Published : 19 May 2025 06:30 PM
Last Updated : 19 May 2025 06:30 PM
ராமானுஜரின் திருவருளைப் பெறுவதற்குத் தனக்குத் தகுதி இருக்கிறதா என்று ஆறாம் பாசுரத்தில் ஐயம் கொண்ட திருவரங்கத்தமுதனார், தனக்குத் தகுதி உண்டு என்று ஏழாம் பாசுரத்தில் பாடுகிறார். ராமானுஜரின் சீடராகிய கூரத்தாழ்வாரின் சீடன் நான் என்ற ஒற்றைத் தகுதியே போதுமானது என்று அந்தப் பாசுரத்தில் கூறுகிறார். “மொழியைக் கடக்கும் பெரும் புகழான்” என்று இந்தப் பாசுரம் தொடங்குகிறது. கூரத்தாழ்வாரின் வரலாற்றைக் கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் தான் இந்த வரியின் மகத்துவம் புரியும்.
பெரும் செல்வந்தராய் இருந்தபோதும் வைணவத்திற்குத் தொண்டாற்றுவதற்காகப் பொன்னையும் பொருளையும் துறந்து ராமானுஜரின் பரம சீடர் ஆனவர் கூரத்தாழ்வார். கூரம் என்பது அவர் பிறந்த ஊர். ராமானுஜர் பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீ பாஷ்யம் என்னும் உரையை எழுத பக்கபலமாய் இருந்தவர் இந்தக் கூரேசர் தான்.
சோழ மன்னன் குலோத்துங்கன் ராமானுஜரை சிறைபிடிக்கக் கட்டளையிட்ட போது, ராமானுஜரைத் தப்பிக்க வைத்து, தன்னை மன்னனிடம் போய் துணிந்து ஒப்படைத்தவர் கூரத்தாழ்வார். ராமானுஜரைக் காப்பாற்றுவதற்காக அதே மன்னனின் அவையில் தன் கண்களைப் பிடுங்கி வீசி எறிந்தவர். குலோத்துங்கன் முன்பு உடையவர் போல் வேடமிட்டு வந்த கூரேசரைக் காட்டிக் கொடுத்தவர் நாலூரான் என்னும் அமைச்சர். அந்தக் கொடுஞ்செயல் செய்த நாலூரானுக்கும் முத்தி அளிக்க வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டிக் கொண்டவர் கூரத்தாழ்வார்.
இப்படி சர்வ சாதாரணமாக சாதனைகள் நிகழ்த்துவதை வாடிக்கையாக்கிக் கொண்ட கூரத்தாழ்வாரை, 'வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்' என்று பாடுகிறார் திருவரங்கத்தமுதனார்.
முக்குறும்பு என்றால் மூன்று வகையான ஆணவங்கள். அவை வித்யா மதம், தனமதம், ஆபிஜாத்ய மதம். வித்யாமதம் என்பது படிப்பால் வரக்கூடிய ஆணவம். தனமதம் என்பது செல்வத்தால் வரக்கூடிய ஆணவம். ஆபிஜாத்ய மதம் என்பது, தான் உயர்குலத்தில் பிறந்தோன் என எண்ணுவதால் வரக்கூடிய ஆணவம். மதம் என்ற சொல்லுக்கு இங்கே ஆணவம் என்று பொருள்.
இந்த முக்குறும்புகளால் ஆட்கொள்ளப்படுவதற்கான சூழல் கூரத்தாழ்வாருக்கு நிரம்ப இருந்தது. ஆனால் அதற்கு ஆட்படாமல் அவர் ராமானுஜரைச் சரணடைந்தார். அந்தக் கூரத்தாழ்வாரிடம் திருவரங்கத்தமுதனார் சரணடைகிறார். இதுவரை குருவின் தாசனாக இருந்த திருவரங்கத்தமுதனார், ஏழாம் பாசுரத்தில் குருவின் தாசனுக்கும் தாசனாகி, ஒரு குரு பரம்பரைக்கே தாசன் ஆகிறார்.
ஒரு குரு பரம்பரைக்கே தாசனான பிறகு மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிய நிலை தனக்கில்லை என திருவரங்கத்தமுதனாருக்குத் தெளிவு ஏற்பட்டது. அதற்குப் பிறகு அவர் கரங்கள் எந்த விதத் தடையுமின்றிச் சீரான வேகத்தில் இராமானுச நூற்றந்தாதியைத் தொடர்ந்து எழுதத் தொடங்கின.
முந்தைய அத்தியாயம் > பக்தி இலக்கியத்தின் இலக்கணம் என்ன? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 43
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT