

தியாகத் திருநாளில் வெறுப்பை அன்பால் வெல்வோம் ஒவ்வோர் ஆண்டும் பன்னிரண்டாவது இஸ்லாமிய மாதமான ‘துல்ஹஜ்’ஜின் பத்தாவது நாள் அன்று பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படு கிறது.
இதன்படி, இந்தியாவில் இந்த ஆண்டு ஜூலை 10 அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக ‘ஹஜ் பெருநாள்’ அல்லது தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் அந்தப் பண்டிகை உலக அளவில் ‘ஈத் அல்-அதா’ என்றே அழைக்கப்படுகிறது. ‘ஈத் அல்-அதா’ என்பது அரேபிய சொல் பதம். தியாகத் திருநாள் என்பது அதன் அர்த்தம்.
வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் மெக்காவை நோக்கிய புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமியர்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் ஐந்து கடமைகளில் ஒன்று. ஹஜ் பயணத்தின் முடிவில் எல்லாம்வல்ல இறைவனுக்காக குர்பானி கொடுக்கப்படும். பொதுவாக அந்த நாளே தியாகத் திருநாளாக இருக்கும்.
கொண்டாடும் முறை
சிறப்புமிக்க தியாகத் திருநாள் அன்று உலகெங்கும் இருக்கும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகைகளில் பங்கேற்பர். தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வற்றை இறைவனின் பெயரால் பலியிடுவர். பலிகொடுக்கப்படும் அந்த விலங்கின் இறைச்சியை மூன்று பங்குகளாகப் பிரிப்பர். அதில் முதல் பங்கை ஏழைகளுக்குக் கொடுப்பர். இரண்டாம் பங்கை அண்டை வீட்டாருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுப்பர். மூன்றாம் பங்கை தங்கள் தேவைக்குப் பயன்படுத்துவர்.
இப்ராஹிம் நபியின் இறைக் கொள்கை
இன்றைய ஈராக்கில் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு இப்ராஹிம் நபிகளார் வாழ்ந்தார். அவர் ஓர் இறைத் தூதர். அவர் காலத்தில் அங்கே கொடுங்கோல் ஆட்சி நடந்து வந்தது. அத்தகைய ஆபத்தான சூழலிலும், அச்சம் துளியுமின்றி இறைக் கொள்கையை ஓங்கி முழங்கியவர் அவர்.
உலகின் பல நாடுகளுக்குப் பயணம் செய்து அன்பின் உன்னதத்தையும், இறைவனின் மேன்மையையும் எடுத்துரைத்தார். இறைவனுக்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்து வாழ்ந்தவர் அவர். தூய்மையான இறைப்பற்றுக்கும், அசைக்க முடியாத இறை நம்பிக்கைக்கும் அவருடைய வாழ்க்கையே இன்றும் சான்றாக உள்ளது.
இஸ்மாயில் நபியின் உதயம்
இப்ராஹிம் நபிக்கு இரண்டு மனைவிகள். இருந்தும், நெடுநாட்க ளாக அவருக்குக் குழந்தை இல்லை. குழந்தை இல்லை என்கிற ஏக்கத்தில் மனம் வருந்திய அவருக்கு இறைவன் கருணை காட்டினான். இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி ஹாஜரா அம்மையார் மூலம் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தைக்கு இஸ்மாயில் எனப் பெயிரிடப்பட்டது. இஸ்மாயில் நபி எனப் பின்னர் அறியப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அரேபியர்கள். குழந்தையின் வருகைக்குப் பின்னர், இப்ராஹிம் நபிகளாரின் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. இறைவனின் மீதான பற்றோ முன் எப்போதையும்விட அதிகரித்தது.
இறைவனின் கட்டளை
ஒரு நாள் இரவு கனவில், அவருடைய மகனைத் தனக்குப் பலியிடுமாறு இறைவன் கட்டளையிட்டான். திடுக்கிட்டு விழித்த அவர் தாங்க முடியாத துயரில் ஆழ்ந்தார். தான் கண்ட கனவை மகனிடம் கூறினார். மகனோ, இறைவனின் கட்டளையை உடனே நிறைவேற்றுமாறு கூறினார். மகனின் மீதான நேசத்தைவிட இறைவன் மீதான பற்றே பெரிது என முடிவு செய்தார். மனத்தைத் திடப்படுத்தி இறைவனின் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்.
கண்ணைத் துணியால் கட்டி, மகனைப் பலியிட எத்தனித்தபோது, சிஃப்ரயீல் என்னும் வானவரை இறைவன் அனுப்பிவைத்தான். இஸ்மாயில் பலியிடப்படுவதைத் தடுத்த இறைவன், அங்கே ஓர் ஆட்டையும் இறக்கிவைத்தான். மகனுக்குப் பதிலாக அந்த ஆட்டை பலிகொடுத்து, அதன் இறைச்சியை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்குமாறு இறைவன் கட்டளையிட்டான்.
இறைவனின் கருணை
இறைவனுக்காக எவ்விதக் கேள்வியுமின்றி மகனைப் பலியிடத் துணிந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தைப் போற்றும் விதமாக ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. முக்கியமாக, தன்னை நம்புபவர்களின் மீது இறைவன் பொழியும் அளவற்ற அன்பை நினைவுகூரும் பண்டிகை இது.
இந்த ஈகைத் திருநாளில் ஆட்டை மட்டுமல்லாமல்; நம்முள் இருக்கும் பேராசையையும் நாம் பலி கொடுப்போம். பொறாமையைத் தியாகம் செய்வோம். ஆடம்பரத்தை ஒதுக்குவோம். நாம் அனைவரும் ஒன்றுகூடி. உலகெங்கும் அதிகரித்துவரும் வெறுப்பை அன்பால் வெல்வோம். இன்றைய சூழலில், மகிழ்ச்சியான ஒரு சமுதாயத்தை உருவாக்கும் கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு இறைவனின் அருளை இந்த நன்னாளில் வேண்டுவோம்.