

குடும்பம் எனும் அலகு, சமூக அமைப்புக்கு முக்கியமானது எனில் அதில் சமத்துவம் இருக்க வேண்டியது அவசியம். ஒருவர் உரிமையை மற்றொருவர் நிராகரிக்காமல் இருக்க வேண்டும். அவரவர் கடமையைச் சரிவர செய்ய வேண்டும். குடும்பத்தில் பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும்போது, மகிழ்வான தலைமுறை உருவாகும். நல்லிணக்கத்தை மனிதர்களிடையே வலியுறுத்தும் அண்ணல் நபி, அதைக் குடும்பத்திலிருந்து தொடங்குகிறார்.
அன்றைய அரேபியாவில் பலவகைத் திருமண முறைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மணமகளின் பெற்றோருக்குக் குறிப்பிட்ட தொகையை அளித்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது, குறுகியகாலத் திருமணம் (அல்முத்ஆ), மணப்பெண்ணின் அனுமதியின்றி நடக்கும் கட்டாயத் திருமணம் போன்ற முறைகள் அவற்றுள் சில. திருமணம் எனும் நிகழ்வு இல்லாமலேயே ஒரு பெண்ணுடன் பல ஆண்கள் இணைவதும் இருந்திருக்கிறது.
மேற்கண்ட மணமுறைகள் பெண்களின் நிலையைத் துயர் மிக்கதாக்கின. இச்சூழலில்தான், பெற்றோரின் அனுமதி மட்டுமல்ல, பெண்ணின் அனுமதி பெற்றே திருமணம் நடைபெற வேண்டும் என திருக்குர்ஆன் கண்டிப்புடன் சொல்கிறது. ‘நம்பிக்கையாளர்களே! பெண்களைப் பலவந்தமாக உரித்தாக்கிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல’ (திருக்குர்ஆன் 4:19).
இன்றளவும் இஸ்லாம் வகுத்த நெறிமுறையில் மணப்பெண்ணின் சம்மதம் கேட்டுத்தான் திருமணம் நிகழ்கிறது. இதன்மூலம் பெண்ணுக்குத் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறை, 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டு, செயல்முறைப்படுத்தப்பட்டிருப்பதை வியக்காமல் இருக்க இயலாது.
பெண்ணும் ஆணும் சமம்: அண்ணலாரிடம், தன் சம்மதத்தைப் பெறாமல் நடைபெற்ற திருமணத்தைப் பற்றி ஒரு பெண் முறையிட அத்திருமணத்தை அவர் ரத்து செய்தார். பெண்ணின் சம்மதம் பெறாமல் நடைபெறும் திருமணம் ஹராம் ஆகும். இறை நம்பிக்கையாளர் எனும் அடிப்படையில் ஆணும் பெண்ணும் இஸ்லாமில் சரிசமமானவர்கள்.
அவர்களுக்கு எந்த நிலையிலும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதில் இறைவன் உறுதியாக இருக்கிறான். இஸ்லாமை அறிந்துகொள்ள நினைப்போர், திருக்குர்ஆனையோ நபிமொழியான ஹதீஸையோ படிக்கும் முன்னர், ஓர் இஸ்லாமியன் எப்படி வாழ்கிறான் எனப் பார்ப்பார்கள் எனும் கூற்றுப்படி இஸ்லாமியர் ஒருவரின் வாழ்வே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
ஏக இறை நம்பிக்கையாளர்கள், சமூகத்தில் தனித்துவம் மிக்கவர்களாகத் திகழத் திருக்குர்ஆன் வழிவகுக்கிறது. மணப்பெண்ணின் சம்மதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேபோல, திருமணத்திற்கு முன் மணமக்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதும் முக்கியமானது. அண்ணல் நபி இதை அவசியமானது என்கிறார். ஆனால், இடைப்பட்ட காலத்தில் மணப்பெண்ணை மணமகன் பார்ப்பதோ பேசுவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டது. இது நபிமொழிக்கு மாறானதாகும். தற்காலத்தில் இந்த வழக்கம் மாறிவருகிறது.
மஹர் எனும் மாண்பு: பெண்ணின் பெற்றோருக்குக் கொடுக்கப்படும் மணக்கொடையைத் தவிர்த்து அதைப் பெண்ணுக்கான உரிமையாக்கியது இஸ்லாம். ‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை மனமுவந்து அளித்து விடுங்கள்’ (திருக்குர்ஆன் 4:4). அவ்வாறு அளிக்கப்படும் மணக்கொடை, பெண்ணுக்கு மட்டுமே உரித்தானது.
திருமணம் ஏதேனும் காரணத்தால் ரத்து ஆனாலும் மணமகனால் கொடுக்கப்பட்ட மணக்கொடை திரும்பப்பெறல் ஆகாது. இஸ்லாத்தில் மணமுறிவுக்குப் பிறகு ஜீவனாம்சம் கொடுக்கும் வழக்கம் இல்லாததால் மணக்கொடையே அவளது வாழ்வுக்கு ஆதாரமாகிறது.
மேலும், மறுமணம் பெண்ணுக்கும் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் ஜீவனாம்சம் பற்றிய திட்டமிடல் அப்போது இருக்கவில்லை எனக் கொள்ளலாம். மணக்கொடை என்ன என்பதை நிர்ணயிக்கும் உரிமையும் பெண்ணுக்கு இருக்கிறது. நிலம், அணிகலன்கள் என எதையும் பெற்றுக்கொள்ளும் உரிமை பெண்ணுக்கு இருக்கிறது. அண்ணல் நபி காலத்தில் திருக்குர்ஆனின் வசனங்களை ஒரு பெண்ணுக்குக் கற்றுக்கொடுத்து அதை மணக்கொடை யாக்கி நடைபெற்றத் திருமணங்களும் உண்டு.
இன்று காலமாற்றத்தால் பல பண்பாட்டுக் கலப்புகளின் பாதிப்பால் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் மணக்கொடைகளைவிட மிக அதிக அளவில் பெண்வீட்டாரிடம் இருந்து வரதட்சிணை வாங்கப்படுகிறது. அவ்வாறு செய்வது இறைவனின் வெறுப்பைப் பெறும் செயலாகும்.
திருமணத்துக்குப் பிறகு உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மாற்றத்திற்கு ஆளாகித் தனது வாழ்க்கைப் பாதையையே மாற்றிக்கொள்பவள் பெண் மட்டுமே. இதையும் தாண்டி அவளிடம் இருந்து வரதட்சிணையை ஏற்றுக்கொள்வது அவமானத்திற்குரிய செயலாகும்.
பெண்ணின் உரிமையான மஹருக்கு முக்கியத்துவம் வழங்காமல் இருப்பது, மணமுறிவுக்குப் பிறகு மறுமணம் செய்ய விரும்பாத பெண்ணின் வாழ்வைக் கேள்விக்குறியாக்குகிறது. எனவே, வரதட்சிணைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மஹருக்கு முக்கியத்துவம் அளிப்பதே சிறந்தது.
இத்தகைய நெறிமுறைகளோடு தத்தமது கடமைகளைச் சரிவர செய்வோம் என நம்பிக்கையுடன் நடைபெறும் திருமண ஒப்பந்தம், எளிமையாக நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெறும் திருமணங்களே நிறைவானது என்கிறார் அண்ணல் நபி.
(தொடரும்)
- bharathiannar@gmail.com