

பாரத கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணி பாதுகாத்து வரும் மடங்களுள், கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் உள்ள சாரதாம்பாள் பீடம் சிறப்புமிக்க மடமாகத் திகழ்கிறது. துங்கா நதிக்கரையில் அமைந்த ஸ்ரீ வித்யா சங்கரர் கோயில் கட்டிடக் கலைக்கு உதாரணமாக விளங்குவது தனிச்சிறப்பு.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில்,
பரித்ராணாய சாதுனாம் வினாஷாய சதுஷ்க்ரிதம் தர்ம ஸன்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே (48) என்று கூறியுள்ளார்.
தர்மநெறி வாடி அதர்மம் தலைதூக்கும்போது, அதை சரி செய்ய நான் யுகங்கள்தோறும் தோன்றுவேன் என சொன்னவண்ணம் திரேதா யுகம், துவாபர யுகத்தில் ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர் போன்ற இறை அவதாரங்கள் பூமியில் எடுத்து தர்மத்தை காத்தது போன்று கலியுகத்தில் சனாதன தர்மத்தை உத்தாரணம் (சீர் தூக்குதல்) செய்வதற்காகவே கேரள மாநிலம் காலடி எனும் சிற்றூரில் ஞான வடிவான தட்சிணாமூர்த்தி உருவில் திருவள்ளுவரின்
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (50) என்ற திருவாக்குப் படியும் ஸ்ரீ ஆதிசங்கரர் அவதரித்தார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பரால் திருவவதாரப்படலத்தில் (37-வது பாடல்) வருணிக்கப்பட்ட கலைக்கோட்டு மாமுனிவர் என்கிற ரிஷ்ய சிருங்க மகரிஷி தவம் புரிந்த இடம்தான் இன்றைய கர்நாடக மாநில சிருங்கேரி (சிருங்கேரி) மலை. இந்த ஸ்தலத்தில் ஸ்ரீ ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதே சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் எனும் சிருங்கேரி மடம். தமக்குப் பின்பும் நாட்டில் தர்மப்பிரச்சாரம் என்றைக்கும் நிலைத்து இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த மடத்தை நிறுவினார்.
சிருங்கேரி மடத்துக்கு என தனியாக வேதம், தீர்த்தம், ஷேத்ரம் (ஸ்தலம்), தேவதை போன்றவற்றை ஸ்ரீ ஆதிசங்கரர்உருவாக்கினார். அதன்படி வேதமாக யஜுர் வேதத்தையும், தீர்த்தமாக துங்கா நதியையும், ஷேத்ரமாக சிருங்கேரி மற்றும் ராமேஸ்வரத்தையும், சக்தியாக பிரும்ம வித்யா ஸ்வரூபினியான ஸ்ரீ சாரதாம்பாளையும், தேவதைகளாக மலஹானிகரேசுவரர் மற்றும் வராஹ மூர்த்தியை நிர்மாணித்தார்.
ஸ்ரீ ஆதிசங்கரர் ஏற்படுத்திய குருபரம்பரையில் தற்போது 36-வது ஞானகுருவான ஸ்ரீ சங்கராச்சார்ய ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசந்நிதானம் சுவாமிகள் தலைமையேற்று சிருங்கேரி பீடத்தை நிர்வகித்து வருகிறார். இம்மடம் உபநிஷத்தில் உபதேசிக்கப்பட்ட அத்வைத சித்தாந்தத்தையும் ஆன்மிக நெறியையும் தழைத்தோங்கச் செய்து, பாமர மக்களுக்கு நல்வழிகாட்டி வருவதோடு நம்முடைய பாரத கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பேணி பாதுகாத்து பல அறப்பணிகளையும், சமுதாய பணிகளையும் புரிந்து வருகிறது.
ஸ்ரீ ஆதிசங்கரரின் பவித்திரமான சங்கல்பத்தாலும், அவருடைய பரமானுக்ரஹத்தாலும் அன்று முதல் இன்று வரை சிருங்கேரி மடத்தில் குருபீடத்தில் அவிச்சின்னமாக (வழிவழியாக) அருளாளர்கள் எழுந்தருளி அறவழி நின்று மக்களுக்கு நல்லுபதேசம் செய்து வருகின்றனர். ஸ்ரீ ஆதிசங்கரருக்குப் பிறகு சுரேச்வராச்சாரியார் பட்டமேற்றார். இம்மடத்தின் 10-வது பீடாதிபதியான ஸ்ரீ வித்யாசங்கர தீர்த்த (1228-1333) சுவாமிகள் சர்வ காலமும் பரமானந்தத்தில் திளைத்திட்ட மகான் ஆவார்.
இவருடைய ஜீவ சமாதி மீது கட்டப்பட்டதுதான் வித்யாசங்கரர் கோயில். இக்கோயில் 1338-ம் ஆண்டு கட்டப்பட்டது. சிற்பக்கலைக்கும், சாளுக்கிய திராவிடப் பாணிக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் வித்யாசங்கரர் கோயிலை சிருங்கேரிக்கு வருகை தரும் பக்தர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் இன்றைக்கும் ஆச்சரியமாகப் பார்த்து பூரிப்பதுண்டு. தற்போது இந்திய அரசின் தொல்பொருள் இலாகா பொறுப்பில் உள்ளது.
இவருக்குப் பின்பு பீடத்துக்கு வந்த ஸ்ரீ வித்யாரண்யர் சுவாமிகளின் ஆலோசனை, அனுக்கிரஹத்தால் சங்கம வம்சத்தைச் சேர்ந்த ஹரிஹரா, அவரது சகோதரர் புக்கராயர் ஆகியோர் முயற்சியால் அன்றைய இந்துக்களைப் பாதுகாக்க தென் இந்தியப் பிரதேசத்தில் ஓர் இந்து ராஜ்ஜியம் ‘விஜயநகரம்’ என்னும் பெயரில் 1336-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னாட்களில் இது விரிவடைந்து விஜயநகரப் பேரரசாக வளர்ந்து வலுப்பெற்றது.
ஸ்ரீ வித்யாரண்யர் சுவாமிகளின் வழிகாட்டுதலின் பேரில் தங்களின் அரச எல்லையை விரிவாகப் பரவச் செய்து சிறப்பாக ஆட்சி செய்ததால் விஜயநகர அரசர்கள் நிலங்கள், பல கிராமங்கள், பொன், பொருள் போன்றவற்றையும் குருகாணிக்கையாக மடத்துக்கு அளித்தனர். இதனால் சிருங்கேரி மடம் ஓர் சமஸ்தானமாக வளர்ந்து உயர்ந்தது.
விஜயநகர அரசர்கள் போன்றே மைசூர் உடையார், மராட்டிய அரசர்களும் மைசூர் பகுதியில் ஆண்ட சிற்றரசர்களும், ஜமீன்தார்களும், வேற்று மதமான இஸ்லாமியத்தைச் சேர்ந்த ஹைதரலியும், ‘மைசூர் புலி’ என்று அழைக்கப்பட்ட திப்பு சுல்தானும், ஆங்கிலேய அரசின் அதிகாரிகளும் மடத்துக்கு பல்வேறு வகையில் உதவிகளைச் செய்துள்ளனர். இதற்குக் காரணம் குருபீடத்தில் அமர்ந்த ஆச்சார்ய சுவாமிகளின் பாண்டித்தியமும், ஆசாரசீலம் நிறைந்த தூய துறவு வாழ்க்கையும், அவர்களின் மனிதநேய தொண்டும்தான்.
சமீபகாலத்தில் 33-வது பீடாதிபதியான ஸ்ரீ சச்சிதானந்த சிவ அபிநவ நரசிம்மபாரதி (1870-1912) சுவாமிகளின் முயற்சியால் ஸ்ரீ ஆதிசங்கரரின் அவதார ஸ்தலம், காலடியில் திருவாங்கூர் மகாராஜாவின் ஒத்துழைப்புடன் புதியதாககோயில் உருவாக்கப்பட்டு 1910-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த புண்ணிய சீலருக்குப் பின்பு 34-வது பீடாதிபதியாக ஸ்ரீ சந்திரசேகர பாரதிசுவாமிகள் பட்டமேற்றார். இவர், உலகியல் விஷயங்களில் சிறிதளவும் பற்றின்றி வைராக்கியமாக வாழ்ந்த மகாபுருஷர் மட்டுமின்றி ஜீவன் முக்தரும் ஆவார்.
எப்போதும் ஏகாந்தத்தையும், தவ வாழ்க்கையையும் விரும்பியதால், மடத்தை நிர்வகிக்க வேண்டிய சூழ்நிலையில் 14 வயது நிரம்பிய பாலகரை 1931-ம் ஆண்டு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்தர் என்ற தீட்சா நாமத்துடன் மடத்தின் வாரிசாக நியமித்தார். இவரால் நாட்டின் பல பகுதிகளில் சிருங்கேரி மடத்தின் கிளை மடங்களும், கோயில்களும், வேத பாடசாலைகளும் உருவாயிற்று. இம்மகான் சாஸ்திரங்களில் கரை கண்டவர். 1989-ம் ஆண்டு வரை சிறப்பான முறையில் பீடத்தில் அமர்ந்து சிருங்கேரி மடத்தை நிர்வகித்து வந்தார்.
1951-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் அலகுமல்லிபடு எனும் கிராமத்தில் வசித்து வந்த வெங்கடேஸ்வர அவதானி - அனந்தலட்சுமி தம்பதிக்கு பிறந்த ஆண்குழந்தைக்கு சீதாராம ஆஞ்சநேயலு என்று பெயரிட்டனர். தெய்வீக அம்சத்துடன் பிறந்த இக்குழந்தையைத்தான் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள், 1974-ம் ஆண்டு நவ. 11-ம் தேதி சிருங்கேரி மடத்தின் அதிதேவதையான ஸ்ரீ சாரதாம்பாளின் அனுமதியுடன், தமது சீடராக ஏற்றார்.
துறவரம் ஏற்ற சீடருக்கு ஸ்ரீ பாரதி தீர்த்தர் என்கிற யோகப் பட்டத்தையும் கொடுத்து, மடத்தை வழிநடத்தும் நிர்வாக நுணுக்கங்களையும், மடத்து சம்பிரதாயங்களையும் கற்பித்தார். இதனால் ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் இன்றளவும் மடத்தை உன்னத நிலைக்கு உயர்த்தும் அனைத்து பணிகளையும் செவ்வனே செய்து வருகிறார். தம்மை நாடி வரும் பக்தர்களை இன்முகத்துடன் அருள்பாலித்து வரும் கருணைக் கடலாகத் திகழ்கிறார்.
தமது குருநாதர் போன்று பாரத தேசம் முழுவதும் விஜய யாத்திரை மேற்கொண்டு சனாதன தர்மநெறியை தமது அருளுரையால் பரப்பி மக்களை நல்வழிப்படுத்தி வருகிறார். இவர் சந்நியாசம் ஏற்று 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ‘ஸ்வர்ண பாரதி’ எனும் பெயரில் பல சமூக, சமுதாய நலப்பணிகள், ஆன்மிக திருப்பணிகள் தற்சமயம் மடத்தின் மூலம் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள், ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகளை 2015-ம் ஆண்டு மடத்தின் வாரிசாக நியமித்தார். குருபரம்பரையின் முந்தைய ஆச்சார்ய சுவாமிகள் போன்று இவரும் வேத சாஸ்திரங்களை கற்றறிந்தவர் மட்டுமின்றி, புலனடக்கம் முதலான ஆன்மிக சாதனங்களைப் பெற்று, ஒளிர்ந்தவராகத் திகழ்ந்து வருகிறார். ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் போன்றே இவரும் இன்முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
‘ஊனத்திருள் நீங்கிட வேண்டில்
ஞானப் பொருள் கொண்டடி பேணும்’
என திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையில் பாடிய வண்ணம் உயிர்களுக்கு ஊனத்தை விளைவிக்கும் ‘இருள்’ என்கிற அறியாமையையும், பாவத்தையும் போக்கும் குருவை நாடி, அவரை சார்ந்து ஒழுகினால் நமது பிறவித் துன்பங்கள் நீங்கும். பேரின்பம் கிட்டும். இதை வலியுறுத்தும் வண்ணம் திருமூலர்,
‘தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் நாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே’ என்று பாடினார்.
யோகிகளுக்கு எல்லாம் யோகியாகவும், ஞானிகளுக்கு ஞானியாகவும், குருவிற் சிறந்த ஜகத் குருவாகவும், கற்பக விருட்சமாகவும் திகழ்ந்து வரும் ஞான குருவைபோற்றி அறியாமை இருளில்இருந்து விடுபடுவோம்!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!