இந்தியா 75 | கலைக்குப் பங்களிப்பைச் செலுத்திய கலைஞர்கள்

இந்தியா 75 | கலைக்குப் பங்களிப்பைச் செலுத்திய கலைஞர்கள்
Updated on
4 min read

சுதந்திர இந்தியாவில் கலைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துவரும் அமைப்புகள் தனிப்பட்ட ஆளுமையின் மூலமாகக் கலைக்குப் பங்களிப்பைச் செலுத்திய கலைஞர்களைப் பற்றிய சிறு பதிவு:

தமிழிசைச் சங்கம்

தமிழர்களின் காதுகள் இரும்புக் காதுகளாகிவிட்டன என்றார் பாரதியார். காரணம் எந்த இசை மேடையிலும் தமிழ்ப் பாடல்கள் ஒலிக்கவில்லை என்னும் ஆதங்கத்தால் இப்படிக் கூறினார்.

தமிழ்நாட்டில் தமிழிசைப் பாடல்கள் பரவலாகப் பாடப்பட வேண்டும், அதற்கான மேடை அமைத்துத் தரவேண்டும் என்னும் உந்துதல் அன்றைக்குப் பலரிடமும் இருந்தது. அதற்குச் செயல்வடிவம் கொடுத்தவர் ராஜா சர் அண்ணாமலை.

டாக்டர் ஆர்.கே.சண்முகம், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, கல்கி, டி. கே. சி., சி. என். அண்ணாதுரை உள்ளிட்டோரின் ஆதரவுடன் தமிழிசைச் சங்கம் 1943-ல் சென்னையில் உருவாக்கப்பட்டது.

கலைஞர்களுக்கான மேடையை அமைத்துக் கொடுப்பதோடு, தமிழிசைக் கலைஞர்களையும் உருவாக்கும் பொறுப்போடு 1944-ல் ஓர் இசைக் கல்லூரியும் தொடங்கப்பட்டது. ராஜா சர் அண்ணாமலை சங்கத்தின் நிர்வாகத்திலும், இசை நூல்கள் வெளியிடுதல் போன்றவற்றிற்காகவும் பெரும் பொருளை வழங்கியுள்ளார்.

இந்தச் சங்கத்தில் பண் ஆராய்ச்சி, இசை நிகழ்ச்சிகள், தமிழிசையை வளர்க்கும் கலைஞர்களுக்கு இசைப் பேரறிஞர் உள்ளிட்ட விருதுகள் அளிக்கப்படுகின்றன. தொல் இசைக் களஞ்சியமும் நூலகமும் இந்த வளாகத்தில் உள்ளன.

டி.என்.ராஜரத்தினம் பிள்ளை

நாகசுவர மேதை டி.என்.ராஜரத்தினம் தன்னுடைய தனிப்பட்ட ஆளுமையால் நாகசுவர வாசிப்பில் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார்.

அந்தக் காலத்தில் நாகசுவரம் வாசிப்பவர்கள் மேலாடை அணியாமல் வாசிப்பதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால் டி.என்.ஆர். சர்வ அலங்காரத்துடன் நாகசுவரம் வாசிப்பார். அதனாலேயே அவருக்கு இசை உலகில் `மாப்பிள்ளை' என்கிற செல்லப்பெயர் இருந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் டி.என்.ஆரின் மங்கல இசையும் ஒலித்தது. சர்வ அலங்காரத்துடன் நாகசுவரம் வாசித்த டி.என்.ஆரைப் பார்த்த பண்டிட் நேரு, “நீங்களும் ஏதோ சமஸ்தானத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்” என நினைத்துக் கொண்டேன் என்றாராம்.

நாகசுவரத்தின் அளவிலும் ஸ்ருதி வேறுபாட்டிலும் கலைஞர்களுக்குப் பெரும் சிரமத்தை அளித்துவந்த திமிரி நாகசுவரத்துக்கு மாற்றாக தற்போது புழக்கத்தில் இருக்கும் பாரி நாகசுவரத்தை இசை உலகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமை டி.என்.ஆரையே சாரும்.

டி.என்.ஆர். வாசித்த தோடி ராகத்தை ஏவி.மெய்யப்பன் பதிவு செய்து, ஆறரை மணி நேர ஒலிப்பேழையாக வெளியிட்டார். தன்னுடைய நாகசுவர நிகழ்ச்சிகளுக்கு வயலினைப் பக்கவாத்தியமாகப் பயன்படுத்தியதும் இசை உலகில் இவரின் மிகப் பெரும் சாதனை.

மியூசிக் அகாடமி

இந்தியாவின் பாரம்பரியமான கர்னாடக இசை, பரதநாட்டியம் ஆகியவற்றோடு இந்தியாவின் பல்வேறு கலை வடிவங்களில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் பிரபல கலைஞர்கள், இளம் தலைமுறை கலைஞர்கள் ஆகியோரின் கலையை வளர்ப்பதற்கான மேடையை வழங்குவதை லட்சியமாகக் கொண்டு 1928ம் ஆண்டில் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு.

முறையாக பாரம்பரியமான கர்னாடக இசை இங்கு கற்பிக்கப்படுகிறது. இசைத் துறையில் இந்த அமைப்பு வழங்கும் சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, நிருத்ய கலா நிதி, நாட்டிய கலா ஆச்சார்யா உள்ளிட்ட விருதுகள் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

பெங்களூர் நாகரத்னம்மா

பெங்களூர் நாகரத்னம்மா கர்நாடக மாநிலம் மைசூரில் தேவதாசி மரபில் பிறந்தவர். இசை, நடனம், சம்ஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், தமிழ் மொழிகளிலும் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்திய கலைஞர் இவர். வரலாற்று ரீதியாக இரண்டு முக்கியமான ஆளுமைகளுக்குத் தன்னுடைய வாழ்நாளில் பெரும் செல்வத்தை அந்நாளிலேயே செலவழித்துள்ளார்.

சுந்தரத் தெலுங்கில் புரட்சிகரமான சிந்தனைகளை வெளிப்படுத்தும் பாடல்களை எழுதிய பெண்மணியான முத்துப்பழனியின் பாடல்களை மிகுந்த சிரமத்துக்கு இடையே சேகரித்து அதற்கு நூல் வடிவம் கொடுத்தார்.

இறைவன் மீதான ஈர்ப்பைக் காதலுடனும் காமத்துடனும் வெளிப்படுத்திய அந்தப் பாடல்கள் ஆபாசமாக இருக்கிறதென்று புத்தகம் தடை செய்யப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகே அந்த நூல் (ராதிகா சந்தவனம்) வெளியாகி அந்தப் பெண் கவிஞரின் புகழ் உலகத்துக்குத் தெரிந்தது. அடுத்து, தியாக பிரம்மம் தியாகராஜரின் சமாதியைச் சுற்றி ஒரு மண்டபத்தை திருவையாறில் எழுப்பினார்.

கே.பி.சுந்தராம்பாள்

கொடுமுடி கோகிலம் என்று புகழப்பட்டவர் கே.பி.சுந்தராம்பாள். காத்திரமான தன்னுடைய பாடும் திறமையால் நாடக மேடையில் நடிக்கத் தொடங்கி பின் திரைப்படங்களில் நடிப்பிலும் பாடுவதிலும் தனி முத்திரையைப் பதித்தவர். நாடகங்களில் பெரும்பாலான ஆண்களே ஸ்த்ரீபார்ட் எனச் சொல்லப்படும் பெண்வேடமிட்டு நடித்துவந்த காலத்தில், `நல்லதங்காள்' நாடகத்தில் ஆண் வேடமிட்டு தன்னுடைய நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கியவர் சுந்தராம்பாள்.

முதல் நாடகத்திலேயே பாடி நடித்த இவரின் திறமை கண்டு நாடக உலகம் வியந்தது. நாடக உலகைத் தொடர்ந்து திரை உலகமும் சுந்தராம்பாளின் திறமையைப் பயன்படுத்திக் கொண்டது.

நந்தனார், ஔவையார், காரைக்கால் அம்மையார் போன்ற கதாபாத்திரங்களில் அவரின் தோற்றமும் அவர் பாடிய பாடல்களும் இன்றைக்கும் எவராலும் மறக்கமுடியாத அனுபவத்தைத் தருபவை. பக்திக்கு முக்கியத்துவம் கொடுத்த அதே நேரம், தேசப்பற்றுள்ள பாடல்களையும் நிறைய பாடினார்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த கலைஞரான அவர் கதர் ஆடை ஆதரவுப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு, பிரிட்டிஷாரின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போன்றவற்றைத் தன்னுடைய கலை வாழ்க்கை முழுவதும் எதிரொலித்தார். காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் கே.பி.சுந்தராம்பாள் இருந்திருக்கிறார்.

நவாப் ராஜமாணிக்கம்

நாடகக் கலைஞர் நவாப் ராஜமாணிக்கம் தாம் நடித்த நாடகங்களில் எல்லாம் தேசப் பற்றை புகுத்தியவர். மதுரை தேவிபாலா விநோத சங்கீத சபா என்னும் குழுவின் மூலம் பல தேச பக்தி நாடகங்களை அரங்கேற்றியவர்.

கோயம்புத்தூரில் இவரின் அழைப்பை ஏற்று நந்தனார் நாடகத்தைக் கண்டு ரசித்த மகாத்மா காந்தி, "கலையின் மூலமாகத் தேசத்துக்கு சிறந்த பலனை உங்களால் அளிக்க முடியும் என்று நம்புகிறேன்" என்று பாராட்டியிருக்கிறார்.

காந்தியின் மீது அபரிமிதமான பக்தியையும் அன்பையும் கொண்டிருந்த நவாப் ராஜமாணிக்கம், அவரின் மறைவுக்குப் பிறகு பிறந்த தன்னுடைய மகளுக்கு `சந்திரகாந்தி' என்று பெயரிட்டார்.

தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா அரங்கத்தில் 1947 ஆகஸ்ட் 14 இரவு `தசாவதாரம்' புராண நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார் நவாப். நேரம் நள்ளிரவு 12 மணியை நெருங்குவதற்குப் பத்து நிமிடம் இருக்கும்போது, இந்தியாவின் வரைபடத்தை மேடையின் பின்னணியில் கொண்டுவந்து, தாமரைப் பூவில் நம்முடைய பாரத அன்னையின் கைகளில் விலங்கு பூட்டப்பட்டு நிற்க, சரியாக 12 மணிக்கு அன்னையின் கைவிலங்குகள் துண்டிக்கப்பட்டு, இந்தியாவின் விடுதலையை நாடக மேடையில் காட்சியாக தத்ரூபமாகக் கொண்டு வந்தது அரங்கில் இருந்தவர்களை ஆனந்தக் கூத்தாட வைத்தது.

புராண நாடகத்தில் அதற்கு சிறிதும் சம்பந்தமில்லாத காட்சியாக இருந்தாலும் தேசப் பற்றின் காரணமாக வரவேற்பு பெருகவே, அந்த நாடகம் நடந்த மற்ற நாட்களிலும் இந்தக் காட்சி நடத்தப்பட்டது. இதன் காரணமாகவே ரசிகர்களால் நவாப் ராஜமாணிக்கம் `சுதந்திர நாடக மணி' என்று கொண்டாடப்பட்டார்.

தொகுப்பு: வா.ரவிக்குமார்

சங்கீத நாடக அகாடமி

தேசிய அளவில் கலைகளை ஊக்குவிக்கவும் கலைஞர்களை கௌரவிக்கவும் தொடங்கப்பட்ட அமைப்பு சங்கீத நாடக அகாடமி. இந்திய அரசின் கலைப் பண்பாட்டு அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அமைப்பாக கடந்த 1953 முதல் இது செயல்படுகிறது.

மாநிலங்களுக்கிடையே செயல்படும் நாடக, இசை, நடனம் சார்ந்த அகாடமிகளோடு ஒருங்கிணைப்பு, பிராந்திய கலைகள், கலைஞர்களுக்கிடையே கலாச்சாரப் பகிர்வை உண்டாக்குதல், இயல், இசை, நாடகம் தவிர நாட்டார் கலைகளைப் பாரம்பரியமாக நிகழ்த்திவரும் கலைஞர்களின் கலைகளை ஆவணப்படுத்துதல், கலைகளை நிகழ்த்துவதற்கான மேடைகளை அளித்து ஆதரவளிப்பது, கலைகள் தொடர்பான புத்தகங்களை வெளியிடுவது, கலைக் களஞ்சிய நூலகங்களைப் பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்கிறது.

அரிதான கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்கான பணிகளில் கலைஞர்களை ஒருங்கிணைப்பதில் மிகப் பெரிய பங்களிப்பை இந்த அமைப்பு கடந்த 1953 முதல் செய்துவருகிறது. துறை சார்ந்த கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாடமி விருது எனும் பெருமை மிகுந்த விருதையும் இந்த அமைப்பு அளிக்கின்றது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in