

எனக்கு எல்லாமே நம்மாழ்வார்தான் என்றிருந்த மதுரகவியாழ்வாருக்கு அவரை விட்டு ஒருகணம் பிரிந்து, தாயாரோடு எழுந்தருளியிருக்கும் ஶ்ரீமந்நாராயணனைத் தரிசிக்க வேண்டும் என்று ஆசை வருகிறது.
திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடை
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே.
கண்ணன்(திருமால்), நம்மாழ்வார், அவரது பாசுரங்கள், அந்தப் பாசுரங்களின் இசை இனிமை என்ற பாதையில் போன மதுரகவியாழ்வார் அதே பாதையில் மறுதலையாக வருகிறார். பெருமாளை வழிபடுகிறார். ‘திரிதந்து’ என்ற சொல்லின் பொருள் இதுவே.
முந்தைய பாசுரத்தில் ‘தேவு மற்றறியேன்’ என்று கூறிவிட்டு இந்தப் பாசுரத்தில் ‘தேவ பிரானுடை கரிய கோலத் திருவுரு காண்பன் நான்’ என்று மதுரகவியாழ்வார் பாடுகிறார்.
நம்மாழ்வாருக்கு நாராயணனைப் பிடிக்கும் என்பதால் மதுரகவியாழ்வார் அவ்வாறு செய்தார், மதுரகவியாழ்வாருக்கு நாராயணனைக் கைகாட்டியதே நம்மாழ்வார் தான், குருவின் விருப்பம் தான் சீடனின் விருப்பம்' என இவற்றுக்குப் பல விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், இவற்றை விட ஒரு மேலான விளக்கமும் உண்டு. ‘திரிதந்து’ என்ற சொல் தேர்வின் அழகைப் புரிந்துகொண்டால் இந்த விளக்கத்தை நன்கு சுவைக்கலாம்.
தமிழில் இரண்டு சொற்கள் இணையும்போது சில சமயங்களில் ஓரெழுத்து இன்னோர் எழுத்தாக மாறும். பொன், குடம் ஆகிய இரு சொற்கள் சேர்ந்து பொற்குடம் என்றாவது இதற்கொரு சிறந்த உதாரணம். தமிழ் இலக்கணத்தில் இதற்குத் திரிதல் விகாரம் என்று பெயர்.
நம்மாழ்வாரைப் பணிந்து அனுதினமும் பணிவிடை செய்து வந்த மதுரகவியாழ்வாருக்கு ஒரு கணம் அவர் அந்த நாராயணனாகவே தெரிந்திருக்க வேண்டும். நம்மாழ்வார் நாராயணனாக மாறி மீண்டதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அதனால் ‘தேவு மற்றறியேன்’ என்னும் வரியும் ‘தேவ பிரானுடை கரிய கோலத் திருவுரு காண்பன் நான்’ என்னும் வரியும் முரணானவை அல்ல. தன்னிடம் இருப்பதைச் சீடனுக்கும் தர விரும்பும் குரு பெரும் வள்ளன்மை மிக்கவர். ‘வண் குருகூர் நம்பி’ என்ற சொற்றொடர் நமக்கதை நன்குணர்த்துகிறது.
குருவருள் இல்லாமல் திருவருள் கிட்டாது என்பதற்கு ஆசாரியர்கள் ஓர் அழகான உருவகக் கதையைச் சொல்கிறார்கள். பழக்கப்பட்ட யானையொன்றின் மேல் ஏற வேண்டும் என்று நமக்கு ஆசை. ஆயினும் நம்மால் உடனே ஏறி விட முடியாது. நாமாக ஏற முயன்றாலும் யானை கீழே தள்ளி விடும். ஆனால், பாகன் சொன்னால் யானை உடனே இசைந்து நம்மை மேலே ஏற்றிக்கொள்ளும். அந்த யானையைப் போன்றவர் பெரிய பெருமாள். யானைப்பாகனைப் போன்றவர் குரு.
ஆசாரியர்கள் இன்னும் கூட ஒரு படி மேலே சென்று குருவின் பெருமையைச் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார்கள். இந்த உலகியல் வாழ்க்கை கீழ்ப்படியில் இருப்பது போன்றது. ஆண்டவனை வழிபடுவது நடுப்படியில் இருப்பது. குருவை வணங்குவது மேல்படியில் இருப்பது.
மேல் படியில் நின்று கொண்டால் குரு நம்மை இறுகப் பற்றிக் கொள்வார். அரிதினும் அரிதாக நாம் கீழே விழுந்தாலும் கூட நடுப்படியாகிய நாராயணனிடத்தில் தான் விழுவோம். ஆனால், நடுப்படியிலிருந்து விழுந்தால் கீழ்ப்படியாகிய சம்சார சாகரத்தில் விழ வேண்டும். அதிலிருந்து மறுபடியும் ‘மறு’ படியில் ஏறுவது அத்துணை எளிதல்ல.
மதுரகவியாழ்வார் தன் குரு ஒரு நடமாடும் கோவில் என நன்கறிந்தவர். பரம்பொருளாகிய வைகுண்டநாதன் எங்கும் நிறைந்திருந்தாலும் ‘அந்த’க் கோயிலுக்குள் அவனை எளிதில் காணலாம் என்பதையும் நன்குணர்ந்தவர். ஆதலால் அவன் அங்கே எழுந்தருளும் போது மதுரகவியாழ்வார் வழிபடுகிறார். தரிசனம் முடிந்ததும் அவர் உடலும் உள்ளமும் வழக்கம் போல் நம்மாழ்வாரைத் துதிக்கத் தொடங்கிவிடுகிறது.
அவரைப் பொறுத்தவரை கோயிலுக்குள் இருப்பது மட்டும் தெய்வமன்று. அந்தக் கோயிலும் தெய்வம்தான்!
முந்தைய அத்தியாயம்: நம்மாழ்வாரே எனக்கு நாராயணன் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 21