பிரம்மதேசம்: ஒரே வளாகத்தில் ஐந்து சிவாலயங்கள்!

பிரம்மதேசம்: ஒரே வளாகத்தில் ஐந்து சிவாலயங்கள்!
Updated on
3 min read

ஒரே வளாகத்தில் முழுமையான கோயில் அமைப்பில் ஐந்து சிவாலயங்களை உருவாக்கி யுள்ளனர் என்பதைக் கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடனா நதிக்கரையில் அமைந்துள்ள அற்புதமான திருத்தலம் பிரம்ம தேசம். சிவன் கோயிலுக்குத் தானமாக விடப்படும் நிலங்கள் தேவதானம் என்கிற பெயரிலும், இறைவனுக்குப் பூசை செய்யும் வேதியர்க்குக் கொடுக்கப்படும் நிலதானம் பிரம்மதேயம் என்றும் அழைக்கப்படுவது மரபு.

இவ்வாறு நிலக் கொடைக்குரிய பெயரே ஊரின் பெயராக அழைக்கப்படுவது சிறப்புடையது. அதுவே இந்த ஊரின் பெயராக அமைந்துள்ளது. 1000 ஆண்டுகளாக இப்பெயரே மாறாமல் நீடித்து வருகிறது.

தமிழர்கள் சிற்பக் கலையில் உன்னத மான நிலையை அடைந்திருந்தனர் என்பதற்கு மூலவர் கைலாசநாதர் சந்நிதி கட்டுமானமே சிறந்த எடுத்துக்காட்டு. பலம் பொருந்திய மதில்கள் நாலா பக்கமும் உயர்ந்து நிற்கின்றன. கோயிலின் முன்பு தென்புறம் நெல் குத்துப் பிறை என்கிற மிகப் பெரிய கல்மண்டபம் உள்ளது.

ஏழு விமானங்கள்

மூலக்கோயில் சோழர் கால கட்டமைப்பில் உள்ளது. எனவே வட் டெழுத்துக் கல்வெட்டுக்கள் பல இங்கு உள்ளன. ஏழுநிலை ராஜகோபுரம், ஐந்துநிலை கோபுரம், மூன்றுநிலை கோபுரம் ஆகியவற்றுடன் ஏழு விமானங்கள் உள்ள பெருமையும் கொண்டது.

அதுபோல, சிவாலயங்கள் ஐந்து, நடராஜர் சந்நிதி மூன்று, தமிழ் நாட்டில் அரிதினும் அரிதாக உள்ள கங்காளநாதர் சந்நிதி, சோமவார மண்டபம், திருவாதிரை மண்டபம் என சிற்பக் கலையின் உச்சத்தை எடுத்துச் சொல்லும் வகையில் இவை ஒன்றாக இங்கு அமைந்துள்ளன.

பிரம்மதேசத்தில் சிவன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் இந்த சந்நிதியில் கங்காளநாதரைப் பரிவார தேவதைகள் பலரும் சூழ நின்று வணங்கி நிற்பது வேறெந்தத் தலத்திலும் நாம் காண முடியாத காட்சி. பூதகணங்கள் வாத்தியம் இசைப்பது தத்ரூபமாக சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன.

ஊரின் வடக்கே, விரிந்து பரந்த அளவில் கிழக்குப் பார்த்த வண்ணம் அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. நவ கைலாசத் திருக்கோயில்களில் பிரம்மதேசம் சூரியனுக்குரிய முதலாவது தலம் என்று திருக்குற்றாலத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரம்ம தீர்த்தம்

பிரம்மதேசத்தில் ஓடும் கடனா நதியானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி கைலாசநாதரை வலம் வருவதால், காசித்தலத்திற்கு நிகரான புண்ணியம் இங்கும் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இங்குள்ள மூலவர் மேல் காலை உதய வேளையில் தினமும் சூரியக் கதிர்கள் பட்டு இறைவன் பொன்மயமாக ஜொலிப்பது வழக்கம்.

கோயிலின் எதிரே வடக்கே மிகப்பெரிய தீர்த்தக் குளம் நடுநாயகமாக நீராழி மண்டபத்துடன் எழிலாக அமைந்துள்ளது. பிரம்மன், சிவபெருமானை வழிபட்டு இங்கு தீர்த்தம் ஏற்படுத்தியதால், இத்தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

கோயிலுக்குள் நுழைந்ததும் தெற்கே சைவத்தை நிலைநிறுத்திய நால்வர் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதி எதிரே பலிபீடம், நந்திதேவர் செப்புக் கவசம் போர்த்திய கொடிமரம் ஆகியவை பிரம்மாண்டமாக அமைந்துள்ளன.

கொடிமர உச்சிமேல் கல்லில், தொங்குகிற கல்சங்கிலியில் மணி அமைந்துள்ளது, அரிய சிற்பப் படைப் பாகும். இதனையடுத்து சுவாமி சந்நிதி நுழைவாயிலில் சித்தி விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.

பிச்சாடனர் சபை

நந்தி மண்டப வடப்புறம் கலைநய மிக்க திருவாதிரை மண்டபம் உள்ளது. திருவாதிரை மண்டபத்திற்கு முன்பு கால பைரவர் சந்நிதியும், பிட்சாடனர் சபையும் உள்ளது. சிவன் பிரம்மதேசத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

இந்த கங்காளநாதர் சந்நிதியின் நடுநாயகமாக சிவபெருமானும் அவரது பரிவார தேவதைகளும், சந்திரன், சூரியன் முதலிய நவகிரகங் களும் நாரதர், தும்புரு, அகத்தியர் முதலிய ரிஷிகளும், அக்னி, வாயு, எமன், அஷ்டதிக்கு பாலகர்கள் முதலிய சகல தேவதைகளும், பூதகணங்களும் ஏக காலத்தில் வாத்தியங்களை முழக்கியவாறு, தத்தம் வாகனங்களில் சிவனை வணங்கியபடி காட்சியளிக்கின்றனர். இந்த பிட்சாடனர் சபை கோயிலின் தனிச்சிறப்பாகும்.

பிரணவத்துக்குள் பெருமான்

சுவாமிக்கும், அம்பாளுக்கும் தனித்தனிக் கோயில்கள் இங்குள்ளன. முகமண்டப வடப்புறம் புனுகு சபாபதி என்கிற ஆடல்வல்லான் சந்நிதி உள்ளது. சமீப காலம் வரை இப்பெருமானுக்குப் புனுகு சாத்தி வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. எனவே, இக்கூத்தருக்குப் புனுகு சபாபதி என்கிற காரணப்பெயர் வந்தது.

இப்பெருமான் `ஓம்' என்கிற பிரணவத்தின் உள்ளே அமைந்தது போல் காட்சி தருகிறார். அருகில் சிவகாமி, காரைக்கால் அம்மையார், பதஞ்சலி, வியாக்ரபாதா ஆகியோர் உள்ளனர். எதிர் வரும் ஆனி உத்திர நாளிலும் இப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஆண்டு முழுவதும் இந்த கூத்தப் பெருமான் சந்தனக்காப்பில் காட்சியளிக்கிறார்.

சோமாஸ்கந்தர் அமைப்பு

கருவறை மூலவராக கைலாசநாதர் சாந்நித்தியமிக்க தெய்வமாக எழுந்தருளி யுள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதி உள்சுற்று திருமாளிகை அமைப்பில் மண்டபமாக கட்டப்பட்டுள்ளது. உள்சுற்றில் சப்தகன்னியர், ஜுரகரதேவா், 63 நாயன்மார்கள், மகிஷாசுரமர்த்தினி, விநாயகர் சந்நிதிகள் உள்ளன.

சுவாமி சந்நிதியின் இடதுபுறம் அம்பாள் பெரிய நாயகி சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது. இரண்டு சந்நிதிகளுக்கும் மத்தியில் பாலசுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. எனவே இக்கோயில் சோமாஸ் கந்தர் என்னும் அமைப்பில் உள்ளது.

சுவாமி சந்நிதியில் இருந்து அம்பாள் சந்நிதி செல்லும் வழியில் ஆதி சுயம்பு மூர்த்தியான இலந்தையடிநாதர் சந்நிதி உள்ளது. இந்த இறைவனை நம்பிக்கை யோடு நாடி தலவிருட்ச கனியான இலந்தைப் பழத்தை உண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சுவாமி கோயிலையும் அம்மன் சந்நிதியையும் இணைக்கும் பாதையாகவும், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்துவதற்கு ஏதுவாகவும் சோமவார மண்டபம் அமைந்துள்ளது. அதன் இருபுறமும் உள்ள தூண்களில் பீமன், புருஷா மிருகம், வாலி, சுக்ரீவன், தர்மன், துரியோதனன், மன்மதன் - ரதி போன்ற பல புராணக் கதைகளை நினைவூட்டும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

நாலாயிரத்தம்மன்

தனிக் கோயிலாகக் கிழக்குப் பார்த்தபடி அமைந்துள்ள பெரியநாயகி அம்பாள் சந்நிதிக்குள் வடப்புறம் சரசுவதி, தெற்கே காவல் தெய்வமான நாலாயிரத்தம்மனின் உற்சவர் சந்நிதிகள் உள்ளன. மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்கிற அமைப்பில் உள்ள இச்சந்நிதியில் அம்பாள் பெரியநாயகி வலக்கையில் கருநெய்தல் பூ ஏந்தியும், இடக் கையைத் தொங்கவிட்டபடியும் காட்சியளிக்கிறாள்.

தை மாதம் நாலாயிரத்தம்மனுக்குக் கொடை விழா நடத்தப்படுவது சிறப்பம்சம். ஆடி கடைசி வெள்ளிக்கு முந்திய வெள்ளியன்று சுவாமி, அம்பாள், நந்தி, நாலாயிரத்தம்மனுக்கு ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அம்பாள் சந்நிதி உள்சுற்று திருமாளிகை அமைப்பில் மண்டபமாக கட்டப்பட்டுள்ளது.

வெளிச்சுற்றில் காசி விசுவநாதர், சுந்தரேசுவரர், அண்ணா மலையார் ஆகிய சந்நிதிகள் முழுக் கோயிலாக அம்பாள் சந்நிதிகளுடன் அமைந்துள்ளன.

ஆக, 5 சிவாலயங்களில் ஒவ்வொரு தமிழ்மாதப் பிறப்பினை முன்னிட்டு கோ பூஜை, கணபதி ஹோமம், திருவிளக்கு வழிபாடு நடைபெறும். அமாவாசைதோறும் கங்காளநாதருக்கும் பெளர்ணமி தோறும் பெரியநாயகிக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

புரட்டாசியில் நவராத்திரி உற்சவம் 10 நாட்கள் கொலுவுடன் நடைபெறும். ஐப்பசி உத்திரத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். பங்குனி உத்திரத்தில் பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறும். கார்த்திகை மாதம் எல்லா சோமவாரங்களிலும் 108 சங்காபிஷேக வழிபாடு நடைபெறும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in