Published : 07 Jun 2025 08:56 AM
Last Updated : 07 Jun 2025 08:56 AM
‘தியாகத் திருநாள்’ என்று அழகு தமிழில் அழைக்கப்படும் ‘ஈதுல் அள்ஹா’ என்ற பெருநாளை முஸ்லிம்கள் இன்று கடைபிடிக்கின்றனர்.வருடத்தில் இரண்டு தினங்களை முஸ்லிம்கள் உலகம் முழுவதும் பெருநாளாகக் கடைபிடித்து வருகின்றனர். ஒன்று ‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்புப் பெருநாள். மற்றொன்று ‘ஈதுல் அள்ஹா’ எனும் தியாகத் திருநாள்.
இந்நாளில் வசதி உள்ளோர் அனைவரும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளில் ஒன்றை இறைவனுக்காக அறுத்து பலியிட்டு அதன் இறைச்சியை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கை சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டு மற்றொரு பங்கை ஏழைகளுக்கும், இன்னொரு பங்கை உறவுகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
இன்றைய தினத்தில் கடைபிடிக்க வேண்டிய ஒரு முக்கிய வழிபாடு இது. இறைதூதர் இப்ராஹீம் நபி அவர்களை மனித குலத்தின் இரண்டாம் தந்தை, நாகரிகத்தின் நிறுவனர், இறைதூதர்களின் தந்தை என்றெல்லாம் வரலாறு விதந்தோதுகிறது. அவர்கள் ஒருநாள் இரவு, தன் சொந்த மகனை அறுத்து பலியிடுவதுபோல் கனவு கண்டார்கள். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இந்தக் கனவு அவர்களுக்குத் தோன்றியதால் அதோர் இறைக் கட்டளை என்று புரிந்துகொண்ட இப்ராஹிம் நபி அவர்கள், தன் மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிட அவரின் ஒப்புதலோடு அழைத்துச் சென்றார்கள்.அப்போது இறைவன் “இப்ராஹீமே...! நீர் அந்தக் கனவை மெய்ப்படுத்தி விட்டீர், உமது தியாகத்தை நாம் ஏற்றோம். இதோ நாம் உமக்கு அருளுகின்ற இந்த ஆட்டுக்குட்டியை அறுத்துப் பலியிடுவீராக” என்று கூறினான்.
அந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூர்வதே இந்த தியாகத் திருநாளின் நோக்கம். ஹிஜ்ரா எனும் இஸ்லாமிய நாட்காட்டியின் கடைசி மாதமான இந்த துல்ஹஜ் மாதத்தில் ஹஜ் எனும் புனிதக் கடமையை முஸ்லிம்கள் தமது ஆயுளில் ஒரு தடவையாவது நிறைவேற்ற வேண்டும். புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக உலகமெங்கும் இருந்து மக்காவுக்கு சென்றிருக்கும் லட்சக்கணக்கான ஹாஜிகள் என்ற புனிதப் பயணிகள், இம்மாதத்தின் எட்டாம் நாளில் மக்காவுக்கு அருகேயுள்ள மினா எனுமிடத்தில் கூடாரத்தில் தங்கியிருந்து வழிபாடுகள் செய்வர். ஒன்பதாம் நாள் அரஃபா எனுமிடத்தில் கூடாரத்தில் தங்கி பிரார்த்தனைகளில் ஈடுபடுவர்.
அன்று இரவு முஸ்தலிபா எனுமிடத்தில் திறந்த வெளியில் தங்கியிருப்பர். பின்னர் பத்தாம் நாள் அதிகாலை தொழுகையை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் மினாவின் கூடாரத்துக்கு திரும்புவர். பெருநாள் தினமான இந்த பத்தாவது நாளில் மிக முக்கியமான நான்கு வழிபாடுகளை ஹாஜிகள் மினாவில் நிறைவேற்றுவர். சைத்தானின் அடையாளமாக அமைந்துள்ள ஜம்ராத் என்ற தூணில் கல்லெறிவது, சிகை மழிப்பது, இறைவனுக்காக கால்நடையொன்றைப் பலியிடுவது, தொன்மைப் பள்ளிவாசலான கஅபாவை வலம் வருவது ஆகியன அந்நான்கு வழிபாடுகள்.
இவற்றுள் சிகை மழித்தல் என்பது முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிமுறை. மற்றவை மூன்றும் இப்றாஹீம் நபியின் தியாக வரலாற்றை நினைவூட்டுவதாகும்.
திருக்குர்ஆன் கூறுகிறது: “அவர்கள் தமக்குரிய பலன்களை காண்பதற்காகவும் தமக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கால்நடைகள் மீது குறிப்பிட்ட நாட்களில் இறைவனது பெயரைக் கூறி அறுப்பதற்காகவும் (ஹஜ்ஜுக்கு வருவார்கள்). எனவே அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். சிரமப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.”
“பின்னர் அவர்கள் தம் அழுக்குகளை அகற்றிக் கொள்ளட்டும். தம் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றட்டும். தொன்மையான அந்த ஆலயத்தை சுற்றட்டும். ஹஜ்ஜின் வழிபாட்டு முறை இதுவே. யார் அல்லாஹ்வின் புனிதங்களை பேணி நடக்கிறாரோ அவருக்கு அது இறைவனிடம் சிறந்ததாகும். (22: 28,29,30)
மேலும் திருக்குர்ஆன் கூறுகிறது: “பலியிடுதல் என்ற வழிபாட்டை ஒவ்வொரு சமுதாயத்துக்கும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கால்நடைகளை அவனின் பெயர்கூறி அறுப்பதற்காக.” (22:34)
எனவே, வரலாற்று மாமனிதர் இப்றாஹீம் நபி கற்றுத்தந்த நாகரிகத்தின் வழி நடப்போம். இறைவனுக்காக தியாகம் செய்வோம். வறுமையில் உழலும் சக மனிதனுக்கு உதவுவோம். ஈத் முபாரக்.
கட்டுரையாளர்: மவ்லானா அல்ஹாஜ் கா.மு. இல்யாஸ் ரியாஜி தலைமை இமாம் - ஈத்கா மஸ்ஜித்,மந்தைவெளி, சென்னை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT