அருளும் பொருளும் இராமானுஜரின் இரு கண்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 41

அருளும் பொருளும் இராமானுஜரின் இரு கண்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 41
Updated on
2 min read

அறிவில்லாப் பொருள்களைச் சடப்பொருள் என்கிறோம். அறிவுள்ள பொருள்களை உயிர்ப்பொருள் என்கிறோம். புல், பூண்டு, பூச்சி, பறவை, மிருகம் இவற்றோடு ஒப்பிடும் போது மனிதனுக்கு அறிவு கூட. ஆனால், ஆறறிவு இருப்பதனால் மட்டுமே மனிதன் என்னும் உயிர்ப்பொருளை உயிர்ப்பொருள் என்று சொல்லிவிடலாகாது என்கிறார் திருவரங்கத்தமுதனார். ஆண்டவனை அறிந்து கொள்ள முற்படும் வரை உயிர்ப்பொருள் கூட உயிரில்லாத பொருள் தான் என்பது அவரது கூற்று. ஆனால், இராமானுஜரை சந்திக்கும் வரை தான் அவருக்கு அந்தத் துயரம் இருந்தது.

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழவினை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கேதும் சிதைவில்லையே.

உலகியல் ஆசைகள் நமக்குத் தொடர் துன்பத்தைத் தந்தாலும் நாம் அந்த ஆசைகளைக் கைவிடுவதில்லை. ஏனென்றால் அந்தத் துன்பம் தரும் ஒருவிதமான குரூர சுகத்தை நம் உயிர் அனுபவிக்க விழைகிறது. உயிருக்குள் மலமாகக் கலந்திருக்கும் ஆணவம் அந்தச் சுகத்தை நன்கு உண்டு வளர்கிறது. இந்தக் கொடிய சுழலிலிருந்து விடுதலை அடையும் வரை நாம் அறிவுள்ள சடப்பொருள் தான். சுருங்கச் சொன்னால் பொய்ப்பொருள்களின் மேல் தணியா மோகம் கொண்டிருக்கும் இன்னொரு பொய்ப்பொருள்.

ஆனால், ஒரு குருவால் ஒரே கணத்தில் நம் விருப்பை மெய்ப்பொருளாகிய இறைவனின் பக்கம் திருப்ப முடியும். அந்தத் திருப்பம் நமக்கெல்லாம் மிகப்பெரிய திருப்பத்தைத் தரும். அந்தத் 'திருப்பத்திற்கு'ப் பிறகு நாம் 'பொருள்' மிக்க பொருளாக மாறுகிறோம். பரமகுருவைத் தவிர வேறு எவராலும் இந்த அற்புதத்தை நிகழ்த்த முடியாது. இதைத்தான் "என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி" என்று திருவரங்கத்தமுதனார் எழுதுகிறார்.

ஆனால், குருநாதர்கள் ஒரே ஓர் அற்புதத்தை மட்டும் நிகழ்த்தி அடங்கி விடுபவர்கள் அல்லர். அற்புதங்கள் அவர்களுக்கு அன்றாடம். எம்பெருமானார் ஸ்ரீ இராமானுஜரும் இதற்கு விதிவிலக்கு கிடையாது.

மருள் என்றால் மயக்கம், அறியாமை. இவ்விரண்டும் பெற்ற பிள்ளைகள் தாம் பாவங்கள். இவற்றை எப்போதிலிருந்து செய்யத் தொடங்கினேன் என்பது தெரியாமல் இராமானுஜரின் முன் கரம் கூப்பி கண்ணீர் பெருக்கி நின்றார் திருவரங்கத்தமுதனார். ஒருவேளை தப்பித் தவறி ஏதோ அஞ்ஞானத்தால் மீண்டும் பாவங்களைச் செய்யத் தொடங்கினால் என்னாவேன் என்றும் அவர் அஞ்சினார். அவரைப் பார்த்து 'அஞ்சேல்' என்றுரைத்த இராமானுஜர் அவர் மனத்தில் மீண்டும் பாவ வாசனை எழாத படி செய்துவிட்டார். 'மருள் சுரந்த முன்னைப் பழவினை வேரறுத்து' என்னும் வரியின் மகத்துவம் அதுவே. பாவ வாசனை முற்றும் நீங்குதலை 'வேரறுத்து' என்னும் செஞ்சொல் நமக்கு உணர்த்துகிறது.

இவற்றோடு நில்லாமல் காலத்தின் தலைவனாகிய கரிய திருமாலைக் கணந்தோறும் சிந்தித்திருக்கும் படி உயிர்களில் எல்லாம் உயர்ந்த உயிராகிய இராமானுஜர் என்னைப் பணித்தார் என்று திருவரங்கத்தமுதனார் கூறுகிறார். பிறகு அந்த குருமகான் தனது திருவடிகளை எனது தலை மேல் வைத்து எனக்கேதும் தீங்கு நேராத படி பார்த்துக்கொண்டார் என்று பாசுரத்தை நிறைவு செய்கிறார்.

பாசுரத்தின் இறுதியில் 'பாதமும் என் சென்னி தரித்தேன்' என்று திருவரங்கத்தமுதனார் எழுதவில்லை. 'பாதமும் என் சென்னி தரிக்க வைத்தான்' என்று எழுதுகிறார்.

குரு நினைத்தால் தான் குருவின் பாதங்களை நம்மால் பணிந்து வணங்க முடியும்.

முந்தைய அத்தியாயம்: ஒரு திருநாமம் இரண்டு அற்புதங்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 40

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in