிகழ்ச்சியில் பாரம்பரியத்தின் மரபுகளும் இருந்தன. ஜனரஞ்சகமான பாமரர்களையும் பரவசப்படுத்தும் காவடிச் சிந்து வகைமைகளும் இருந்தன.
ராகமாலிகையாக மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதிய ‘சிங்காரி ஒய்யாரி’ சாகித்யத்தைப் பதமாக ஆடினார் நர்த்தகி. ரசிகர்களுக்கு நாட்டியத்தின் மூலமாகப் பரிபூரண பக்தியையும் மகிழ்ச்சியையும் அளித்த நர்த்தகியின் நடனத்துக்கு ரசிகர்கள் தங்களின் இருக்கைகளிலிருந்து எழுந்து கைதட்டி வரவேற்பு அளித்தது, அவரிடம் குடிகொண்டிருக்கும் கலைக்குக் கிடைத்த கௌரவம்!
ரமாவின் கொஞ்சும் சலங்கை
மியூசிக் அகாடமியின் (2020ஆம் ஆண்டுக்கான) நிருத்திய கலாநிதி விருதைப் பெற்றிருப்பவர் ரமா வைத்திய நாதன். யாமினி கிருஷ்ணமூர்த்தி, சரோஜா வைத்தியநாதன் ஆகிய இரு பெரும் நாட்டிய மேதைகளால் பட்டை தீட்டப்பட்டவர். ஏறக் குறைய 35 ஆண்டுகளுக்கும் மேலாக பரத நாட்டிய நிகழ்ச்சிகளை உலகின் பல பிரபல மேடைகளிலும் நிகழ்த்திக்கொண்டிருப்பவர். எண்ணற்ற இளம் கலைஞர்களை உருவாக்கிக் கொண்டிருப்பவர் ரமா. அண்மையில் மியூசிக் அகாடமியில் நடத்தப்பட்ட அவரது நிகழ்ச்சி ரசிகர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரிக் வேதத்திலிருந்து ராகமாலிகையாகத் தொடுக்கப்பட்ட வரிகளுக்குத் தன்னுடைய அபிநயங்களால் காட்சி வடிவம் கொடுத்தார் ரமா. அவரின் அபிநயங்களில் தத்துவ விசாரங்களும் நயமாக வெளிப்பட்டன. நமச்சிவாயப் புலவரின் ‘மாமோகலகிதி மீறுதேன்’ கமாஸ் ராகத்தில் அமைந்த வர்ணத்துக்கு விளம்ப காலம், மத்தியம காலம், துரித காலப் பிரமாணங்களில் அவரிடமிருந்து வெளிப்பட்ட பாவபூர்வமான நாட்டியம், அவரது கொஞ்சும் சலங்கையின் வழியாக இளம் கலைஞர்களுக்குப் பாடம் எடுத்தது!
மனக்கண்ணில் நிறையும் மாளவிகா
மாளவிகா சருக்கை நடன வடிவமைப்பு செய்திருக்கும் ‘ஸ்திதி கதி’, ‘கிருஷ்ணா நீ’ போன்றவை நியூயார்க்கின் புகழ்பெற்ற ஜுலியார்ட் நிகழ்த்துக் கலைகளுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மியூசிக் அகாடமியின் நாட்டிய கலா ஆச்சார்யா விருது பெற்ற மாளவிகா சருக்கையின் நடனத்தைப் பார்ப்பதே ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். பிரபலமான நடனக் கலைஞர்களுக்கே அவரின் நாட்டிய நிகழ்ச்சி அரிய பல தகவல்களைச் சொல்லாமல் சொல்லும். இந்தச் சொல்லுக்கு இப்படித்தான் நாட்டியத்தில் அபிநயம் செய்ய முடியும் என்றிருக்கும் எல்லைகள் அவரது அபிநயங்களில் விரிவடைந்துகொண்டே போகும்.
அண்மையில் மியூசிக் அகாடமியில் நடந்த அவரின் நாட்டியத்திலும் அபூர்வமான பல உருப்படிகள் ரசிகர்களைப் பக்தி ரசத்துடன் சிருங்கார ரசத்தையும் பக்திபூர்வமாகக் கடத்தின. தஞ்சை நால்வரின் ‘சாமி நின்னே கோரி நனுரா’, மகேச தாண்டவம், பண்டிட் டி.வி.பலுஸ்கர் இசையமைத்த துளசி தாசரின் ‘துமக் சலடா’ போன்றவற்றுக்கு மாளவிகாவின் நடனமும் பாவபூர்வமான அபிநயங்களும் அடுத்த ஆண்டு நாட்டியத் திருவிழா வரையிலும் நம் மனக்கண்ணில் இருந்துகொண்டே இருக்கும்.
பிரபல நாட்டியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் முடிந்த மறுநாளே கே. சந்திர சேகரன் அறக்கட்டளை சார்பாக பிரீதம் தாஸ், திவ்யா ஹொசகரே ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடந்தது. மியூசிக் அகாடமியின் சிறந்த இளம் கலைஞருக்கான பரிசைப் பெற்றிருக்கும் பிரீதம் தாஸ் நிருத்திய கலாநிதி ரமா வைத்தியநாதனின் மாணவர். தன்னுடைய குருவின் நடன வடிவமைப்பையே அன்றைய நிகழ்ச்சியில் பிரீதம் ஆடினார்.
தஞ்சை நால்வரின் கமாஸ் ராக வர்ணத்தை நாயகி பாவத்தில் பிரீதம் விரிவாகத் தன்னுடைய அபிநயங்களில் காட்சிப் படுத்தினார். நாயகிக்குத் தன்னுடைய நாயகனின் பல்வேறு சிறப்புகளை நயமாக எடுத்துரைத்து, ‘அவர் யாருமல்ல, இறைவன் பிரகதீஸ்வரரே’ என்பதைப் பாவத்தோடு வெளிப் படுத்தியது அவரது நடனம். மகாராஜா சுவாதித் திருநாளின் தில்லானாவோடு நிகழ்ச்சியை முடித்தார்.
பிரபல பரத நாட்டியக் கலைஞர் பிரவீன் குமாரின் மாணவி திவ்யா ஹொசகரே. பிரபல சாகித்யகர்த்தாவான துவாரகி கிருஷ்ணசுவாமியின் கரஹரப்ரியா ராகத்தில் அமைந்த ‘சிருங்கார சதுரனே’ வர்ணத்துக்கு திவ்யாவின் நிருத்தங்களும் அபிநயங்களும் ஜதிக் கோவைகளில் துரித கதிக்கு அவரிடமிருந்து வெளிப்பட்ட மின்னல் வேக கால் அசைவுகளும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. ஜெயதேவரின் அஷ்டபதிக்கு அவரின் நடன அசைவுகளும் அபிநயங்களும் பாவபூர்வமாக இருந்தன. டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணாவின் பிருந்தாவனி ராகத்தில் அமைந்த தில்லானாவுடன் நிகழ்ச்சியை அவர் நிறைவு செய்தார்.
படங்கள்: தான்தோனி
உதவி: மியூசிக் அகாடமி