

‘அன்னையைப் போல் ஒரு தெய்வ மில்லை’ என்கிற கவி கா.மு. ஷெரீப்பின் வரி, மனிதகுலத்தின் தலைசிறந்த மதீப்பீடுகளில் ஒன்றை எடுத்துக் காட்டுகிறது. ஏனென்றால், அன்னைக்கு நிகர் அன்னை மட்டுமே! அவளுக்கு மாற்றீடு என்பதே கிடையாது.
அன்னையின் அன்பை, அவளது மாண்பினை அவ்வளவு எளிதாக வார்த்தைகளில் வடித்திட முடியாது. அவள் தனது வலிகளை, துயரங்களை உளமாற ஏற்றுக்கொண்டு தன் குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கண்டு மனம் நிறைபவள்.
அவ்வாறே அன்னை மரியாள் தன்னை வருத்திய ‘ஏழு துயரங்க’ளை தன் மாசற்ற மனத்திலே ஏந்திக்கொண்டு, இப்பூவுலக மனிதர்களின் நல வாழ்வுக்காகத் தாம் கருவில் சுமந்து ஈன்ற உலகின் மீட்பராம் இயேசுவின் தூய இதயத்திடம் பரிந்து பேசுபவராகத் திகழ்கிறார்.
அதனால்தான், தாய் திருச்சபையாகிய கத்தோலிக்க கிறிஸ்தவம், அன்னை மரியாளுக்கு அதி உன்னதமான இடத்தை அளித்திருக்கிறது. இறை இயேசுவின் தாய், திருச்சபையின் தாய், மனிதகுலத்தின் தாய் என இயேசுவுக்கு அடுத்த இடத்தில் வைத்து விசுவாசிக்கிறது.
காட்சிகளும் கருணையும்
கிறிஸ்தவ இறையியல் வரலாற்றில், அன்னை மரியாள் இறைத் தாழ்ச்சி, இறை விசுவாசம் ஆகியவற்றின் முன்மாதிரியாகவும் புனிதர்களில் முதன்மையானவராகவும் ஆதித் திருச்சபையின் நிறுவனராகவும் சீடத்துவ வாழ்க்கையின் இலக்கணமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
கிறிஸ்தவத்துக்கு வெளியே, மதம் கடந்த தாய் தெய்வ வழிபாட்டில் தன்னை நாடிவரும் மக்களுக்கு இறைமகனிடமிருந்து கருணையைப் பெற்றுப் பொழியும் அமல உற்பவமாக உலகம் முழுவதும் விளங்குகிறார். போர்கள், புலப்பெயர்வு, பிணிகள், வறுமை, புறக்கணிப்பு என எல்லாத் துயரங்களிலிலிருந்தும் மீண்டு எழ, ‘ஜெபமே சிறந்த தவம்’ என்று தன்னுடைய ‘திருக் காட்சிகள்’ வழியாக மனித குலத்துக்கு வலியுறுத்தி வந்திருக்கிறார்.
அன்னை மரியாள், உலகின் பல்வேறு இடங்களில் தோன்றிக் காட்சியளித்த நிகழ்வுகள் முதல் நூற்றாண்டு முதலே பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவரது ஒவ்வொரு காட்சியும் இறைவனின் ஒரு செய்தியை வழங்கியிருக்கும். அதேநேரம், ஜெபம் எனும் கருவியைக் குறிப்பிடத் தவறவில்லை. மனத்தூய்மையும் இறைத் தாழ்ச்சியும் கொண்டவர்களுக்கு அன்னை மரியாள் தோன்றிக் காட்சியளித்த இடங்களில் பிரான்ஸ் நாட்டின் ‘லூர்து’ உலகப் பிரசித்திபெற்று விளங்குகிறது.
பிரான்ஸ் நாட்டின் பிரனே மலையடிவாரத்தில் அமைந்திருந்த சிறிய கிராமம், பின்னாளில் உலகப் புகழ்பெற்ற லூர்து நகராக மாறும் என்று யாரும் கற்பனைகூடச் செய்திருக்க மாட்டார்கள்.
அது 1858ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள். பிரனே மலை அடிவாரத்தின் ஒரு பகுதியில் ஒருவர் மட்டுமே ஒதுங்கி நிற்கும் அளவுக்கு இடம் கொண்ட சிறிய குகை போன்ற பகுதி அது. அதன் அருகே தன்னுடைய சகோதரியுடனும் தன் வயதையொத்த பக்கத்து வீட்டுத் தோழியோடும் விறகு சேகரித்துக்கொண்டிருந்தாள் பெர்னதெத் சூபிரூஸ் என்கிற 14 வயது சிறுமி. அன்றைய தினத்தில் தொடங்கி அடுத்தடுத்த நாட்களில் அவளுக்கு 18 முறை காட்சிகொடுத்தார் அன்னை மரியாள்.
கீழ்த்திசையின் லூர்து!
‘கீழ்த்திசை நாடுகளின் லூர்து’ எனப் பெருமை பொங்க அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் 16ஆம் நூற்றாண்டில் அன்னை மரியாள் இருமுறை காட்சியளித்த நிகழ்வு, போர்த்துக்கீசிய கடல் வணிகர்களால் வெளியுலத்துக்குத் தெரியவந்தது. சீனத்தின் மக்காவ் துறைமுகத்திலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்ட போர்த்துக்கீசியர்களின் பாய்மரக் கப்பலில் நூற்றுக்கும் அதிகமான வணிகர்கள் பயணித்தனர்.
அப்போது கடும் புயலை எதிர்கொண்ட அவர்கள், உயிர்பிழைத்தால் போதும் என்று அன்னை மரியாளை நோக்கி அழுது ஜெபித்தார்கள். அவர்களது ஜெபம் அன்னையால் கேட்கப்பட்டது. புயலிலிருந்து மீண்ட அவர்களது கப்பல் பத்திரமாகத் தரைதட்டி நின்ற இடம் வேளாங்கண்ணி என்கிற குக்கிராமம்.
உயிர்பிழைத்த மகிழ்ச்சியுடன் உணவையும் தண்ணீரையும் தேடி கரைநோக்கி ஓடிவந்த அவர்களை, சிறு குளத்தின் அருகே எழுப்பட்டிருந்த அன்னை மரியாளின் சிற்றாலயம் வரவேற்றது. ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோன அவர்கள், அந்தக் குளக்கரையில் பால்காரச் சிறுவனுக்குக் குழந்தை இயேசுவுடன் மரியன்னை காட்சியளித்த நிகழ்வைப் பெருமைப்படுத்த நாகை செல்வந்தர் ஒருவரால் அந்த ஆலயம் எழுப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்கிறார்கள்.
தாங்கள் கரையொதுங்கிய நாள் அன்னையின் பிறந்த தினம் (செப்டம்பர் 8) என்பதையும் அறிந்து வியக்கிறார்கள். தங்களது கப்பலின் கொடி மரத்தை அங்கேயே விட்டுச் சென்ற அவர்கள் வெகு விரைவாகத் திரும்பி வந்து, ஆலயமாக அதைக் கட்டியெழுப்பினார்கள். கட்டுமானம் நிறைவடைந்ததும் குழந்தை இயேசுவைச் சுமந்திருக்கும் அன்னையின் உருவத்தையும் அவர்கள் பிரதிஷ்டை செய்தார்கள்.
ஆலயம் எழுப்பி முடித்த மகிழ்வை அடுத்து வந்த அன்னை மரியின் பிறந்த நாளில் பெரும் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தையும் அவர்களே தொடங்கி வைத்தனர். தங்களது நன்றியறிதலைத் தொடர்ந்து செலுத்துவதற்காக அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் வேளாங்கண்ணிக்கு வருகை தந்து ஆலயத்தைப் பொலிவுபடுத்தத் தொடங்கினார்கள்.
புனித விவிலியத்தின் பழைய, புதிய ஏற்பாட்டிலுள்ள முக்கிய நிகழ்ச்சிகள் விவரணைச் சித்திரங்களாகப் பதிக்கப்பட்ட சீனத்தின் பீங்கான் ஓடுகளைக் கொண்டுவந்து ஆலயத்தின் பீடத்தில் பதித்தனர். அந்த பீங்கான் ஓடுகள், பசிலுகா பேராலயமாக எழுந்து நிற்கும் வேளாங்கண்ணியின் பீடத்தில் இன்றைக்கும் வரலாற்றின் ஒரு பகுதியைத் தாங்கி நிற்கின்றன. கொடி மரமும் பாதுகாக்கப்பட்டுவருகிறது.
நாடிவரும் அனைவருக்கும்…
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் அன்னை வேளாங்கண்ணிப் பேராலய பெருவிழா செப்டம்பர் 8ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். இந்தியாவில் மட்டுமன்றி உலகெங்கிலுமிருந்து 10 லட்சம் பக்தர்கள் இந்தப் பத்து நாட்களில் அன்னையிடம் வரம் வேண்டியும் பெற்ற வரத்துக்கு நன்றி செலுத்தவும் வந்து செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மதவேறுபாடுகளைக் கடந்து அன்னையின் குழந்தைகளாக அவரைத் தேடி வருபவர்கள்.
குழந்தையின்மை, திருமணத் தடை தொடங்கி, நோய்களிலிருந்து விடுதலை வேண்டி மனச்சுமையோடு வருகிறவர்கள் வரை அவரை நாடிவரும் அனைவருக்கும் நலம் தந்து அனுப்புகிறாள் வேளை நகரின் ஆரோக்கியத் தாய்.
மாட்சிமை மிகுந்த மரியாளின் கருணைப் பிரவாகம் ஊற்றாக வழிந்தோடும் மாதா குளத்தையும் அதன் அருகில் அமைந்துள்ள பழைய வேளாங்கண்ணி ஆலயத்தையும் மறக்காமல் தரிசிக்கும் பக்தர்களுக்கு, வானளாவ எழுந்து நிற்கும் விண்மீன் ஆலயம் உள்ளிட்ட புதிய வழிபாட்டிடங்களும் இன்றைய நவீன வேளாங் கண்ணியில் மனம் நிறைந்த ஆன்மிக அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருக் கின்றன.