இயேசுவின் உருவகக் கதைகள் 13: அழைத்தும் வராதவர்கள்

இயேசுவின் உருவகக் கதைகள் 13: அழைத்தும் வராதவர்கள்
Updated on
2 min read

ஒரு பெரிய மனிதர் தன் வீட்டில் நிகழ்ந்த விருந்துக்கு இயேசுவை அழைத்திருந்தார். விருந்து உண்ணச் சென்ற இயேசு அங்கே நடப்பதையெல்லாம் பார்த்துவிட்டு இந்தக் கதையைச் சொன்னார்.

தலைவர் ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடுசெய்து பலரை அழைத்தார். விருந்துக்கான நாளும் நேரமும் வர, அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் அனைவரையும் அழைத்துவர தன் பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் அழைக்கப்பட்ட அனைவரும் ஏதோ சாக்குப்போக்குச் சொல்லி விருந்துக்கு வர மறுத்தனர்.

ஒருவர், “புதிதாக வாங்கியுள்ள வயலைப் பார்க்க வேண்டும். எனவே, விருந்துக்கு வர இயலாது” என்றார். இன்னொருவரோ, “வாங்கியுள்ள ஐந்து உழவு மாடுகளை நான் ஓட்டிப் பார்க்க வேண்டும் என்பதால் வர இயலவில்லை” என்றார். மற்றொருவர் தனக்கு இப்போது தான் திருமணம் ஆகியுள்ள நிலையில், விருந்துக்கு வர இயலாது என்றார்.

அழைக்கப்பட்ட அனைவரும் இப்படி சாக்குப்போக்குச் சொல்லி விருந்துக்கு வர மறுப்பதைப் பணியாளர் சென்று கூறினார். தலைவர் சினம் கொண்டு நகரத்தின் வீதிகளிலும், சந்துகளிலும் வாழும் ஏழை எளியோர், பார்வைத் திறனற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் அழைத்து வருமாறு பணியாளரிடம் சொல்ல, அவர் அதனைச் செய்தார். அவர்கள் எல்லாம் வந்த பிறகும் இடம் எஞ்சி இருக்க, நடைபாதைகளில் வாழ்வோரையும் ஏழைகளையும் அழைத்து வருமாறு பணியாளாரிடம் தலைவர் கூறினார்.

‘அழைக்கப்பட்டிருந்தும் வர மறுத்தோர், ஒரு நாளும் தனது விருந்தைச் சுவைக்கப் போவதில்லை’ என்றார் தலைவர் மனம் கசந்து.

எதற்கு இந்த விருந்து?

இந்தக் கதையின் மூலம் இயேசு கற்பிக்க விரும்பியது என்னவாக இருக்கலாம்? தான் அளிக்கும் விருந்துக்கு எல்லோரையும் அன்புடன் அழைக்கிறார் இறைவன்.

விருந்து என்பது எது? மறு உலகில் இறைவனுடன் அவர் இல்லத்தில் வாழுகிற நிலைவாழ்வு - நிறைவாழ்வு. இவ்வுலகில் இறைவன் தரும் விருந்து எது? இறைவனே அனைத்தையும் ஆளுகின்ற இறையாட்சி. இதில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறார் இறைவன்.

இறைவன் தரும் இறையாட்சிப் பெருவிருந்தில் பங்கேற்க, நாம் என்ன செய்ய வேண்டும்? அன்பை மையமாகக் கொண்ட அறவாழ்வை வாழவேண்டும். இறைவனையும் சக மனிதரையும் அன்புசெய்ய வேண்டும். அன்பே நான் தருகின்ற புதிய கட்டளை என்றார் இயேசு. எனவே, அன்புக்கு எதிரான அனைத்தையும் கவனமாகத் தவிர்க்க வேண்டும். சாதி, மதப் பாகுபாடுகளுக்குப் பலியாகி விடாமல், அனைவரும் இறையாட்சி விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கும் கடவுளின் விருந்தினர்கள் என்பதை உணர்ந்து, சமத்துவம் பேண வேண்டும். எந்த அநியாயத்துக்கும் துணைபோகாமல் நீதி, நியாயம் காக்க வேண்டும். இப்படி வாழ்வோரே, இறையாட்சி என்னும் விருந்தில் பங்கேற்க முடியும்.

ஏன் மறுக்கிறார்கள்?

ஆனால், பலர் இந்த அழைப்பை மறுத்துவிடுவதற்கு காரணங்கள் என்னவாக இருக்கலாம்?

ஒருவர் அற வாழ்வு வாழாமல் இருப்பதற்கு புதிதாக வாங்கிய வயல்போல் சொத்து, பணம், உடைமைகள் காரணமாக இருக்கலாம்.

சிலர் அறத்தைத் துறப்பதற்குக் காரணமாக, முதலீடு செய்து வாங்கிய வற்றை வைத்துக்கொண்டு பணத்தைத் திரும்பப் பெறுகிற முயற்சிகளாக இருக்கலாம்.

சிலர் அறவாழ்வைக் கைவிட உறவுகள், பிணைப்புகள், பந்தங்கள் காரணமாக இருக்கலாம்.

கண்டிப்பாக விருந்தில் கலந்துகொள் வார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் அழைக்கப்பட்ட மனிதர்கள், ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி மறுத்துவிட, ஏழை எளியோர், மாற்றுத்திறனாளிகள், தெருவிலேயே குடித்தனம் நடத்தும் திக்கற்றோர் எல்லாம் அழைப்பை ஏற்று இறைவன் தரும் விருந்தில் கலந்துகொள்வதுதான் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. இறைவனது அழைப்பை ஏற்க விடாமல் தடுக்கும் பேராசைகள் ஏழை, எளியோர் வாழ்வில் இல்லா மல் இருக்கலாம். அறமும் அன்பும் நிறைந்த வாழ்வு இவர்களுக்கு எளிதில் கைகூடலாம்.

இயேசு சொன்ன இந்தக் கதை நமக்கு முன்வைக்கும் கேள்விகள் என்ன? நாம் இறைவனின் அழைப்பை ஏற்பவர்களா? அல்லது ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுப்ப வர்களா? அழைப்பை நாம் மறுத்தால், இழப்பு நமக்கா? இறைவனுக்கா?

(தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in