

இறை நம்பிக்கை கொண்டவர்களே பூமியில் அதிகமாக இருக்கிறார்கள். ‘பரம்பொருள்’ என்று அழைக்கப்படும் ஏக இறைவன் மீது மனதுக்குள் பலருக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால், அவருடன் பிரார்த்தனை எனும் கருவி வழியாகத் தொடர்புகொள்ள அவர்கள் விரும்புவதில்லை. காரணம் இதுதான்:
‘நமக்கு என்ன தேவை, நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறோம் என எல்லாம் அறிந்த இறைவனுக்குத் தெரியாதா? பிறகு, நாம் எதற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்?’ என்று இவர்கள் கேட்கிறார்கள். இப்படிக் கேட்பதும் கடவுள் நம்பிக்கை இருந்தும் பிரார்த்தனையைப் புறக்கணிப் பதும் சரியல்ல என்கிறது புனித விவிலியம்.
நட்பு என்பது மனதில் இருந்தால் போதும், நண்பர்களோடு பேச வேண்டிய அவசியமில்லை என்று நாம் நினைத்திருக்கி றோமா? இல்லை! நண்பர்களுடன் அடிக்கடி பேசாவிட்டால் மனதளவில் நாம் அவர்களைவிட்டு விலகி வந்துவிட்டதாக நினைப்போம் அல்லவா? இறைவனும் நாம் அவருடைய நண்பர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எடுத்துக்காட்டாக ‘ஏரேமியா’ புத்தகம் அதிகாரம் 29-ல் 12 முதல் 14 வரையிலான வசனங்களைப் படியுங்கள்:
‘நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள். என்னிடம் வந்து வேண்டிக் கொள்வீர்கள். நான் அதைக் கேட்பேன். நீங்கள் என்னை முழு இதயத்தோடு நாடித் தேடுவீர்கள்; அதனால், என்னைக் கண்டடைவீர்கள். என்னைக் கண்டடைய நான் உங்களுக்கு உதவுவேன்' என்று விண்ணுலகத் தந்தை சொல்கிறார்.
கடவுளிடம் பிரார்த்தனை வழியாக நாம் அடிக்கடி பேசினால், அவர் அதைக் கேட்பது மட்டுமல்ல; நம்மிடம் நெருங்கி வருவார் என்று சொல்கிறார் யாக்கோபு. திருப்பாடல்கள் 145-வது பாடலின் 18-வது வரியைக் கவனியுங்கள்: ‘விண்ணுலகத் தந்தை தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார். உண்மையோடு தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார்’ என்று கூறுகிறது. ஆக, பிரார்த்தனை வழியாக, நாம் அவருடன் பேசப் பேசத்தான் அவர் நம்மை நோக்கி நெருங்கி வருவார் என்பதை விவிலியம் எடுத்துக்காட்டுகிறது.
அவ்வளவு ஏன்? இறைமகன் இயேசு சொல்வதைப் பாருங்கள்: “உங்களில் எந்தத் தகப்பனாவது, தன் மகன் ரொட்டியைக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பாரா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பாரா? நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, உங்கள் பரலோகத் தந்தை தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றை இன்னும் எந்த அளவுக்குக் கொடுப்பார்!” (மத்தேயு 7:9-11) என்று மக்கள் முன்பாகப் போதித்தார். இறைவன் ‘உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்’ என்று இயேசுவின் சீடராகிய பேதுரு கூறியிருக்கிறார்.
அருட்பணியாளரான பிலிப்பியர்: ‘எதைப் பற்றியும் கவலைப் படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன் கூடிய ஜெபத்தினாலும் மன்றாடியும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள்’ என்று திட்டவட்டமாக, தனது மனச்சான்றிலிருந்து எடுத்துக் கூறுகிறார். கடவுளை நண்பராக்கிக்கொள்ள, பிரார்த்தனை எனும் மிகச் சிறந்த கருவியைப் பயன்படுத்துவோம்.
தொகுப்பு: ஜெயந்தன்