

சிவன், பெருமாள் ஆகியோர் ஒரே கருவறையில் காட்சியளிக்கும் சிறப்புபெற்றது அம்மையநாயக்கனூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூரில் அமைந்துள்ளது கதலி நரசிங்கப்பெருமாள் கோயில். மதுரையை ஆண்ட இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் (கி.பி.1239-1251) காலத்தில் கட்டப்பட்டுள்ளது இக்கோயில். அப்போது, ஈஸ்வர சுயம்புலிங்கம் மட்டும் இந்த கோயிலில் இருந்துள்ளது.
சிறிய கோயிலாக இருந்ததை விஜயநகரப் பேரரசு படையெடுப்புக்குப் பிறகு 1563-ம் ஆண்டில் பொம்மள நாயக்கர் காலத்தில் பெரிய ஆலயமாக கட்டப்பட்டு திருப்பணிகள் நடந்துள்ளன. இந்த கோயிலில் சுயம்பு லிங்கத்துடன் பெருமாளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கதலீஸ்வர நரசிங்கப்பெருமாள் என அழைக்கப்படுகிறது. கோயிலில் கதலீஸ்வரரும், நரசிங்கப்பெருமாளும் ஒரே கருவறையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பது சிறப்பாகும்.
கோயிலின் அமைப்பு: கோயிலில் கதலி நரசிங்கப்பெருமாள் சந்நிதிக்கு அருகில் கமலவல்லி தாயார் சந்நிதி உள்ளது. உட்பிரகாரத்தை சுற்றி பல்வேறு சந்நிதிகள் உள்ளன. ஆழ்வார்கள் மண்டபத்தில், ஆழ்வார்கள் அனைவரின் உருவச்சிலைகளும் உள்ளன. மேலும், சக்கரத்தாழ்வார் சந்நிதி, ஹயக்கிரீவர், காலபைரவர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. கோயிலின் தலவிருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது.
நடை திறப்பு: காலை 7 முதல் 10.30 மணி வரையும், மாலையில் 5 முதல் 8 மணி வரையும் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் காலை 7 முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 முதல் 8 மணி வரையிலும் நடை திறக்கப்படுகிறது.
வழிபாடுகள்
மார்கழி மாதத்தில் அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறுகிறது. காலை 5.20 மணிக்கு விஸ்வரூப தரிசனம், தீப ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், மகாபிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, காலபைரவர் வழிபாடு, ஆஞ்சநேயர் ஜெயந்தி, திருவோணம், வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பு, ஆருத்ரா தரிசனம், கமலவல்லி தாயார் வழிபாடு ஆகியவை நடைபெறுகின்றன.