

வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றுங்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
என திருநாவுக்கரசரால் புகழ்மாலை சூட்டப்பட்ட சிவபெருமான் வல்லபநாதராக அருள்பாலிக்கும் கோயில் அமைந்துள்ள ஊர் திருப்பூவனூர்.
திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகேயுள்ள சிற்றூர் இது. இந்த திருப்பூவனூரில் அருள் பாலிக்கும் சிவபெருமான் சதுரங்க வல்லபநாதர் என்னும் திருப்பெயரால் வணங்கப்படுகிறார்.
சர்வதேச செஸ் போட்டியை நடத்துவதன்மூலம் உலகின் பார்வை இந்தியாவை நோக்கி திரும்பியிருக்கின்றது. இந்தியாவின் பாதைகள் அனைத்தும் தமிழகத்தின் மாமல்லபுரத்தை நோக்கித் திரும்பியிருக்கின்றன.
இந்தியாவில் விளையாடப்பட்ட விளையாட்டே, சில மாறுதல் களுடன் தற்போதுள்ள செஸ் விளையாட்டாக ஆடப்படுகிறது. ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்பே போர்க்களத்தின் வியூகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டு ஆடப்பட்டதற்கான சரித்திரச் சான்றுகள் கிடைத்துள்ளன. இந்தத் தருணத்தில் புராண ரீதியாக செஸ் விளை யாட்டுக்கும் நம் மண்ணுக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்கின்றது திருப்பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்.
திருவிளையாடலால் நடந்த திருமணம்
பன்னெடுங் காலத்துக்கு முன்னர் திருப்பூவனூரை ஆட்சி செய்த மன்னரின் மகள் ராஜராஜேஸ்வரி சதுரங்க விளையாட்டில் எவருமே வெற்றி கொள்ள முடியாத திறனோடு விளங்கினார்.
சதுரங்க விளை யாட்டில் வெற்றிகொள்பவருக்கே தன்னுடைய மகளை திருமணம் செய்துவைப்பதாக அறிவித்திருந்தார் மன்னர். எவராலுமே மன்னர் மகளை வெற்றி பெறமுடியவில்லை. ஆண்டுகள் உருண்டோடின. மன்னர் மனக் கவலையோடு சிவபெருமானை பிரார்த்தித்தார்.
சிவபெருமான் சித்தர் உருவில் வந்து ராஜராஜேஸ்வரியோடு சதுரங்கம் விளையாடி வெற்றி பெற்றார். சிவபெருமானுக்கும் பார்வதியின் அவதாரமான ராஜ ராஜேஸ்வரிக்கும் திருமணம் இனிதே நடந்தது. மணப் பெண்ணுக்கு தோழியாகவும் உதவியாகவும் இருப்பதற்கு பிறந்த வீட்டிலிருந்து ஒரு பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்புவர்.
அப்படி பிறந்த வீட்டிலிருந்து ராஜ ராஜேஸ்வரிக்கு துணையாக அனுப்பப்பட்ட சாமூண்டீஸ்வரிக்கும் இந்த கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது. இந்த ஆலயத்தின் தல வரலாறு இதனை விளக்குகிறது. திருநாவுக்கரசர் பெருமான் இந்த ஆலயத்தைக் குறித்து பாடியிருக்கி றார் என்பதால் தேவாரப் பாடல் பெற்ற தலம் என்னும் பெருமையும் இதற்கு உண்டு.