செயலும் அவனே... செயலின்மையும் அவனே | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 35
ஓர் ஆசனத்தில் அமர்வதால் மட்டும் ஒருவன் அரசன் ஆகிவிடுவதில்லை. அவன் ஆணை மக்களால் மறுப்பின்றிப் பின்பற்றப்படும் போது தான் அவன் உண்மையான அரசன் ஆகிறான். அவன் ஆட்சி சக்கரம் செல்லும் தொலைவே அவன் செல்வாக்கைத் தீர்மானிக்கிறது. இதனால் தான் சிலப்பதிகாரத்தின் முதல் காதையான மங்கல வாழ்த்துக் காதையில் கூட 'ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு மேரு வலம் திரிதலான்' என்று சோழ மன்னனைப் போற்றி இளங்கோவடிகள் எழுதினார்.
இதே அணுகுமுறையை ஆறாம் பாசுரத்தில் (1.1.6) மாயோனாகிய திருமாலிடத்தில் நம்மாழ்வார் கையாள்கிறார்.
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றுமோர் இயல்வினர் என நினைவு அரியவர்
என்றுமோர் இயல்வொடு நின்ற எம் திடரே
உயிர்ப்பொருள்கள் மற்றும் சடப்பொருள்களின் செயல், செயலின்மை பெருமாளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதே இந்தப் பாசுரத்தின் சாரம்.
'நின்றனர்' தொடங்கி 'திரிந்திலர்' வரைக்கும் மனிதர்களுக்குரிய 'அர்' விகுதி போட்டு எழுதியிருந்தாலும் நிற்றல், நில்லாமை, இருத்தல், இராமை, கிடத்தல், கிடவாமை, திரிதல், திரியாமை ஆகியவை அனைத்தும் அரங்கனின் கட்டுப்பாட்டில் இருப்பவை என்பதே நம்மாழ்வார் சொல்ல வருவது.
வைணவப் பெரியவர்களில் ஒருவரான எம்பாரிடம் 'ஒரு செயலைச் செய்வதற்கு இறைவனது அருள் வேண்டும். ஆனால் ஏதும் செய்யாதிருப்பதற்கு இறைவனின் அருள் எதற்கு?' என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு எம்பார் "உயிரோடு தேவலோகம் புக முயன்ற திரிசங்கு மன்னனை இந்திரன் திருப்பி அனுப்பிய போது அவனை அந்தரத்திலேயே நிற்கச் செய்தார் விஸ்வாமித்திரர். அங்கே 'நில்லாமை'க்குக் கூட அனந்தனது அருள் தேவை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்" என்று பதிலளித்தாராம். ஆம். செயலின்மையும் ஒரு செயலே.
நமதறிவு ஆறறிவு. அதுவும் பெரும்பாலும் நூலறிவு. ஆதலால் அது குறுகிய எல்லைக்கு உட்பட்டது. அதனால் நம் அறிவு எப்போதும் நமக்குத் துணை செய்யும் என்று சொல்ல முடியாது. நம்முடனே இருந்தாலும் நமது ஐந்து புலன்களை நம்ப முடியாது. அவை நம்மை எளிதில் ஏமாற்றிவிடும். இதனால் தான் சில சந்தர்ப்பங்களில் செய்ய வேண்டிய செயலொன்றை அலட்சியத்தால் நாம் செய்யாமல் விட்டுவிடுகிறோம்.
நமக்கு இருப்பது ஆறறிவு என்றால் ஆண்டவனுக்கு இருப்பது பேரறிவு. அதுவும் வாலறிவு. எனவே அது எல்லையில்லாதது. பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பது. அவனை நம்பும் போது தவறு நிகழ வாய்ப்பில்லை.
இதை ஓர் அன்றாட நிகழ்வை வைத்து எளிதில் புரிந்துகொள்ளலாம். நாம் மகிழுந்து (Car) ஓட்டக் கற்றுக்கொள்ளும் போது நம் அருகிலேயே பயிற்சியாளர் அமர்ந்திருப்பார். நம் பக்கம் முடுக்கி (Accelerator), தடுப்பி (Break) இருப்பதைப் போல அவர் பக்கத்திலும் இருக்கும். நாம் உரிய நேரத்தில் முடுக்கியையோ தடுப்பியையோ பயன்படுத்தத் தவறினால் அவர் பயன்படுத்துவார். நாம் ஓட்டத் தவறினாலும் மகிழுந்தை அவர் தொடர்ந்து ஓட வைப்பார். நம்மை நாம் மட்டும் ஓட்டுவதில்லை. அவனும் சேர்ந்து தான் ஓட்டுகிறான்.
நமது பொறிகள் மகிழுந்தின் முடுக்கிக்கு நிகரானவை. நம்மை எளிதில் தூண்டி பரபரக்க வைப்பவை. நமது அறிவு தடுப்பிக்குச் சமமானது. எந்தச் சூழலிலும் நம்மை வழிநடத்துவதும் கட்டுப்படுத்துவதும் அதுதான். ஆனால் நமது தடுப்பியும் பழுதடையும். ஆனால் ஆண்டவனின் தடுப்பி ஒருபோதும் பழுதடையாது. அவன் முடுக்கி ஒரு போதும் செயலிழக்காது. அவனிடம் சரண் புகுந்தால் போதும். எத்தனை தடைகள் வந்தாலும் வாழ்க்கை என்னும் சாலையில் நாம் சீராகப் பயணம் செய்த படி இருப்போம்.
செயல், செயலின்மை என இரு துருவ நிலைகளிலும் உள்ள இந்த இறைவன் இத்தகையவன் தான் என எக்காலத்தும் கூற முடியாது எனக்கூறும் நம்மாழ்வார், இயல்பை அறிய முடியாமையே அவனது இயல்பு எனவும் கடைசி இரண்டு அடிகளில் கூறுகிறார்.
அந்த இறைவன் வேதங்களால் பரம்பொருள் இவனே என்று உறுதி செய்யப்பட்டவர் என்பதை விளக்க 'திடரே' என்னும் அழகான சொல்லை நம்மாழ்வார் பயன்படுத்துகிறார்.
சுருங்கக் கூறின், செயலும் அவனே செயலின்மையும் அவனே. இதை ஆராய்ச்சி செய்தல் வீணானது. உணர்ந்து ஏற்றுக் கொள்ளுதல் மேலானது.
முந்தைய அத்தியாயம் > வீடு வேண்டுமா? வீடுபேறு வேண்டுமா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 34
