பக்தியும் நம்பிக்கையும்

பக்தியும் நம்பிக்கையும்
Updated on
2 min read

இறை வழிபாட்டில் பக்தியும், நம்பிக்கை யும் முக்கிய இடம் பிடித்துள்ளன. தீவிர பக்தியுடன் நிறைந்த நம்பிக்கையுடன் வழிபாட்டில் ஈடுபட்டால், அவையே நமக்கு உற்சாகத்தை அளித்து, பணியில் மேன்மை அடைய உதவுகின்றன. மனதை ஒருநிலைப்படுத்தி, இறை சிந்தனையில் ஈடுபடும்போது, அது நமக்கு எதிலும் வெற்றியையும், நிறைவையும் அளிக்கிறது.

ஓர் ஏழை விவசாயி, குடும்ப கஷ்டங்களால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். தினமும் அதிகாலை எழுந்து, பணிக்குச் செல்லும் விவசாயி, இரவு நேரத்தில்தான் இல்லம் திரும்புவார்.

இதனாலேயே அவரால் இறை வழிபாடு செய்ய இயலாமல் போனது. கோயிலுக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தமும் அவருக்கு இருந்தது.

இறைவனை வழிபட்டால் தன்னுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்ற நம்பிக்கையில் இருந்த அவர், எவ்வாறு இறைவனை வழிபடுவது என்று யோசித்தார். ஒருநாள், சிறிய கிருஷ்ணர் சிலையை வாங்கி வந்து, இல்லத்தில் ஒரு பீடத்தில் வைத்து, தன்னுடைய குறைகளை சொல்லி வழிபட்டு வந்தார்.

தினமும் பணிக்குச் செல்லும் முன்பும், இரவு படுக்கச் செல்லும் முன்பும் கிருஷ்ணரை வழிபட்டார். ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற வாசனை பொருட்களை வைத்து வழிபாடு செய்தார். பல மாதங்கள் வழிபட்டும், அவரது ஏழ்மை நிலை மாறவில்லை. விவசாயத்தில் ஏதோ வருவாய் வந்து கொண்டிருந்தது. அமோக விளைச்சல் இருக்கும் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் விவசாயிக்கு கோபம் மேலிட்டது. தினமும் வழிபட்டும் கிருஷ்ணர், தனது கஷ்டத்தை நிவர்த்தி செய்யவில்லையே என்று நினைத்தவர், வேறு ஒரு சுவாமி சிலையை வாங்கி வந்தார்.

கிருஷ்ணர் இருந்த இடத்தில், புதிய சுவாமிக்கு இடம் அளிக்கப்பட்டது. கிருஷ்ணர் சிலையை அதற்கு மேல் இருக்கும் அலமாரியில் வைத்தார். பின்னர் புதிய சுவாமிக்கு எளிய முறையில் வழிபாடு நடைபெற்றது. ஊதுபத்தியை கொளுத்தி புதிய சுவாமிக்கு அருகில் வைத்தார். அதில் இருந்து எழுந்த புகை, மேலே அலமாரியில் இருந்த கிருஷ்ணர் சிலை மீதும் பட்டது.

உடனே அந்த விவசாயி, “இவ்வளவு நாட்களாக உன்னை வழிபட்டதற்கு, நீ எந்த கைமாறும் செய்யவில்லை. அப்படியிருக்கும்போது, புதிய சுவாமிக்கு ஏற்றி வைக்கப்பட்ட ஊதுபத்தி நறுமணத்தை நீ மட்டும் எப்படி அனுபவிக்கலாம்” என்று கூறி, சிறிய பஞ்சை எடுத்து கிருஷ்ணர் சிலையின் மூக்கில் வைத்து அடைத்துவிட்டார்.

அந்த நிமிடமே கிருஷ்ணர் அவர் முன்பாகத் தோன்றி அருள்பாலித்தார். விவசாயிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கிருஷ்ணரைப் பார்த்து, “உன்னை வழிபட்டபோது, எனக்கு தரிசனம் கொடுக்காத நீ, உன்னை அலட்சியப்படுத்தியபோது எனக்கு ஏன் தரிசனம் கொடுத்தாய்? உனக்கு கோபம் வரவில்லையா?” என்று கேட்டார்.

உடனே கிருஷ்ணர், “என்னை அலட்சியப்படுத்தினாயா? நான் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. என்னை ஒரு பொம்மையாக, சிலையாகப் பார்க்காமல், உயிருள்ளவன் என்று எண்ணி பஞ்சை எடுத்து என் மூக்கில் அடைத்தாயே? அந்த பக்தியால் மகிழ்ந்தேன். ஆனால் உனது நம்பிக்கை ஏன் குறைந்தது. இருப்பினும் பரவாயில்லை. பெற்றோரிடம் கோபித்துக் கொள்ள குழந்தைக்கு உரிமை இல்லையா என்ன? உனக்கு என்ன வரம் வேண்டும்? அதை கண்டிப்பாக தருகிறேன்” என்றார்.

விவசாயியும் தனது ஏழ்மை நிலை மாற வேண்டும் என்று விண்ணப்பம் வைக்க, இறைவனும் ‘அப்படியே ஆகட்டும்’ என்று அருள்பாலித்தார்.

எப்போதும் இறை உருவங்களை, கல்லாகவும் மண்ணாகவும் கருதாமல், நிஜம்
என்று நினைத்தாலே இறைவன் ஓடோடி வருவான். சிலை (கல்) என்று பார்த்தால் இறைவன் தெரிய மாட்டான். இறைவன் என்று பார்த்தால் அது சிலை (கல்) என்பது நமக்குத் தெரியாது. இறை வழிபாட்டுக்குத் தேவை பக்தியும் நம்பிக்கையும் மட்டுமே..!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in