

பாடல்கள் எழுதுவதற்கென்று தனியாக இலக்கணம் இருப்பதால்தான் இசைத் தமிழ் என்று வழங்கப்படுகிறது. இறைவனோடு தங்களுக்கு ஏற்பட்ட அன்பு, காதல், ஊடல் எனப் பல உணர்வுகளையும் அனுபவங்களையும் பக்திபூர்வமான பாடல்களாக்கிய மகான்கள் பலர் நிறைந்திருக்கும் தேசம் நம்முடையது. பாட்டின் கருத்தில் மட்டுமல்ல உருவத்திலேயே தேரை நம்கண்முன் தரிசனப்படுத்திய வல்லமை ஆன்மிக நெறி பரப்பிய நம்முடைய அருளாளர்களுக்கு இருந்திருக்கிறது. சைவம், வைணவம் என இரண்டு நெறிகளிலும் இத்தகைய கவிகள் உள்ளதை வரலாற்றின் மூலமாக அறியலாம்.
உடனடியாகப் பாடல் புனையும் திறன் படைத்தவர்களை ஆசுகவி என்பர். இதுபோல் நம் இலக்கணத்தில் பல கவிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. மதுர கவி, வித்தார கவி, சித்திர கவி அவற்றில் சில. இவற்றில் சித்திர கவி எனப்படுவது, பாடலின் வரிகள், வார்த்தைகளைக் கொண்டே தேரைப் போன்ற தோற்றத்தை உருவாக்குவது. இதற்கு `ரத பந்தம்' என்று பெயர்.
திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்களை அவரின் தந்தை சிவபாதவிருதயர் பாராயணம் செய்வது வழக்கம். ஒருசமயம், அவர், சம்பந்தரிடம், எல்லோரும் பலன் பெறும் வகையில், சிறிய வடிவில் தேவாரப் பாடல்களைக் கேட்டார். அவரது விருப்பப்படி சம்பந்தரும் திருவெழுக் கூற்றிருக்கையை இயற்றி அருளினார் என்பார்கள்.
அருணகிரிநாதர் சுவாமிமலை முருகன் மீது `ஓருருவாகிய தாரகப் பிரமத்து’ எனத் தொடங்கும் ரத பந்தப் பாடலை எழுதியிருக்கிறார். இந்த திருஎழு கூற்றிருக்கைப் பாடலை சலவைக்கல்லில் பொறித்து, சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலிலும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலிலும் முருகன் திருவருட் சங்கத்தினர் பதித்துள்ளனர்.
`எழு கூற்றிருக்கை' என்பது பிரபந்த வகைகளில் ஒன்றாகும். இவ்வகை கவிகள் அநேகமாக இறைவனையும், இறை அருளையும் கருப்பொருளாக வைத்துப் பாடப் படுவதால் ‘திரு’ என்ற அடைமொழி சேர்த்து திருஎழு கூற்றிருக்கை என்று சொல்வது மரபாயிற்று.
திருமங்கை ஆழ்வாரால் மகா விஷ்ணுவின் அவதாரப் பெருமையையும் விசிஷ்டாத்வைதத்தின் தத்துவத்தையும் விளக்கும் திருவெழு கூற்றிருக்கை 46 வரிகளில் எழுதப்பட்டிருக்கிறது. திருவிக்கிரம அவதாரமான வாமன அவதாரத்தின் சிறப்பைச் சொல்லும் வகையில், `ஒருமுறை ஈரடி மூவுலகு அளந்தானை…’ எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடலின் வரிகளைப்
படிக்கும்போது, இந்த வரிகளுக்கு உரிய எண்களைக் கொடுத்து அடுக்கினால், நம் கண்முன்னால் பிரம்மாண்டமான 7 அடுக்குத் தேர் உருவெடுத்து நிற்பதை உணரமுடியும். இப்படிப்பட்ட ரத பந்தம் முறையில் ஞான சம்பந்தப் பெருமான், அருணகிரிநாதர், திருமங்கை ஆழ்வார், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற பலரும் பாடியுள்ளனர்.
ஒரு ரதம் அல்லது தேரின் முகப்பு குறுகி இருப்பதைப் போல், இந்த வகை பாடலின் கூற்றுகளும் (முதல் அடுக்கில் ஒரு கூற்று, இரண்டாவது அடுக்கில் 1-2-1 என்று விரியும். ஏழு அடுக்குக்குப் பிறகு கூற்றுகள் 6, 5 எனக் குறைந்து இறுதியில் 1 கூற்றில் முடியும்) அமையும். இந்த அமைப்பே ரத பந்தம் பாடல்களுக்கான அடிப்படை. ஆனால் இப்படிப்பட்ட பாடல்களைப் புனைவதற்கு அபரிமிதமான இசை ஞானமும் புலமையும் தேவை என்பதற்கு அரிதாகக் கிடைத்திருக்கும் சில பாடல்களே சாட்சி.