ஓட்டி விளையாடும் இறைவன் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 14

ஓட்டி விளையாடும் இறைவன் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 14
Updated on
2 min read

ராமாயணத்தின்படி இலங்கையை ஆண்ட மாமன்னன் ராவணன். ஆனால், அவன் நம் ஒவ்வொருவர் இதயத்திலும் இருக்கிறான். அதே பத்து தலைகளோடு. அவனை அழித்தொழிக்கும்படி திருமாலிடம் வேண்டுகிறார் திருப்பாணாழ்வார். ஆதலால், ரங்கப்பிரானை ராமபிரானாகப் பார்த்து ஒரு பாசுரத்தைப் பாடுகிறார்.

சதுரமா மதிள்சூ ழிலங்கைக் கிறைவன் தலைபத்து

உதிர வோட்டிஓர் வெங்கணை யுய்த்தவ னோத வண்ணன்

மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத் தம்மான் திருவயிற்

றுதரபந் தனமென் னுள்ளத்துள்நின் றுலாகின்றதே

கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவை ஞானேந்திரியங்கள். இவை ஐந்தும் வெளி உலகம் குறித்த அறிவை நமக்குத் தருபவை. வாக்கு, கை, கால், கழிப்புறுப்பு, பிறப்புறுப்பு ஆகிய ஐந்தும் செயற்கருவிகள். ஆதலால் அவை கர்மேந்திரியங்கள். ஞானேந்திரியங்கள் ஐந்தும் கர்மேந்திரியங்கள் ஐந்தும் பத்து தலைகளாகி நம்மை ராவணன் போல் ஆக்குகின்றன.

நம்மைச் சுற்றி ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று பெரும் கோட்டைச் சுவர்களும் எழுந்து நிற்கின்றன. இந்த மூன்றும் நம் பலம் என்று நம்பி நாம் ஏமாந்து கொண்டே இருக்கிறோம்.

நான்கு திசைகளிலும் நிறைந்திருக்கும் கடல், காடு, மலை ஆகிய முப்பெரும் அரண்களைக் கடந்து வந்து இலங்கையைத் தாக்கும் திறன் எவருக்கும் இல்லை என்று ராவணன் திண்ணமாக நம்பினான். தன்னை வெல்வார் யாரும் இல்லை என்று துணிந்து தன்னை இறைவனாகவே கருதி இறுமாந்திருந்தான். அவன் பத்து தலைகளும் வீங்கிப் பெருத்தன.

எத்துணை பெரியதாக இருந்தாலும் நம் ஆணவத்தை அழிக்க இறைவனுக்கு ஒரு நொடி போதும். ஆனால், அவன் அவ்வாறு செய்வதில்லை. நாம் திருந்துவதற்கு நிறைய வாய்ப்புகளைத் தந்து ஆணவத்தை அடக்குகிறான். அப்படியும் அவன் கருணையை நாம் அலட்சியம் செய்து தொடர்ந்து தருக்கிக் கொண்டு திரிந்தால், அவன் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டான். ஒரு நாள் நம் கர்வத்தை முற்றாக அழித்து விடுவான்.

இதை ஒரு திருவிளையாடலாகவே ராவணனிடம் செய்தானாம் ராமன். ராவணனின் தலைகளைத் தன் அம்புகளால் ராமன் கொய்யக் கொய்ய அவை மீண்டும் மீண்டும் முளைத்தன. நூற்றொரு (101) முறை இவ்வாறு செய்து விட்டு அவன் நெஞ்சை நோக்கி சரத்தை எய்தானாம் ராமன். பனங்காய்கள் கொத்தாக விழுவது போல ராவணனின் பத்து தலைகளும் உதிர்ந்தன. இதைத் தான் "தலைபத்து உதிர ஓட்டி" என்கிறார் திருப்பாணாழ்வார்.

இந்த 'ஓட்டி' என்ற சொல்லை ஆசாரியர்கள் சுவைத்து சுவைத்து விளக்கியிருக்கிறார்கள். ஓட்டி என்பதற்கு அழித்தல், நீங்கச் செய்தல் ஆகிய பொருள்கள் உண்டு. நேரத்தைக் கடத்துதல், ஏதும் செய்யாமல் வீணே பொழுது போக்குதல் என்றும் பொருள்கள் உண்டு. இறைவன் நேரத்தை ஓட்ட வேண்டுமா அல்லது நம் ஆணவத்தை ஓட்ட வேண்டுமா என்பது நம் தேர்வு.

ஆணவம் நமது கோட்டை என்று நாம் நினைக்கிறோம். ஆனால், இறைவனுக்கு அது தூசு. ஆணவம் ஒரு பொய்யென்று நாம் அறிவதில்லை. இறைவன் ஒருவனே மெய்யென்று நமக்குத் தெரிவதுமில்லை.

திருப்பாணாழ்வாருக்குப் பொய் எது மெய் எது என்று தெரிந்திருந்தது. அந்த ஞானம் பிறந்த ஆனந்தமே இந்தப் பாசுரம். அந்த ஆனந்தத்தின் மிகுதியில் அவரது மனம் திருமாலின் அரைஞாண் கயிற்றை ரசிக்கிறது. 'என் அன்பில் எப்போதும் கட்டுண்டு இரு, உன் அருளால் என்னை எப்போதும் கட்டிப்போட்டிரு' என்று திருப்பாணாழ்வார் நினைத்தாரோ என்னவோ?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in