ஆசான் அருகில் இருக்கும் அற்புதம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 25 

ஆசான் அருகில் இருக்கும் அற்புதம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 25 
Updated on
1 min read

நம்மாழ்வாரின் அண்மையில்தான் முதன்முறையாக தூய அறிவின் விகசிப்பைத் தனக்குள் உணர்ந்தார் மதுரகவியாழ்வார். அந்த மலர்ச்சி அவருக்கு ஒரு மறுபிறப்பு. அதை அவரது ஐந்தாம் பாசுரத்தின் நிறைவுச் சொற்றொடரான 'சதிர்த்தேன் இன்றே' நன்குணர்த்துகிறது.

சதிர்த்தேன் என்பதற்கு வலிமை பெறுதல் என்றும் ஒரு பொருளுண்டு. எனில், நம்மாழ்வாரிடம் இருந்து மதுரகவியாழ்வார் அப்படி என்ன வல்லமையைப் பெற்றார் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதிலை ஆறாம் பாசுரத்தில் மதுரகவியே சொல்கிறார்.

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்

நின்று தன் புகழேத்த அருளினான்

குன்ற மாடத் திருக்குருகூர் நம்பி என்றும்

என்னை இகழ்விலன் காண்மினே

எழுமை என்பதற்கு ஏழு பிறவிகள் என்பது ஒரு பொருள். ஏழு தலைமுறைகள் என்பது இன்னொரு பொருள். நம் மரபணுவில் இருப்பவை யாவும் நமக்குப் பிறகு வரும் ஏழு தலைமுறை வரை கடத்தப்படும் என்பது மரபியல் (Genetics) கூறும் உண்மை.

ஆனால், 'எழுமையும்' என்பதை எழும் தோறும் என்று புரிந்துகொண்டால் பாசுரத்தின் பொருள் சிறக்கும் என்று ஆசாரியர்கள் விளக்கியிருக்கிறார்கள். அதாவது ஓர் உயிர் இருக்கும் வரைக்கும் என்று அர்த்தம். உயிருக்கு அழிவில்லை என்பதால் 'குருவின் புகழை என்றென்றும் பாடுவேன்' என்று மதுரகவியாழ்வார் சொல்வதாகவும் நாம் பொருள் கொள்ளலாம்.

எந்த நிலையிலும் குரு என்னைக் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை தான் சீடனை இயங்க வைக்கிறது. சூழ்ந்திருக்கும் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கிறது. குரு ஏறத்தாழ கடவுளின் திருவுரு. அந்தக் குருவின் அருள் பலம் தான் சீடனின் ஆன்ம பலம். அதை அவன் உளமார நம்பும் போது பல அற்புதங்கள் அன்றாடம் ஆகின்றன.

உண்மையான பக்தியோடு தன் திருப்பெயரை உச்சரிக்கும் சீடனுக்குள் குரு இறங்குகிறார். அவனை நினைக்க முடியாத பெருஞ்செயல்கள் புரிய வைக்கிறார். இடராய் இருக்கும் வாழ்க்கை குருவின் அருகண்மையால் சுடராய் ஒளிரும்.

அவமானத்தால் தாழ்ந்திருக்கும் சீடனின் தலையை வருடுவது மட்டும் குருவின் பணியன்று. அந்தத் தலையை நிமிர்த்துவதும் அவரது பணி தான்.இவ்விரண்டையும் தன் குருநாதரிடம் நேரடியாக அனுபவித்த பாக்கியம் மதுரகவியாழ்வாருக்கு உண்டு.

குருவின் கண்களிலுள்ள அருட்கதிர்கள் அன்பையும் ஆற்றலையும் ஒருசேர வெளிப்படுத்தும் அபூர்வ தன்மை கொண்டவை. அந்தத் தன்மையை நன்குணர்ந்தவர் மதுரகவியாழ்வார். ஆதலால், நம்மாழ்வாரை விட்டு அவர் ஒருபோதும் அகலவில்லை. அப்படியே ஏதோ ஓர் அஞ்ஞானத்தால் நம்மாழ்வாரை பிரிய நேர்ந்திருந்தாலும் மதுரகவியாழ்வாருக்கு எந்த இழப்புமில்லை.

நம்மாழ்வார் என்னும் பரமகுரு, தானே அவரைத் தேடிப் பிடித்து வந்து மீண்டும் நன்னெறியில் செல்ல வைத்துவிடுவார். 'என்றும் என்னை இகழ்விலன் காண்மினே' என்ற வரி அந்தப் பேருண்மையைத் தான் நம் அகத்தில் ஆழப் பதிய வைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in