கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை: நானே ஒளி.. என் தந்தை என்னை அனுப்பினார்!

கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை: நானே ஒளி.. என் தந்தை என்னை அனுப்பினார்!
Updated on
2 min read

உலகின் எல்லா மதங்களும் ஒளியை முன்நிறுத்துகின்றன. சிறந்த முன்மாதிரியாக இருப்பவர்களை, வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளியாகப் பார்க்கிறோம். கிறிஸ்துவப் பெருமதத்தில் ஒளியின் வடிவமாகப் பார்க்கப்படுகிறவர் இறைமகன் இயேசு. அவர் காட்டிய வழியில் அவரை நோக்கிய பயணமே சிறந்த ஆன்மிக வாழ்க்கை என்பதில் உலகின் பல பிரிவு கிறிஸ்துவர்கள் ஆழமான நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஏனென்றால், “நான் இந்த உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிற யாரும் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டார்கள், ஆனால் வாழ்வு தரும் ஒளியைப் பெற்றிருப்பார்கள்” (யோவான் 8:12) என்று தன்னைத் தேடிப் பின்தொடர்ந்த மக்களிடம் சொன்னார். அதேபோல், தன்னை விமர்சித்த யூதப் பழமைவாதிகளிடம்: “கடவுள்தான் உங்கள் தகப்பன் என்றால், நீங்கள் என்மேல் அன்பு காட்டுவீர்கள். ஏனென்றால், நான் கடவுளிடமிருந்து இங்கே வந்திருக்கிறேன். நான் சுயமாக வரவில்லை, அவர்தான் என்னை இங்கே அனுப்பினார். நான் சொல்வதை ஏன் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்?” (யோவான் 8:42) என்று கேட்டார்.

இறந்த லாசரை இயேசு உயிர்பெறச் செய்தபோது உண்மையாகவே அவர்கள் பயந்துதான் போனார்கள். அப்போதுதான் இயேசுவின் பிறப்பு குறித்து அவர்கள் தேடத் தொடங்கினார்கள். உண்மையில் இந்த இயேசு பிறந்ததும் வளர்ந்ததும் எங்கே எனத் தேடியபோது, அவர் குழந்தையாகப் பிறந்தபோது சாட்சியாக இருந்த மேய்ப்பர்கள் இப்போது நடுத்தர வயதுக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் யூதத் தலைமை குருவுக்கு அளித்த சாட்சியம் வரலாற்றில் மிக முக்கியமானதாக இருக்கிறது.

எளிய மக்களுக்கு முதல் அறிவிப்பு: இயேசுவின் பிறப்பைக் குறித்து கடவுள் முதலில் கன்னி மரியாளுக்கு அறிவித்தார். அவர் கருவைத் தாங்கி இயேசுவை பிரசவித்தபோது, அவர் மீட்பராக இந்த உலகத்துக்கு அருளப்பெற்ற இறை இரக்கச் செய்தியை எளிய மக்களுக்கே கடவுள் முதலில் அறிவித்தார். அப்போது நடந்த நிகழ்வுகளை வரிசையான முறையில் நமக்குத் தந்திருக்கிறது புனித விவிலியம்.

யூதர்கள் எல்லாரும் தங்களுடைய சொந்த ஊருக்குப் போய் தங்களது பெயரையும் குடும்ப விவரங்களையும் மக்கள் தொகையைக் கணக்கெடுக்கும் அரசு அதிகாரிகளிடம் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்று அன்றைக்கு ரோமப் பேரரசின் அரசனாக இருந்த அகஸ்டஸ் (கி.மு.63 முதல் கி.பி.14 வரை) கட்டளையிட்டார்.

இயேசுவின் பெற்றோரான யோசேப்பும் மரியாளும் பெத்லகேமுக்குக் கிளம்பினார்கள். காரணம், யோசேப்பின் சொந்த ஊர் பெத்லகேம். ஆனால், அங்கே அவருக்கென்று வீடு இல்லை. அப்போது மரியாள் நிறைமாதப் பேறு காலத்தில் இருந்தார்.

மரியாளை ஒரு கோவேறுக் கழுதையில் அமர்த்திக் கொண்டு யோசேப்பு கால்நடையாக பெத்லகேமுக்கு சென்றபோது, அந்த சிறு நகரம் அதன் பூர்விகக் குடிகளால் நிரம்பி வழிந்தது. இதனால் யோசேப்பும் மரியாளும் தங்குவதற்கு எங்கும் இடமில்லை. ஒரு கருணை மிகுந்த மனிதர், ‘நீங்கள் விரும்பினால் எனது மாட்டுத் தொழுவத்தில் தங்கிக்கொள்ளுங்கள்’ என்றார். அதை அன்புடன் ஏற்றுகொண்டு அங்கேயே தங்கினார்கள்.

வானில் புதியதொரு விண்மீன் தோன்ற, மார்கழிக் குளிருக்கு நடுவே மரியாள் இறைமகன் இயேசுவைப் பெற்றெடுத்தார். அவர் அந்தக் குழந்தையை மெல்லிய துணிகளில் சுற்றி, அந்தத் தொழுவத்தில் வசிக்கும் மாடுகள், கழுதைகள், ஆடுகளுக்கு உணவு வைக்கிற தீவனத் தொட்டியில் மெதுவாகப் படுக்க வைத்தபின் தம் தாய்மைக்கு பெருமை சேர்த்த தேவ மைந்தனை வணங்கினார். அதைக் கண்ட யோசேப்பும் அந்த அரிய நிகழ்வில் உன்னதம் உணர்ந்து குழந்தையை வணங்கினார்.

மார்கழிக் குளிருக்கு மத்தியில்.. இயேசு பிறந்திருந்த இடத்திலிருந்து சில கல் தொலைவில் இருந்த புல்வெளிகளில் சில மேய்ப்பர்கள் இரவு நேரத்தில் தங்கள் மந்தையைக் காவல் காத்துக்கொண்டு அங்கேயே கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தார்கள். திடீரென்று, ஒரு தேவதூதர் அவர்கள் முன்னால் வந்து நின்றார். அப்போது அந்த மேய்ப்பர்களைச் சுற்றி கடவுளாகிய தந்தையின் ஒளி பிரகாசித்தது. மேய்ப்பர்கள் மிகவும் பயந்து நடுங்கினார்கள்.

தங்களது சக்திக்கு மீறிய ஒன்று அங்கே நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து கத்தினார்கள். தேவதூதர், அவர்களை அமைதிப்படுத்தினார். அவர்கள் தெளிவு பெற்றார்கள். அவர்களிடம் “பயப்படாதீர்கள், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல வந்திருக்கிறேன். மெசியா (உலகின் மீட்பர்) இன்று பெத்லகேமில் பிறந்திருக்கிறார். உடனே போய் அவரைப் பாருங்கள்” என்று சொன்னார். உடனே, அவரைப் போன்ற தோற்றம் கொண்ட பல தேவதூதர்கள் வானத்தில் தோன்றி, “வானுலகில் இருக்கிற கடவுளுக்குப் புகழ் சேரட்டும், பூமியில் சமாதானம் உண்டாகட்டும்” என்று சொன்னார்கள். பிறகு, அவர்கள் மறைந்துவிட்டார்கள்.

தங்கள் வாழ்நாளில் இப்படியொரு காட்சியை காண்போம்; தேவ செய்தியைப் பெறுவோம் என்று எண்ணியிராத அந்த மேய்ப்பர்கள் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து.. “வாருங்கள், உடனே பெத்லகேமுக்குப் போகலாம்” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு.. மந்தைகளை அப்படியே விட்டுவிட்டு வேகமாக அங்கிருந்து புறப்பட்டுப் போய் தெய்வக் குழந்தையைத் தேடினார்கள்.

ஒரு தொழுவத்தில் யோசேப்பையும் மரியாளையும் குழந்தையையும் அவர்கள் பார்த்தபோது, தேவதூதர் சொன்ன விஷயங்களைப் பற்றி மரியாளிடமும் யோசேப்பிடமும் பகிர்ந்துகொண்டதுடன், அந்தப் புலர் காலையில் கண்ணில்பட்ட பெத்லகேம் வாசிகளிடம் சாட்சியமாகச் சொன்னார்கள். அதைக் கேள்விப்பட்ட மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காகத் திரும்பிப் போனார்கள். தாங்கள் கேட்டதையும் பார்த்ததையும் நினைத்து கடவுளாகிய தந்தைக்கு நன்றி சொன்னார்கள். கன்னி மரியாளோ தேவதூதர் தனக்குச் சொன்ன வார்த்தைகள் குறித்து நன்றாக யோசித்துப் பார்த்தார். கடவுள் வாக்களித்தபடியே மண்ணுலகத்துக்கு தன் மகனை அனுப்பி வைத்தார். அவரது பிறப்பு வரலாற்றின் முக்கிய நிகழ்வாக மாறியது. - ஆர்.சி. ஜெயந்தன், jesudoss.c@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in