

சிந்துகுமாரன்
ஆதியிலிருந்தே மனிதன் எதையோ தேடிக்கொண்டிருக்கிறான். ‘நான் ஏன் இங்கிருக்கிறேன்? இது என்ன இடம்? எப்படி இங்கு வந்தேன்? இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறேன்? இங்கிருந்து எங்கே போவேன்?’ என்பவை அவனது கேள்விகளாக இருக்கின்றன. எல்லோரும் அறிவுபூர்வமாக இந்தக் கேள்விகளைக் கேட்கவில்லைதான். ஆனாலும் உள்மன ஆழத்தில் இந்தக் கேள்விகள் எல்லோருக்குள்ளும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும் நோக்கத்தில்தான் மதங்கள் உண்டாகியிருக்கின்றன. எத்தனையோ கருத்துக்கள், சித்தாந்தங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்தும் உருவாகியிருக்கின்றன. இந்த முறைப்பாட்டைத் தன்னையறிதல், கடவுளைக் கண்டுகொள்ளுதல், உண்மையறிதல், ஆன்ம தரிசனம் என்று பல பெயர்கள் கொண்டு அழைக்கிறார்கள்.
உணர்ச்சி என்னும் தளத்தில் பக்தியாகவும், அறிவுத் தளத்தில் ஞானம் என்றும், உலக வாழ்க்கையில் கர்மம், அல்லது செயல்பாடு எனவும், அகக் கட்டமைப்பை உள்நோக்கிப் பார்த்துப் புரிந்துகொள்ளும் முயற்சிகளை யோகம் என்றும் வகுத்திருக்கிறார்கள்.
ஆனால், இவையெல்லாம் இருந்தும் வேறு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. எவ்வளவோ பேர் இந்த முயற்சிகளில் தம் வாழ்நாளில் நீண்ட காலத்தைச் செலவழித்தும் இந்த வரம் வசப்படாமல் போயிருக்கிறது. தான் தேடும் இந்த இலக்கைத் தம்மிடமிருந்து பிறிதான ஒன்றாகவே பெரும்பாலானோர் பார்த்துவந்திருக்கிறார்கள். இது நம்மிடமிருந்து வேறானதில்லை என்று பல தரிசிகள் சொல்லியிருந்தபோதிலும் இதைப் பெருமளவுக்குத் தனக்கு வெளியில்தான் தேடிவந்திருக்கிறார்கள். இந்த மனோபாவமே அவர்கள் தாம் தேடும் இலக்கைக் கண்டடைவதற்குப் பெரும் தடையாக இயங்குகிறது.
பொய்த்தேடல் விடுத்த அடக்கம்
இன்னுமொரு முக்கியமான தடை இருக்கிறது. நமக்கு உடல் இருக்கிறது; மனம் இருக்கிறது; இந்த இரண்டையும் இயக்கும் ‘நான்’ என்னும் சுயவுணர்வு இருக்கிறது. பெரும்பாலானோர்க்கு இந்தச் சுயவுணர்வு, மனத்தில் நினைவுப் பதிவுகளைச் சார்ந்திருக்கும் மனச்சுய (Ego) அமைப்பில் சிக்குண்டு இருக்கிறது. தன்னையே ‘நான்’ என்று நினைத்திருக்கும் மனச்சுயம் தேடலில் ஈடுபடுகிறது.
ஆன்மதரிசனம் காண விழைகிறது. இது சாத்தியமே இல்லை. இந்த மனச்சுயம் தன் பொய்த்தேடலை விட்டு அடங்கவேண்டும். அப்போதுதான் ‘நான்’ என்னும் சுயவுணர்வு மனச்சுய அமைப்பிலிருந்து விடுபட்டு வெளியே வர முடியும். அதுதான் தேடல் என்னும் ஆழமான விழைவில் ஈடுபடமுடியும். ‘நான்’ உடலோ மனமோ இல்லை. எனக்கு ஒரு உடலும் மனமும் இருக்கின்றன, என்னும் உண்மையை உணரவேண்டும். அதேநேரம் உடலை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. உடலில்தான் உயிர்ச்சக்தி குடிகொண்டிருக்கிறது. உடல்தான் உயிர் இந்த உலகத்தில் இயங்குவதற்கு அடிப்படை. இதன் முக்கியத்துவத்தைத்தான்,
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே
- என்கிறது திருமந்திரம்.
நமக்கு உள்ளே
விழிப்புநிலை அடைவது என்னும் முறைப்பாடு மனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. மனம் சமூகக் கலாச்சாரச் சக்திகளால் கட்டமைக்கப்பட்டது. விழிப்புநிலை அடைதல் மனத்தின் எல்லைகளைக் கடந்த பிரக்ஞையின் ஆழ்நிலைச் சக்திகளின் இயக்கம் சார்ந்தது. மிகவும் சிக்கலான, பிரபஞ்ச ரீதியான, இயக்கவிதிகள் அந்த முறைப்பாட்டை நிர்ணயிக்கின்றன. இந்த விதிகளைப் புரிந்துகொள்ளாமல் வெறும் புத்தகங்களைப் படிப்பதினாலோ அல்லது பிரசங்கங்களைக் கேட்பதினாலோ எந்தப் பயனும் இல்லை.
சொல்லப்போனால், இந்த மனப்பாங்கு நம்மை நேர் எதிர்த்திசையில்தான் கொண்டுபோகும். இந்தப் பயணத்துக்கான உந்துதலும் வழிநடத்துதலும் நமக்குள்ளிருந்துதான் வரவேண்டும்.கடவுள் பற்றியோ, ஆன்மாவைப் பற்றியோ நாம் கொண்டுள்ள மனப்பிம்பங்கள் இந்தப் பயணத்துக்குப் பெரிய தடையாக இருக்கின்றன. மனத்தளவிலான கருத்துக்கள், பயனற்ற சிந்தனைப் போக்குகளில் நம்மை இழுத்துக்கொண்டுபோய்விடுகின்றன.
வெறும் கருத்துகள்
பழைய வாழ்க்கை முறையும் இல்லாமல், புதிய கதவும் திறக்காமல், திரிசங்கு சொர்க்கத்தில் நம்மைக் கொண்டுபோய்த் தள்ளிவிடுகின்றன. அவையெல்லாம் மனத்தில் தேங்கியிருக்கும் வெறும் கருத்துக்கள் என்ற மனத்தெளிவு வேண்டும். அறிந்ததனைத்தையும் விட்டுவிட்டுக் காலியான மனத்துடன், ஆனால் விழிப்பான கவனத்துடன் காத்திருந்தால், கதவு தானாகத் திறக்கும். நம் முயற்சியால் மட்டும் அந்தக் கதவைத் திறக்கவே முடியாது.
விழிப்புநிலை அடைவது மனச்சுயத்தின் குறிக்கோளாக இருக்க முடியாது. அது ஒரு நெடும்பயணம். பயணத்தில் இருப்பதுதான் முக்கியம். பயணமே ஆனந்தமாக இல்லாமல் குறிக்கோளை அடைவது மட்டுமே முக்கியமாக இருந்தால் இன்னமும் முதிர்ச்சி அடையவில்லை என்றுதான் பொருள். பயணம் தொடங்கிவிட்டாலே ஏதோ ஒன்று உள்ளே மாறத் தொடங்கிவிடுகிறது. கடிகாரத்தின் மணிகாட்டும் முள்ளைப்போல ஒவ்வொரு அடியிலும் வெளித்தெரியாதவாறு நுட்பமான மாற்றங்கள் நடக்கும்.
(விழிப்பு நிலை தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com