

என்ன தான் சோதனைகளைத் தாங்கும் திறனிருந்தாலும் இராமானுஜரின் அருளுக்குப் பாத்திரமாகும் தகுதி தனக்கு உண்மையிலேயே இருக்கிறதா என திருவரங்கத்தமுதனாருக்குச் சந்தேகம் வந்தது. கூரத்தாழ்வார், முதலியாண்டான், அனந்தாழ்வான், எம்பார் போன்றோர் எங்கே நான் எங்கே என்று அவர் தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். அந்த வினவல் இராமானுஜ நூற்றந்தாதியின் ஆறாம் பாசுரமாக உருப்பெற்றது.
இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன்கவிகள் அன்பால்
மயல்கொண்டு வாழ்த்தும் இராமானுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில்லாத என் பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே
இராமானுஜரின் பிரதான சீடர்களுக்கும் தனக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடுகளை இந்தப் பாசுரத்தில் திருவரங்கத்தமுதனார் சொல்கிறார். 'இராமானுஜன்' என்ற பெயரைக் கேட்டாலே மயங்கி விழும் அளவுக்கு அவர் மேல் பெரும் பக்தி கொண்டு, சொல்லும் பொருளும் அழகாகப் பொருந்தும் வண்ணம் அழகான பாடல்களை நெஞ்செனும் கருவறையிலிருந்து ஈன்றெடுப்பவர்கள் இராமானுஜரின் பிரதான சீடர்கள் என்கிறார்.
இராமானுஜர் பற்றிய ஞானம் இல்லாமல், கவிதைகள் எழுதுவதில் போதிய பயிற்சியும் இல்லாமல், பழுதடைந்த பக்தியோடும் பாவப்பட்ட நெஞ்சினோடும் அவரது பெருமைகளை எழுத முயல்கின்றவன் நான் என தன்னைப் பற்றிய ஓர் உண்மையையும் பகிரங்கமாகக் கூறுகிறார்.
இராமானுஜரின் முதன்மைச் சீடர்களுக்கு உள்ளிருக்கும் பக்தி திரண்டு கவிதையாக வெளிப்படுகிறது. அவர்கள் இலக்கணம் பார்த்து கவிதை எழுதுவதில்லை. அவர்கள் இயற்கையிலேயே மனக்குற்றம் அற்றவர்கள். எனவே, பாவங்கள் புரியாதவர்கள். இவையேதும் அமையப்பெறாத நான் இராமானுஜரின் பெருங்கீர்த்தியைப் பாடத் துணிந்தது எங்ஙனம் சரியாகும் என்று திருவரங்கத்தமுதனார் கேட்கிறார். மேலோட்டமாகப் பார்க்கும் போது தன் மேல் நம்பிக்கை இல்லாத ஒருவரா திருவரங்கத்தமுதனார் என்று தோன்றும். ஆனால் உண்மை அதுவன்று.
'இராமானுஜப் பெருமானே. எழுதுவது நான் அல்ல. என்னை எழுத வைப்பவன் நீ' என்ற பணிவின் வெளிப்பாடே இப்பாசுரம். ஒரு விதத்தில் துணிவு கலந்த பணிவு இது. இயல்பாகவே குற்ற மனம் கொண்டிருந்தாலும் பாவங்கள் பல புரிந்திருந்தாலும் வெறுத்து ஒதுக்காமல் தன்னை நல்வழிப்படுத்தி நூற்றந்தாதி எழுத ஆற்றுப்படுத்திய பேரருளாளன் அந்த இராமானுஜர் என்கின்ற மற்றொரு உண்மையும் இந்தப் பாசுரத்தில் பொதிந்து கிடக்கிறது.
அனைத்தையும் தாண்டி இந்தப் பாசுரத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய படிப்பினை இருக்கிறது.
பாட்டெழுதி இறைவனிடம் பக்தியை வெளிப்படுத்துவதற்கு இலக்கண சுத்தியை விட இதய சுத்தி தான் முக்கியம். ஒரு பக்தி இலக்கியத்திற்கான இலக்கணம் உண்மையான பக்தி தானே!!
முந்தைய அத்தியாயம் > ‘திரு’ என்னும் செல்வமும், ‘குரு’ என்னும் செல்வமும் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 42