

உஷாதேவி
யானைக் கூட்டத்தின் தலைவன் கஜராஜன் தன் சுற்றத்தோடு நதியில் நீராடிக் களித்து வந்தது. தினமும் நதியில் நீராடி, தாமரை மலரைக் கொய்து திருமாலுக்குச் சமர்ப்பித்து பூஜை செய்வது வழக்கம். இந்த இறைபக்தி, பூர்வஜென்ம பலனால் கஜராஜனுக்குக் கிட்டியது.
ஒரு நாள் நதிக்கு நீராடச் சென்றபோது குளித்து மலர் கொய்து திரும்புகையில் ஆற்றில் இருந்த முதலை, கஜராஜனின் காலைக் கவ்வியது. தன்னால் இயன்ற மட்டும் கஜராஜன், தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடியது.
உறவுக்கார யானைக் கூட்டங்களும், கஜராஜனை மீட்கப் போராடி ஓய்ந்துவிட்டன. இனி யாராலும் தன்னைக் காக்க முடியாது முதலையின்வாயில் போய்விடுவோம் என்று கலங்கி நின்ற நேரத்தில், கஜராஜனின் முற்பிறவி ஞானம் கை கொடுத்தது.
இறைவனை நோக்கிக் பிளிறியது. யார் உலகத்தைக் காப்பவரோ, ஆதிக்கெல்லாம் மூலமாகத் திகழ்பவர் யாரோ அவரே சரண் என்று கூவி அழைத்தது. “ஆதிமூலமே அபயம்” என ஓலமிட்டது. “ஆதிமூலமே, என் மூச்சுக்காற்றின் வெப்பம்பட்டு இத்தாமரை மலர் கருகுவதற்குள் என்னைக் காப்பாயாக” என்று அழைத்தது. இறைவனோ, உடனேயே கருட வாகனத்தின் மீது ஏறி வந்தார். தனது சக்கராயுதத்தை விரைந்து செலுத்தினார்.
முதலை மாய்ந்தது; கஜராஜன் காக்கப்பட்டான். முதலையும் சுதர்சனச் சக்கத்தால் மோட்சம் பெற்றது. ஐந்தறிவுள்ள கஜராஜனான யானை, ஆதிமூலம் யார் என்று தெரிந்து அழைத்தாற் போல, என் அறிவுக்கு நாராயணரே ஆதிமூலம் என்று தெரியும் ஞானம் இல்லாமல் போனேனே என்று புலம்பிக் கரைந்தாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com