Published : 13 May 2025 01:07 PM
Last Updated : 13 May 2025 01:07 PM
சோதனைகளுக்குக் கலங்குதல் ஒரு சராசரி பக்தனின் இயல்பு. எத்துணை பெரிய சோதனை வந்தாலும் கடுகளவும் கலங்காதிருத்தல் குருவைச் சரண்புகுந்த பெருஞ்சீடர்களின் இயல்பு.
உலகியல் விருப்பங்களோடு இல்லற வாழ்வில் இருப்பவர்களையும் துறவு பூண்டு ஆன்மீக மார்க்கத்தில் இருப்பவர்களையும் இறைவன் ஒருபோதும் பிரித்துப் பார்ப்பதில்லை. இருதரப்பினரையும் அவன் நன்கு சோதிப்பான். அந்த இறைவனைப் போலத்தான் குருமார்களும்.
சீடர்களை அருள் மழையில் நனைய வைப்பதிலும் கடும் சோதனைக்கு உட்படுத்திச் செதுக்குவதிலும் அவர்கள் சமரசமற்றவர்கள். தன்னிகரற்றவர்கள். எல்லாம் வல்ல எம்பெருமானாரும் இதற்கு விதிவிலக்கல்லர். அவரால் சோதிக்கப்படுவதைத் திருவரங்கத்தமுதனார் இவ்வாறு பதிவு செய்கிறார்.
எனக்குற்ற செல்வம் இராமானுசன் என்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவன் திரு நாமங்கள் சாற்றும் என்பா
இனக்குற்றம் காணகில்லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே
நாத்திகர்கள், யக்ஞங்கள் மூலம் மோட்சம் அடையலாம் என்ற நம்பிக்கை கொண்டவர்கள், ஆத்மானுபவமே பெரிது என்று கூறும் கைவல்யார்த்திகள், பெருமாளைத் தவிர வேறாரும் தெய்வம் கிடையாது என்ற கொள்கை உடையவர்கள்.
இராமானுஜர் மீது தனி பிரபந்தம் பாடுவது பிடிக்காமல் இந்த நான்கு விதமான மக்களும் திருவரங்கத்தமுதனாரைத் தூற்றுகிறார்கள். அவர்களிடத்தில் உண்மையான பக்தி இருக்காது. அதனால் அவர்களுக்கு உண்மையான பக்திமான்களை அடையாளம் காணவும் தெரியாது.
ஒரு பாகவதரைக் கண்டால் அவரிடத்தில் என்னென்ன குற்றங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கத்தான் அவர்களின் நெஞ்சு பரபரக்கும். அவர்களை 'மனக்குற்ற மாந்தர்' என்ற சொற்றொடரால் ஒதுக்கி விடுகிறார் திருவரங்கத்தமுதனார்.
'தன்னை ஒரு பொருளாக்கி, முன்னை பழவினை வேரறுத்து, தலை மேல் சென்னி தரிக்க வைத்த மனித மகான் இராமானுஜர் எங்கே ? தானும் வளராமல் பிறர் வளர்வதும் பிடிக்காமல் குற்றம் காண்பதையே தொழில் எனக்கொண்டு வாழும் 'மனக்குற்ற மாந்தர்' எங்கே? இந்த மனக்குற்ற மாந்தர் தனக்கு மோட்சத்தை அளிப்பார்களா? வைகுந்தத்தில் நித்திய வாசம் தந்து பெருமாள் அருகே பணிவிடை செய்யும் பேற்றினைத் தருவார்களா?
மனக்குற்ற மாந்தர் கொடுக்கும் அழுத்தத்திற்கு அடிபணியாமல் திருவரங்கத்தமுதனாரின் அகம் இவ்வாறெல்லாம் யோசிக்கிறது. சிறிதும் தளராமல் இராமானுஜரின் திருப்பாதங்களை இன்னும் இறுகப் பற்றிக் கொள்கிறது. அவர் மேல் வீசப்படும் கற்கள் பூக்களாக மாறுகின்றன. பிறரது பழிப்பு இவருக்குப் புகழ் சேர்க்கிறது. அனைத்துக்கும் காரணம் அவரின் நடுக்குறாத நன்னம்பிக்கை.
இந்தப் பாசுரத்தில் உள்ள 'புகழ் அவன் மன்னியசீர்' என்னும் வரி நுட்பமானது. இவ்வரியை இதர மாந்தரின் பழிச்சொல் எனக்குப் புகழ்ச்சொல் ஆகும் என்றும் பொருள் கொள்ளலாம். புகழ்ச்சிக்குரிய இராமானுஜரின் நிலையான மங்கல குணங்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
பாசுரத்தின் முதல் பாதியில் தூற்றுவோரை இனம் காட்டும் திருவரங்கத்தமுதனார் இரண்டாம் பாதியில் போற்றுவோரை அடையாளம் காட்டுகிறார். அவர்கள் இராமானுஜரின் அடியவர்கள். பொழுதெல்லாம் இராமானுஜரின் திருநாமத்தைச் 'சாற்று'பவர்கள். அதாவது உரக்கச் சொல்பவர்கள்.
இராமானுச நூற்றந்தாதியில் 'இராமானுச' என்ற சொல் ஒன்றே அவர்களுக்குப் போதுமானது. இலக்கணம் அவர்களுக்கு முக்கியமன்று. இதயம் தான் முக்கியம். உண்மையான பக்தர்களின் இயல்பு இது தான். தூற்றுவோரைத் திருவரங்கத்தமுதனார் கடந்து செல்வதற்கு இத்தகைய இராமானுஜ தாசர்களின் அன்பும் அரவணைப்பும் கூட மிக முக்கிய காரணங்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அதனால் தான் 'எனக்குற்ற செல்வம் இராமானுசன்' என்று அவர் பாடுகிறார்.
இராமானுஜரைக் காட்டிலும் பொருத்தமுடைய செல்வம் ஒரு சீடனுக்கு இருக்க முடியுமா?
'திரு' என்னும் செல்வம் நம்மை நீங்கிவிடும். 'குரு' என்னும் செல்வம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்காது.
முந்தைய அத்தியாயம்: அருளும் பொருளும் இராமானுஜரின் இரு கண்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 41
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT