

பக்தர்கள் இறைவனை தரிசிக்க கோயில்களுக்குச் செல்வது வழக்கம். இறைவனுக்காக பல நாள் விரதமும் இருப்பதுண்டு. இறைவனை உணர்ந்து கொள்வதற்கு பல பயிற்சிகளை மேற்கொள்வதும் உண்டு. நமது எண்ணமும் நோக்கமும் நல்லனவாக இருந்தால், இறைவனே நம்மைத் தேடி வருவார் என்பது ஆன்றோர் வாக்கு.
ஓர் ஆசிரமத்தில், குருநாதர் தனது சீடர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒவ்வொரு மாணவரும் பல சந்தேகங்களை அவரிடம் கேட்க, அவரும் அனைவருக்கும் பதில் கூறிக் கொண்டிருந்தார். அப்போது புதிதாக வந்த சீடரிடம் குருநாதர், “ஆன்மிகத்தின் நோக்கம் என்ன?” என்று வினவினார்.
புதிய சீடனும், “இறைவனை அறிவதுதான். அவரை அடைவதுதான் ஆன்மிகத்தின் நோக்கமாக இருக்க முடியும்” என்றார். ‘‘இத்தனை நாள் ஆன்மிகத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறாயே.. இறைவனை அறிந்தாயா?’’ என்று குருநாதர் கேட்கிறார். சீடரும், “இல்லை. இறைவனை அறிந்துகொள்ளத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்?’’ என்றார்.
“உண்மையிலேயே இறைவனை அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறாயா?” என்று குருநாதர் கேட்டதற்கு சற்று நேரம் யோசனை செய்த சீடர், “நம்புகிறேன். ஆனால் கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது” என்கிறார்.
“எதனால் இந்த சந்தேகம் வருகிறது?” என்று குருநாதர் வினவ, சீடரும், “பலர் பலவிதமாக இறைவனைப் பற்றி கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் தெளிவை விட குழப்பமே மேலிடுகிறது” என்கிறார். “நல்லது. இறைவனைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அவரை அடையவும் விரும்புகிறாயா? இதற்கான ஆன்மிகப் பயிற்சியில் தானே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய்? இறைவனை அடைய மிகவும் எளிமையான மாற்று வழியை சொல்லித் தருகிறேன்.
ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது. ஆனால் அவர் வந்து உன்னை அடைவார்” என்றார் குருநாதர். இப்போது சீடர் மேலும் குழப்பமடைகிறார். அவர் குழப்பமடைந்ததை அவரது முகமே குருநாதருக்கு காட்டிக் கொடுக் கிறது. சீடரின் குழப்பத்தை தீர்க்க குருநாதர் ஒரு கதை கூறுகிறார்.
ஓர் ஊரில் இருக்கும் அரசரை, யாரும் எளிதில் சந்தித்துவிட முடியாது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் அவரை சந்திப்பது என்பது இயலாத செயல். அப்போது ஒருவர் ராஜாவை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறார். இதையடுத்து நாட்டு மக்களுக்கு பயன்படும்படி பல செயல்களை செய்கிறார்.
பல அறத் தொண்டுகள் புரிகிறார். இந்த செய்தி ராஜாவை சென்றடைகிறது. ராஜா உடனே தன்னுடைய பிரதிநிதிகளை அனுப்பி, அவர் இருக்கும் இடத்தை அறிகிறார். மற்றொரு சமயம் அரசர், அந்த நபர் இருக்கும் பகுதிக்குச் செல்லும்போது, அவரை சந்திக்கிறார். அவருடன் உரையாடுகிறார். அவரை பலவாறு பாராட்டுகிறார். பல பரிசுகள் தருகிறார்.
இந்த கதையை கூறிமுடித்ததும், குருநாதர் தனது சீடரைப் பார்த்து, “இது நடக்கும் இல்லையா?” என்று கேட்க, அவரும் நடக்கும் என்கிறார். “இப்போது ராஜாதான் இறைவன். நீ தான் அந்த நபர். நீ என்னதான் முயற்சிகள் செய்தாலும் அரசரை நெருங்குவது கஷ்டம். உன் செயல்கள் பலருக்கு பயனுள்ளதாக இருந்தால், அவரே உன்னைத் தேடி வருவார்.
இறைவனும் அப்படித்தான். தகுதியான செயல்களில் ஈடுபட்டால் அவரே உன்னைத் தேடி வருவார். செய்யும் தொழிலே தெய்வம் என்று தனித்துவத்துடன் செயல்பட்டால், பக்தரைத் தேடி இறைவன் ஓடோடி வருவார்” என்று சீடருக்கு உபதேசித்தார் குருநாதர்.