

ஆதரவற்ற ஒரு ஆணையோ, பெண்ணையோ துன்புறுத்தத் துடிக்கும் கும்பலை எதிர்கொண்ட இக்கட்டான ஒரு தருணம் இயேசுவின் வாழ்விலும் வந்தது.
ஆலயத்தில் இயேசு மக்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்த வேளையில் மறைநூலைக் கற்றுத் தேர்ந்திருந்த மறைநூல் அறிஞரும் யூதச் சட்டத்தை மிகக் கவனமாய் அனுசரித்த பரிசேயரும் ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு வந்து, நடுவே அவர் முன் நிறுத்தி, “போதகரே, முறையற்ற பாலுறவுச் செயலில் ஈடுபட்ட போது கையும் களவுமாகப் பிடிபட்டவள் இவள். இத்தகையோரைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பதே யூதச் சட்டம். நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர்.
அவர்கள் இயேசுவின் கருத்தைக் கேட்டதற்கு என்ன காரணம்? பொறாமையாலும் பகையாலும் இயேசுவைக் கொல்லவேண்டும் என்று தீர்மானித்துவிட்ட அவர்கள் அந்த முடிவை நியாயப்படுத்த அவர் மீது ஏதாவது குற்றம் சுமத்தப் பார்த்தனர்.
இந்தச் சிக்கலில் அவரைச் சிக்க வைத்து விட்டால், அவர் என்ன சொன்னாலும் அதை வைத்தே அவர் மீது குற்றம் சுமத்தலாம் என்று மனக்கணக்குப் போட்டனர். ‘சட்டத்தைப் பொருட்படுத்தாதீர்கள். இப்பெண்ணைப் போக விடுங்கள்' என்று சொன்னால் அவர் யூதச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டலாம். ‘சட்டம் சொல்வதுபோல கல்லெறிந்து இவளைக் கொல்லுங்கள்' என்று இயேசு சொன்னால், ‘இந்தக் கல்நெஞ்சக்காரனைப் பார்த்தீர்களா? எப்போதும் இரக்கம், அன்பு என்று பேசித் திரியும் இம்மனிதனை நம்பாதீர்கள்!' என்று பேசலாம். இதனால் இரண்டில் எதைச் சொன்னாலும் இயேசு மாட்டிக் கொள்வார் என்று அவர்கள் நம்பினர்.
ஆனால் இயேசுவின் கவனம் எல்லாம் அந்த அபலைப் பெண்ணை இரக்கமில்லாத இந்தக் கூட்டத்திடம் இருந்து எப்படிக் காப்பது என்பதில்தான் இருந்திருக்கும்.
பைபிளின் பழைய ஏற்பாட்டில் மிகச் சுவாரசியமான நிகழ்வு ஒன்று இருக்கிறது. சூசன்னா என்று ஒரு பேரழகி இருந்தாள். அவள் யோவாக்கிம் என்ற செல்வந்தரின் மனைவி. இருவருமே இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்த நல்லவர்கள். யோவாக்கிமைத் தேடி வந்த மக்கள் கொண்டு வந்த வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புச் சொல்ல இரு முதியவர்கள் நடுவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் காம வெறியர்கள் என்பதைப் பலர் அறிந்திருக்கவில்லை.
மறைந்திருந்த பாதகர்கள்
சூசன்னாவின் அழகில் மயங்கி, அவளைத் தங்களுக்கு இணங்கவைக்க சரியான சந்தர்ப்பத்திற்காக அவர்கள் காத்திருந்தனர். வெப்பம் அதிகமாக இருக்கும் நாட்களில் அவள் வீட்டுத் தோட்டத்தில் நீராட வருவாள் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே முன்பே தோட்டத்துக்குப் போய் ஒரு மரத்தின் பின்னே அவர்கள் ஒளிந்துகொண்டனர். தோட்டத்துக்கு வந்த சூசன்னாவும் அவளது இரு பணிப்பெண்களும் இவர்களைப் பார்க்கவில்லை. இப்படி இருவர் தோட்டத்தில் ஒளிந்திருக்கக்கூடும் என்று அவர்களுக்குத் தோன்றவே இல்லை.
அவள் நீராட எண்ணெயும் நறுமணப் பொருட்களும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, அவள் சொன்னவாறே தோட்டத்துக் கதவைப் பூட்டிவிட்டு, பணிப்பெண் கள் போனபிறகு அந்தக் கயவர்கள் இருவரும் ஓடி வந்து, “எங்கள் இச்சைக்கு நீ இணங்காவிட்டால், பணிப்பெண்களை அனுப்பிவிட்டு, தோட்டக் கதவைப் பூட்டிவிட்டு ஒரு இளைஞனோடு நீ இங்கே உறவு கொண்டாய் என்று குற்றம் சுமத்துவோம்” என்றனர்.
சூசன்னா சத்தம் போட்டுக் கத்த, அந்த இரு கயவர்களும் கத்திக் கூச்சல் போட்டனர். வீட்டில் இருந்து ஓடி வந்தவர்களிடமும், மறுநாள் அவளின் கணவரோடு கூடியிருந்த மக்களிடமும் வயதான அந்த இரு கயவர்களும் தாங்கள் கற்பனை செய்த இந்தக் கட்டுக்கதையைக் கூறினர். அதனை மறுத்த சூசன்னா எல்லாம் அறிந்த இறைவனிடம் தன்னைக் காக்குமாறு உரத்த குரலில் வேண்டினாள். ஆனால் அவள் ஒருத்தி. அவளைக் குற்றம் சாட்டியவர்களோ இரண்டு பேர். அதுவும் மக்களின் வழக்குகளைக் கேட்டு தீர்ப்பு வழங்கும் நடுவர்களாக இருந்தனர். எனவே அவர்கள் இருவரும் சேர்ந்து சொன்ன கதையை உண்மையென்று நம்பி, அவள் சாக வேண்டும் என மக்கள் கூட்டம் தீர்ப்பளித்தது.
இறைவனிடம் மன்றாடிய சூசன்னா
கொலைக்களத்துக்குப் போகும் வழியிலும் சூசன்னா கதறி அழுது, தன்னைக் காக்குமாறு இறைவனிடம் மன்றாடினாள். இறையருள் இறங்கிய தானியேல் என்னும் இறைவாக்கினர், மக்கள் கூட்டத்தை நிறுத்தி தீர்ப்புச் சொன்ன இடத்திற்கே திரும்பப் போகுமாறு சொன்னார். வழக்கை ஆராயாமல், உண்மையை அறிந்துகொள்வதற்கு மெனக்கெடாமல் அவசரப்பட்டு, குற்றமற்ற ஒரு பெண்ணைக் கொல்லவிருந்த அந்த கூட்டம் எதுவும் புரியாமல் திரும்பிச் சென்றது. பொய் சொன்ன கயவர்கள் இருவரையும் பிரித்து வெவ்வேறு இடங்களில் வைத்திருக்குமாறு சொன்னார் தானியேல். பின்பு அவர்களில் ஒருவனை மட்டும் அழைத்து, “எந்த மரத்தடியின் கீழ் சூசன்னாவும் அந்த இளைஞனும் கூடியிருக்கக் கண்டாய்?” என்று கேட்டார். அவன் “விளா மரத்தடியில்” என்றான். அவனை அவன் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றபிறகு, மற்றவனை வரவழைத்து அதே கேள்வியைக் கேட்டார். அவன் “கருவாலி மரத்தின் அடியில்” என்றான்.
தங்களுடைய கொடூரமான குற்றத்தை மறைப்பதற்காக அவர்கள் சொன்ன பொய்யைப் புரிந்துகொண்ட மக்கள் அவர்களைத் தண்டித்தனர். சூசன்னாவைக் காத்த கடவுளைப் போற்றினார்கள்.
முதல் கல்லை எறியட்டும்
ஆணை விட்டுவிட்டு பெண்ணை மட்டும் இழுத்து வந்திருக்கிறீர்களே, குற்றம் செய்த இருவரில் ஒருவரை விட்டுவிட்டு இன்னொருவரை மட்டும் தண்டிப்பது நியாயமா என்று இயேசு கேட்டு இருக்கலாம். ஆனால் இவை விவாதங்களையும் வேற்றுமைகளையும் வளர்க்குமே தவிர, அவளைக் காக்கப் போவதில்லை. அதனால்தான் அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து “உங்களுள் பாவம் இல்லாதவர் இப்பெண் மீது முதல் கல் எறியட்டும்” என்றார் இயேசு.
இயேசுவைச் சிக்க வைக்கலாம் என்று அவரையும், அப்பெண்ணைக் கொன்றுவிடலாம் என்று அவளையும் பார்த்தவர்களை தங்களுக்குள்ளேயே பார்க்க வைத்ததுதான் இயேசுவின் வெற்றி. ‘எதற்காக இப்பெண்ணைக் கொல்ல வேண்டும் என்று கேட்கிறேனோ, அதுபோன்ற குற்றம் நான் செய்யாததா?' என்று அங்கிருந்த ஒவ்வொருவரையும் தன்னைப் பார்க்க வைத்தார் இயேசு.
கும்பல் யோசிப்பதில்லை. அதில் உள்ளோர் சிந்தித்து, சுயமாகச் செயல்படுவதில்லை. அதனால்தான் கும்பலுக்கு என்றே உள்ள உளவியல் (mob psychology) பற்றி அறிஞர்கள் பேசுகின்றனர். அதனால்தான் தன்னல நோக்கங்களுக்காக வெறியூட்டும் சிலரின் பொய்களுக்கு இவர்கள் பலியாகி விடுகின்றனர். இந்தப் பெண்ணைப் போன்று பலிகடா ஆக்கப்பட்டு, ஆதரவின்றி மாட்டிக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் ‘இவன் தானே நான்? என்னைப் போன்றவன் தானே இவன்?' என்று நினைக்கத் தொடங்கினால் போதும். அந்தக் கூட்டத்தினரின் கைகளிலிருந்து கற்கள் விழுந்தது போல, நம் மனதிலிருக்கும் வெறியும் வெளிவேடமும் விழுந்துவிடும்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com