

ஒவ்வொரு ஊரிலும் குடி கொண்டிருக்கும் தெய்வத்துக்கு ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் பிரசித்தியானவை. பாகவத பாராயணம், சூரிய நமஸ்காரம், தியானம், அர்ச்சாவதார வழிபாடு போன்று இறை நாமத்தையும் முக்கிய வழிபாடாக கருதுவதுண்டு.
குருவாயூரப்பனை ஸ்ரீமத் பாகவத பாராயணத்தால் வழிபடுவது சிறப்பு. கேரளம் முழுவதுமே வெடி வழிபாடு என்று பட்டாசு கொளுத்தி வழிபடும் முறை இருக்கிறது. மாரியம்மனுக்கு உப்பும் மிளகும் செலுத்தி வழிபடுவார்கள். திருப்பதி வேங்கடாசலபதிக்கு தனம் செலுத்துவது சிறப்பு. சூரியனுக்கு நமஸ்கார வழிபாடு சிறந்ததாகும்.
ஒவ்வொரு யுகத்திலும் கூட வழிபாட்டு முறைகள் வேறுபடுகின்றன. க்ருத யுகத்தில் தியானத்தாலும் த்ரேதா யுகத்தில் யாக யக்ஞங்களாலும், துவாபர யுகத்தில், ஒரு மூர்த்தி செய்து பூஜை செய்யும் முறை அதாவது அர்ச்சாவதார வழிபாடும் இறைக்கு உகந்தவையாகக் கருதப்படுகின்றன. கலியுகத்தில் இறைவனின் பெயரைச் சொல்வதே வழிபாடுதான்.
இக்கலியுகத்துக்கான தெய்வமாக அறியப்படும் பாண்டு ரங்கனுக்கு இறை நாமமே முக்கிய வழிபாடாக இருக்கிறது.
‘விட்’ எனப்படும் செங்கலின்மேல் நின்றுகாட்சி கொடுப்பதால் விட்டல், விட்டலன் என்றெல்லாம் கொண்டாடப்படுகிறார். தேவேந்திரன் செங்கல் உருவில் வந்து இறைவனைத் தாங்குகிறார். ‘விட்டல்’ எனப்படும் ஒலி, இதய நோய்க்கு மருந்து என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.
108 உபநிஷத்துகளில் மிக முக்கியமானது கலி ஸந்தரண உபநிஷத் என்பதாகும். கலியுகத்தில் இறைவனை அடைவதற்கான மிக முக்கியமான மந்திரம் ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே. ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே’ என்று மேற்கூறிய உபநிஷத் கூறுகிறது. அதுவும் இந்த மந்திரத்தைச் சொல்வதற்கு, எந்த விதமான கட்டுப்பாடுகளும் விதிகளும் இல்லை. எல்லா மக்களும் எப்போது வேண்டுமானாலும் எந்த நிலையிலும் இதைச் சொல்லி இறையை அடைந்து விடலாம் என்பதாலேயே இந்த மந்திரம் மஹா மந்திரம் என்றழைக்கப்படுகிறது. இந்த மந்திரத்தில் மிக முக்கியமான மூன்று இறைத் திருநாமங்கள் அழகாகக் கோக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ராம, க்ருஷ்ண, ஹரி என்பவைதான் அவை.
இறை நாமத்தையே முக்கிய வழிபாடாகக் கொண்டிருக்கும் விட்டலனின் மூலமந்திரம் ‘ராம் க்ருஷ்ண ஹரி’ என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்ட்ரம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் விட்டலனுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். விட்டலன் குடி கொண்டிருக்கும் பண்டரிபுரம் இம்மூன்று மாநிலங்களுக்கும் மத்தியில் உள்ளது.
பாண்டுரங்கன் சிவனின் அம்சமாகவும் விளங்குகிறார். அதனாலேயே ஆதிசங்கரர் பாண்டுரங்கன் மீது செய்யும் துதியில் பரப்ரும்ம லிங்கம் பஜே பாண்டுரங்கம் என்று பாடு
கிறார். பாண்டுரங்கனின் தலை சிவலிங்க வடிவில் இருக்கிறது.
ஆடி மாதம் வளர்பிறையில் வரும் ஆஷாட ஏகாதசி, கார்த்திகை மாதம் வளர் பிறையில் வரும் கைசிக ஏகாதசி மற்றும் சிவராத்திரி ஆகியவை பாண்டுரங்கனுக்கு மிக முக்கியமான வழிபாட்டு நாள்களாகும்.
வாரகரி எனப்படும் யாத்திரை மிகப் பிரசித்தியாகும். ஏறத்தாழ 500 வருடங்களுக்கும் மேலாக இந்த வாரகரி யாத்திரை நடைபெற்று வருகிறது. ஆஷாட ஏகாதசி தினத்தில் விட்டலனை தரிசனம் செய்வதே இந்த வாரகரி யாத்திரையின் நோக்கமாகும். மஹாராஷ்டிராவில் உள்ள ஆலந்தி என்னும் இடத்தில் ஸந்த் ஸ்ரீ ஞானேஸ்வரரின் சமாதி உள்ளது. இங்கிருந்து ஒவ்வொரு வருடமும் ஆஷாட ஏகாதசிக்கு முன் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் வாரகரி யாத்திரை தொடங்குகிறது.
அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி ஹரிபாட் எனப்படும் 48 பாடல்களைக் கொண்ட அபங்கத் தொகுப்பையும், பல அபங்கங்களையும் வாத்தியங்களுடன் இசைத்துப் பாடிக் கொண்டிருப்பர். ஞானேஸ்வரரின் சமாதி இருக்கும் ஆலமரம் பெரிதாக அசைந்து அதிலிருந்து இலை கீழே விழும். அதுவே அவரது உத்தரவாகக் கருதப்பட்டு யாத்திரை தொடங்கப்படும். ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடக்கும் மிகவும் ஆச்சரியமூட்டும் நிகழ்வு இது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் முதியோர் என்று அனைவரும் சிற்சிறு குழுக்களாக கால்நடையாக ஆஷாட ஏகாதசி தினத்தில் பண்டரிபுரம் வந்து சேர்வார்கள். இந்த யாத்திரையைத் தலைமையேற்று நடத்துவதே விட்டலன்தான் என்னும்படி அவர்களின் வண்டிகளில் விட்டல் ஸர்தார் என்று அலங்காரம் செய்து வைத்திருப்பர். லட்சக்கணக்கான பக்தர்கள் வரிசையில் வந்து காத்திருப்பதால் விட்டலன் அவர்கள் பாடும் அபங்கத்தில் மயங்கி அவர்களைக் காண விருப்பப்பட்டு மஹாத்வாரம் எனப்படும் கோயிலின் பிரதான வாயிலின் கோபுரத்தின் மேலேறி நின்று தரிசனம் கொடுப்பதாக ஐதீகம்.
கண்ணன் புவியில் அவதரித்திருந்த காலம் அது, புண்டலீகன் என்பவர் வயதான தன் தாய் தந்தையரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறார் என்று கேள்வியுற்ற கண்ணன் புண்டலீகனைக் காணத் தன் தேவி ருக்மிணியுடன் துவாரகையிலிருந்து வந்தார்.
அப்போது புண்டலீகன் தன் பார்வையற்ற தந்தைக்கு சேவை செய்து கொண்டிருந்ததால், வெளியில் வந்து கண்ணனை வரவேற்க இயலவில்லை. எனினும் விருந்தோம்பலைப் பேணுவதற்காக, வேறு ஆசனங்கள் எதுவும் இல்லாத நிலையில் கைக்கெட்டிய தூரத்திலிருந்த 2 செங்கற்களைத் தூக்கிப் போட்டு அதை இருக்கையாக ஏற்றுக் காத்திருக்கும்படி சொன்னார். வந்திருப்பது நாட்டு மன்னராயினும் பெற்றோர் சேவையை விடாமல் தொடர்ந்த புண்டரீகனைக் கண்டு மகிழ்ந்து போன கண்ணன், அவரது வேண்டுகோளின்படி அங்கேயே குடிகொண்டார்.
பண்டரிபுரத்தில் இருக்கும் பாண்டுரங்கன் மற்றும் ருக்மிணி தேவியின் சிலா மூர்த்திகள் சிற்பியால் வடிக்கப் பட்டவை அல்ல. இறைவனின் திருமேனியிலிருந்து அவரே விரும்பி வெளியிட்டவை.
விட்டல் மந்திரில் ருக்மிணிதேவி, ராதாதேவி, அன்னபூரணி ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன. கான்ஹோபாத்ரா என்ற பக்தையின் அடையாளமாக நிற்கும் மரமும் அவசியம் வணங்க வேண்டிய ஒன்றாகும்.
விட்டலன் கோயில் தவிர, சந்திரபாகா நதி, புண்டலீகன் கோயில், நாமதேவர் வாழ்ந்த வீடு, ஸ்ரீ மல்லிகார்ஜுன ஸ்வாமி கோயில், நரஹரி ஸோனார் வீடு, கபீர்தாஸ் மற்றும் அவரது மகன் கமாலின் சமாதிகள், ஸந்த் துகாராம் வீடு, தாக்பீட் மந்திர், சோகாமேளா வீடு போன்றவை அவசியம் தரிசனம் செய்யவேண்டிய இடங்களாகும். பண்டரிபுரத்தின் முழு சரித்திரமும் அனைவருக்கும் எளிதாக விளங்கும் வண்ணம் பொம்மை, படக் கண்காட்சியும் உள்ளது.
பண்டரிபுரத்தின் அருகில் கோபால்பூர் என்ற இடத்தில் விட்டலனின் பாதம், ஜனாபாய் பயன்படுத்திய பாண்டங்கள் மற்றும் சக்குபாய் சந்நிதி ஆகியவை உள்ளன.
ஞானேஸ்வரர், நாமதேவர், துகாராம், புரந்தர தாசர், ஜனபாய், சக்குபாய் என்று எண்ணற்ற பக்தர்கள் விட்டலனைப் பாடிய பாடல்கள் அபங்கம் என்றழைக்கப்படுகின்றன. அபங்கம் என்றால் குறைவற்றது என்று பொருள்.
- ஹரிப்ரியா