ஒரு திருநாமம் இரண்டு அற்புதங்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 40

ஒரு திருநாமம் இரண்டு அற்புதங்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 40
Updated on
1 min read

தன் நாமத்தை இன்னார் தான் உச்சரிக்க வேண்டும், இன்னார் உச்சரிக்கக் கூடாது என இறைவனோ குருவோ எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. உளமார உச்சரித்தால் யாராயினும் பலனுண்டு. நம் மனம் திரும்பத் திரும்ப ஒரு திருநாமத்தை மந்திரமென ஓதும்போது ஒரு பேராற்றல் நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. அப்போது மலையைக் கூட பெயர்த்து நகர்த்தி விடும் ஒரு பெரும் நம்பிக்கையை மனம் பெற்று விடுகிறது. அதனால் தான் மூன்றாம் பாசுரத்தில் திருவரங்கத்தமுதனார் தன் நெஞ்சை ‘பேரியல் நெஞ்சே’ என்று நிமிர்வோடு அழைக்கிறார். இதுவரைக்கும் பெறாத இயல்பைப் பெற்றதனால் நெஞ்சு ‘பேரியல்’ நெஞ்சாகிறது.

பேரியல் நெஞ்சே அடிபணிந்தேன் உன்னைப் பேய்ப்பிறவிப்

பூரியரோடுள்ள சுற்றம் புலத்திப் பொருவரும் சீர்

ஆரியன் செம்மை இராமானுச முனிக்கு அன்பு செய்யும்

சீரிய பேறுடையார் அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே

முதல் பாசுரத்தில் நெஞ்சுக்குக் கட்டளை இட்டவர் மூன்றாம் பாசுரத்தில் நெஞ்சுக்குப் பணிவு கூர்ந்து வணக்கம் செய்கிறார். தன் மனம் தனக்குக் கட்டுப்பட்டுவிட்டது என்னும் பேரானந்தத்தின் கொண்டாட்டம் அது. நன்றி பாராட்டுதல் என்பதன் அடையாளம் அது. ‘பேய்ப்பிறவிப் பூரியரோடுள்ள சுற்றம் புலத்தி’ என்னும் வரியில் இவ்விரு உணர்ச்சிகளும் நன்கு வெளிப்படுவதை நம்மால் உணர முடியும்.

இந்த வரிக்கு அசுரர்களையும் கயவர்களையும் என்னிடமிருந்து துரத்தி விட்டாய் என நேரடியாகத் தான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. உண்மையில் அசுரர்களும் கயவர்களும் வெளியே இல்லை. நம்முள்ளே தான் இருக்கிறார்கள். அச்சம், கோபம், பொறாமை, சோம்பல், பேராசை, மோகம், கவலை, ஐயம், மயக்கம் உள்ளிட்ட தீக்குணங்கள் அசுரர்களும் கயவர்களும் அன்றி வேறு யார்? இந்தத் தீக்குணங்களையெல்லாம் போக்கடிப்பவன் ஒப்பற்றவன் அல்லவா? அதனால் தான் ‘பொருவரும் சீர் ஆரியன் செம்மை இராமானுசன்’ என்று திருவரங்கத்தமுதனார் பாடுகிறார். இங்கே ஆரியன் என்பது ஓர் இனத்தைக் குறிக்கும் சொல்லன்று. அது ஆசாரியனாகிய குருநாதரைக் குறிக்கும் சொல்.

திருவரங்கத்தமுதனார் தன் மனத்தைப் பாராட்டுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அவரது மனம் இராமானுஜருக்கு மட்டும் அடிமையாகவில்லை. இராமானுஜருக்கு சலிக்காமல் பணிவிடை செய்த அவரது அடியார் குழாத்துக்கும் அடிமையாகிவிட்டது. ‘இராமானுச முனிக்கு அன்பு செய்யும் சீரிய பேறுடையார்’ என்னும் வரி இராமானுஜரின் சீடர்கள் அனைவரையும் குறிப்பதாய் இருந்தாலும் இராமானுஜரின் தலையாய சீடரான கூரத்தாழ்வானையே குறிக்கிறது என உரையாசிரியர்கள் கூறுவதுண்டு.

ஒரு மனத்தைத் தீயனவற்றிலிருந்து விலக்குதல் எவ்வளவு முக்கியமோ நல்லனவற்றில் இணைப்பதும் அதே அளவு முக்கியம். இராமானுஜரின் திருநாமம் இவ்விரண்டையும் தனக்கு ஒருங்கே செய்தது என்பது தான் திருவரங்கத்தமுதனாரின் பாசுரம் சொல்லும் செய்தி. இராமானுஜரின் நாமத்துக்கே இத்துணை ஆற்றல் என்றால் இராமானுஜருக்கு எத்துணை பெரிய ஆற்றல் இருந்திருக்கும்?!!

முந்தைய அத்தியாயம் > இராம நாமத்துக்கு நிகரான இராமானுஜர் நாமம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 39

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in