

ஸ்ரீ ராமபிரானின் தீவிர பக்தரான அனுமனை வழிபடுவது என்பது விசேஷமானது. பழநி அடுத்து பாலசமுத்திரம் அருகேயுள்ள பாலாறு அணைப் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சுயம்பு ஸ்ரீ ராம வீர ஆஞ்சநேயர் கோயில். கோயிலுக்கு செல்லும் வழியெங்கும் இயற்கை எழில் கொஞ்சுகிறது. கோயிலை அடைந்ததுமே மனதில் பூரண அமைதி குடிகொண்டு விடுகிறது.
கோயிலுக்கு பின்பகுதியில் ஆயிரக்கணக்கான நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் பிரம்மாண்டமான பாலாறு அணை உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை பாறையில் 8 அடி உயர சுயம்புவாக கம்பீரமாக காட்சி அளிக்கிறார். இந்த மாதிரியான அமைப்பு வேறு எங்குமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு வந்து வழிபட்டதாகவும், அவர்கள் கண் முன்னே ஆஞ்சநேயர் தோன்றி காட்சியளித்த தலம் என்றும் கூறப்படுகிறது. இக்கோயில் வெளிப்பிரகாரத்தில் ராமர், சீதை மற்றும் சகோதரர் லட்சுமணனை வணங்கியவாறு ஆஞ்சநேயர் வீற்றிருக்கின்றார். கோயிலுக்கு வெளியே விநாயகர் சந்நிதி, துளசிமாடம் உள்ளது. காலை 7 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 7 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
இவரை வேண்டினால் தடைப்பட்ட காரியங்கள் நடக்கும், நிலம் மற்றும் சொத்துகள் வாங்கலாம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தையும், திருமணம் மற்றும் சுபகாரியங்களும் உடனடியாக கிட்டும். பிரார்த்தனை நிறைவேறியதும் வெண்ணெய், துளசி மாலை, அவல், பொட்டுக் கடலை சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர். இன்னும் சிலர் அன்னதானமும் வழங்குகின்றனர்.
புரட்டாசி சனிக்கிழமை, மாத சனிக்கிழமை, ஆடி அமாவாசை, மார்கழி அமாவாசை, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வீர ஆஞ்சநேயரை வேண்டினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. பழநி பேருந்து நிலையத்தில் இருந்து பாலாறு அணைக்கு பேருந்து வசதி உள்ளது. பாலாறு அணை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சில அடி தூரம் நடந்து சென்றால், இக்கோயிலை அடையலாம்.