

பெரும்பாலான கோயில்களில் உள்ள துவாரபாலகர்கள் கதாயுதத்தின் மீது ஒரு காலை ஊன்றியபடி காட்சிதருவார்கள். ஆனால், இவர் மட்டும் வித்தியாசமாகப் பெரிய திரிசூலத்தின் மீது காலை ஊன்றியபடி காட்சிதருகிறார். இவரது தலையலங்காரம் வித்தியாசமாக உள்ளது. ஜடாமுடியும் சுருள்சுருளாகத் தலைக் கேசமும், அழகிய கிரீடமுமாகக் காணப்படுகிறார். காதுகளில் சிம்மத்தின் உருவம் பதித்த பெரிய குழையை அணிந்துள்ளார். பின்னணியில் சுருண்ட தலைக் கேசமும் அழகாக அணிசெய்கிறது. இடக் காதோரம் ஒரு நாகம் எட்டிப் பார்க்கிறது. மார்பில் அழகிய அணிமணிகள் மற்றவர்களில் இருந்து வேறுபட்டுக் காட்சியளிக்கிறது. தோள்பட்டையில் சிம்மத்தின் உருவம் பதித்த வங்கிகளும், கைகளில் வளையல்களும் அருமையாக உள்ளன. இது சோழர்களின் படைப்பு என்பதை இவை பறைசாற்றுகின்றன.
இவர் இடுப்பைச் சற்றுச் சாய்த்து வலக் காலைத் தரையில் ஊன்றியபடி, இடக் காலைச் சூலாயுதத்தின் மீது வைத்தபடி, கால் பெருவிரலைத் தனியாகச் சற்று உயர்த்தி ஆஜானுபாகுவாகவும் கம்பீரமாகவும் இருப்பது தனிச் சிறப்பு. காவலாளிகளுக்கே உரித்தான பரந்த தோள்களும் உடற்கட்டும் பராக்கிரமமும் முகத்தில் உக்கிரமும் நெற்றிக் கண்ணும் குறைவின்றி இச்சிற்பத்தில் அமைந்துள்ளன. மார்பில் முப்புரிநூல் பூமாலை போன்று காணப்படுகிறது. அதுவும், இடையில் உள்ள ஆடைகளும் காற்றில் பறப்பதுபோல் சிற்பியின் கை வண்ணத்தில் மிளிர்கிறது. வலக் கையில் திரிசூலமும், இடக் கையை மேல்நோக்கி விரல்களை விரித்தபடி, ‘நமக்கெல்லாம் மேலான இறைவன் உள்ளே இருக்கிறான்’ என்பதை உணர்த்துவதுபோல் இருக்கிறது. இவர் இருப்பது முசுகுந்து சோழனால் கட்டப்பட்ட பூங்கோயில் எனப்படும் திருவாரூர் பெருங்கோயிலில்தான்.