Published : 16 Jul 2020 09:43 AM
Last Updated : 16 Jul 2020 09:43 AM

இயேசுவின் உருவகக் கதைகள்: விலகுவோர் யார், உதவுவோர் யார்?

எம்.ஏ. ஜோ

யூதர்களின் சட்டத்தைக் கற்றுத் தேர்ந்த அறிஞர் ஒருவர் இயேசுவிடம், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். நிலைவாழ்வு என்றால் நிலைக்கும் வாழ்வு; முடிவில்லாத வாழ்வு; இறப்புக்குப் பின்னும் தொடரும் வாழ்வு. அக்கேள்விக்குப் பதில் சொல்லாமல், இயேசு அவரை இன்னொரு கேள்வி கேட்டார். “திருச்சட்ட நூல் என்ன சொல்கிறது?” அவர்தான் சட்ட அறிஞராயிற்றே! சரியான பதிலைச் சொன்னார். ‘கடவுளை முழுமையாக அன்பு செய். உன்னை அன்பு செய்வது போல, உனக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்’ என்று திருச்சட்ட நூல் சொல்வதாக அவர் கூறினார்.

“சரியாகச் சொன்னீர்” என்று அவரைப் பாராட்டிய இயேசு, “இந்தக் கட்டளையை நிறைவேற்றினால், நிலைவாழ்வு உமக்கும் கிட்டும்” என்றார்.

சட்ட அறிஞர் இன்னொரு கேள்வி கேட்டார்: “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத்தான் இயேசு, ‘நல்ல சமாரியன்’ கதையைச் சொன்னார்.

எருசலேமிலிருந்து எரிக்கோவுக்கு நடந்துசென்ற ஒருவரை, திருடர்கள் சிலர் பிடித்து, அடித்து, உதைத்து அவரிடம் இருந்ததையெல்லாம் பறித்துக்கொண்டு போய்விட்டார்கள். சாலையோரத்தில் அவர் குற்றுயிராகக் கிடந்தார்.

ஆலயத்தில் வழிபாட்டுச் சடங்குகளை நடத்தும் குரு ஒருவர் அவ்வழியே வந்தார். குற்றுயிராகக் கிடந்த மனிதரைக் கண்டும் காணாதது போல அவர் பாதையின் மறுபக்கம் நகர்ந்து போய் விட்டார். சிறிது நேரம் கழித்து, ஆலயப் பணியாளர் ஒருவர் வந்தார். இவரைப் பார்த்தாலும் பார்க்காதது போல இவரும் விலகிப் போய் விட்டார். அதன் பின் தான் அந்த சமாரியர் வந்தார்.

யூதர்களால் அக்காலத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட சமாரியர், குற்றுயிராகக் கிடக்கும் இந்த மனிதரைக் கண்டதும் இரக்கம் கொண்டு, அவர் காயங்களுக்கு மருந்திட்டு, தூக்கிக்கொண்டு ஒரு சாவடியில் தங்கவைத்து இரவுபகலாகக் கண்காணித்து, அவரின் உயிரைக் காத்தார்.

இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, “இந்த மூவரில், ‘உமக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்’ எனும் கட்டளையை நிறைவேற்றியவர் யார்?” என்று இயேசு சட்ட அறிஞரிடம் கேட்டார். “இக்கட்டான நிலையிலிருந்த அப்பாவி மனிதருக்கு இரக்கம் காட்டியவர் தான்” என்று சட்ட அறிஞர் சரியாகச் சொன்னார்.

இக்கட்டான நிலையிலிருக்கும் மனிதர்களை நாம் எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். விழி பிதுங்கி நிற்கும் விவசாயிகள், ஊரடங்கு நாட்களில் வேலை யின்றி, ஊதியமின்றி, சாப்பிட வழியின்றி, குழந்தை குட்டிகளையும் மூட்டை முடிச்சுகளையும் தூக்கி க்கொண்டு, வேகாத வெயிலில் நடந்துகொண்டே இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். இப்படி இக்கட்டான நிலையில் துன்புறும் மனிதரைப் பார்க்கிறபோது, விலகிச் செல்பவர்கள் யார், விரைந்து சென்று உதவும் நல்ல சமாரியர்கள் யார்?

அமெரிக்கக் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், தான் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் ஆற்றிய புகழ்பெற்ற உரையில் இதற்கு ஒரு பதில் உள்ளது. “இக்கட்டான நிலையில் இருப்பவரைக் கண்டதும், இவருக்கு இப்போது நான் உதவப் போனால், எனக்கு என்ன ஆகும்? என்று நினைப்போர் விலகிப் போய் விடுகிறார்கள். மாறாக, ‘இவருக்கு இப்போது நான் உதவவில்லை என்றால் அவருக்கு என்ன ஆகும்?’ என்று நினைப்போர், சமாரியரைப் போல உதவ விரைகிறார்கள். எப்போதும் தங்களைப் பற்றியே நினைப்போர் செய்யத் தவறும் உதவிகளை, துன்புறும் மனிதர்களைப் பற்றி நினைப்பவர் செய்கிறார்கள்.

சரி. “இறைவனை அன்பு செய். அடுத்திருப்பவரை அன்பு செய்” என்பது இருவேறு கட்டளைகளா? அல்லது ஒன்று தானா? கண்ணுக்கெதிரே துன்புறும் சக மனிதனை அன்பு செய்யாமல், கண்காணாத இறைவனை அன்பு செய்வது எப்படி?

(தொடரும்)

கட்டுரையாளர்,

தொடர்புக்கு : majoe2703@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x