

எகிப்திய நாட்டில் மூன்று நூற்றாண்டுகள் அடிமை வாழ்வு வாழ்ந்த யூதர்கள், அதிலிருந்து மீண்டு வந்ததை ஆண்டுதோறும் நினைவுகூர விரும்பினர். அதற்காக, ‘பாஸ்கா’ (பாஸ்கா என்கிற எபிரேயச் சொல்லுக்கு ‘கடந்து வருதல்’ என்று பொருள்) என்கிற விடுதலையின் பெருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடத் தொடங்கினர். அந்த பாஸ்கா பண்டிகையின் போதுதான் இறைமகன் யேசு கிறிஸ்து, தனது சொந்த இனத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டார்.
இத்தனைக்கும் பாஸ்கா பண்டிகையின் ‘விடுதலை’ தத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக, தாங்கள் பரிந்துரைக்கும் கைதிகளை விடுதலை செய்யும்படி தங்களை ஆண்டுவந்த ரோமானிய ஆட்சியாளர்களுக்கு யூத மத பீடத்தின் தலைவர்கள் பரிந்துரை செய்வர்.
அப்படியொரு சந்தர்ப்பம் சற்றேறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன் வந்தபோது, எந்தக் குற்றமும் செய்யாத யேசுவை கைது செய்து, ரோமானிய ஆளுநர் பிலாத்துவின் முன் நிறுத்தினர். அப்போது யேசுவிடம் விசாரணை செய்த ஆளுநர், “இவரிடம் எந்தக் குற்றமும் காணமுடியவில்லை; இவரை நான் விடுதலை செய்யட்டுமா?” என்று கேட்டார். ஆனால், ‘யேசுவுக்கு பதிலாக பரபாஸ் என்பவரை விடுதலை செய்யும்’படி கேட்டனர். யார் இந்த பரபாஸ்?
யூத மதம் இவர்கள் வசம்: யேசு 30 வயதில் தொடங்கி 33-வது வயதில் படுகொலை செய்யப்படும் வரை, 3 ஆண்டுகள் மட்டுமே ஆன்மிகப் பொதுவாழ்வில் ஈடுபட்டார். கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூத வரலாற்றாசிரியர் ஜொஸிஃபஸ் (Josephus) எழுதிய ‘யூதத் தொன்மையியல் வரலாறு (Antiquities of the Jews c. 94) என்கிற வரலாற்று நூல் தரும் செய்திகளின்படி, யேசுவின் காலகட்டத்தில், யூத மதத்தின் அதிகார பீடத்தில் செல்வாக்கு பெற்றிருந்த இரண்டு யூத மேட்டுக்குடி வர்க்கப் பிரிவினர் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள்.
யூதேயா பிரதேசத்துக்கு நியமிக்கப்பட்டிருந்த ரோமானிய ஆட்சியாளர்கள் இந்த இரு பிரிவினருக்கும் தலையாட்டும் அளவுக்கு மதத்தின் பெயரால் சாமானிய யூத மக்களைக் கைப்பாவைகளாக தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர்.
இவர்கள், யேசுவை ‘மெசியா’ வாக ( மக்களைச் சகல துன்பங்களிலிருந்தும் மீட்பதற்கு ஏக இறைவன் அனுப்பும் வலிமை மிக்க அரசன் என்பது பொருள்) ஏற்க மறுத்தனர். அதனால் பொதுமக்கள் யேசுவை ‘மெசியா’ என்று அழைப்பதைச் சகித்துக்கொள்ள முடியாமல் மனம் புழுங்கினர். நசரேத் என்கிற சின்ன கிராமத்திலிருந்து வந்த ஒரு தச்சரின் மகனான யேசு, சர்வ அதிகாரங்களும் பொருந்திய யூத மத பீடத்தின் வாய்மொழிச் சட்டங்களைக் கடுமையாக விமர்சிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரை ஒழித்துவிடத் துடித்தனர்.
‘இறைவனின் முன் அனைவரும் சமம்’ என்கிற சமதர்மத் தத்துவத்தைப் போதித்தார் யேசு. ‘ஒருவரிடம் இரண்டு ஆடைகள் இருந்தால், அதில் ஒன்றை இல்லாத ஒருவருக்குக் கொடுத்துவிடுங்கள்’ என்றார். ‘அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருந்தால் நீ ருசியோடு உண்ண நினைக்காதே’ என்றார்.
ஏழை மக்கள், தொழிலாளர்களைப் பார்த்து ‘சுமை சுமந்து களைத்திருப்பவர்களே அனைவரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்றார். மதத்தின் பெயரால் மக்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்கி அவர்களைச் சுரண்டுவதற்கு எதிராகச் சாடினார். இறைவனின் எருசலேம் ஆலயத்தைச் சந்தையாக, வியாபாரத் தளமாக மாற்றி வைத்திருந்ததைக் கண்ட யேசு, மனம் கொதித்து ஆலயத்திலிருந்து வணிகர்களை அடித்துத் துரத்தினார்.
‘கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்’ என்பது அக்கால யூத மதத்தின் கடுமையான அணுகுமுறை. "எதிரிக்கும் அன்பு செய் - ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு" - இது யேசுவின் அன்பு முறை. ‘பாலியல் தொழில் செய்யும் பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்’ என்றனர் யூதர்கள்.
‘உங்களில் பாவம் செய்யாதவன் அவள் மீது முதல் கல்லை எறியட்டும்’ என்று மன்னிப்பைப் போதித்தார் யேசு. மத குருக்கள் மன்னர்களுக்குச் சமமானவர்கள் - அனைவரையும் விட உயர்ந்தவர்கள் என்றது யூத மதம். ஆனால் தன் சீடர்களின் கால்களைக் கழுவி முத்தமிட்டு “உங்களில் தலைமை தாங்க விரும்பும் யாரும் முதலில் எல்லோருக்கும் பணியாளாக இருந்து தொண்டு செய்யத் துணிவு இருக்க வேண்டும்” என்றார் யேசு.
மன்னிப்பும் மகிழ்ச்சியும்: பெரு நோயாளிகளை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தது யூத மதம் - யேசுவோ அவர்களைத் தொட்டு, குணமாக்கி சமூக நீரோட்டத்தில் இணைத்தார். ‘துன்பங்களுக்கும் நோய்களுக்கும் பாவமே காரணம்; அதை மன்னிக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு’ என்றது யூத மதம். யேசுவோ மக்களின் பாவங்களை தாமே மன்னித்து, குணமளித்தார். இது யூதர்களைக் கொதித்தெழச் செய்தது.
‘கடவுள் செய்ய வேண்டியதை ஒரு மனிதன் செய்யக் கூடாது’ என்றனர். ‘நம்மைப் போன்ற (பிற்போக்கான) எல்லா யூதர்களுக்காகவும் ஒரு யூதன் சாவதில் தவறில்லை’ என்று கூறி பரபாஸ் என்பவனுக்கு பதிலாக யேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல ஆளுநரை வற்புறுத்தி உத்தரவைப் பெற்றுக் கொண்டனர் (லூக்கா 23 : 18).
தீமைகளின் உறைவிடமாக இருந்தது பரபாஸா? கீழ்மைகளிலிருந்து தங்களை விடுதலை செய்ய வந்தது புரட்சியாளர் யேசுவா? என்கிற கேள்வி எழுந்தபோது மக்களுக்குச்சரியாக பதில் சொல்ல முடியவில்லை. விடுதலையாளர்யார் என்பது அவர்கள் கண்களுக்கு மறைந்தே இருந்தது. பரபாஸை விடுவிக்கக் குரல் எழுப்பும்படி மக்களை யூத மதத் தலைவர்கள் வற்புறுத்தினர்.
யேசுதான் உண்மையிலே பரபாஸை தண்டனையிலிருந்து விடுதலை ஆக்கினார். விடுதலை செய்யப்பட்ட பரபாஸின் மகிழ்ச்சியை இந்தப் புனித வெள்ளி நாளில் நமக்கு யேசு கிறிஸ்து தருகிறார். நம்மை விடுவிக்கவே யேசு கைதியானார். தீர்ப்பு பெற்றார். சிலுவையில் தொங்கினார். நாம் மீட்பைப் பெற்றுக் கொண்டோம்.
- jesudoss.c@hindutamil.co.in