

இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில், தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 39 ஆவது தலம் ஆகும். குங்கிலியக் கலிய நாயனாரின் மகன் இறந்துவிட அந்தச் சடலத்தைத் தகனம் செய்வதற்கு எடுத்துப் போகிறார்கள்.
அந்த வழியில் உள்ள விநாயகர் அவர்களை வழிமறித்து நாக கன்னிகை தீர்த்தத்தில் தீர்த்தமாடிவிட்டு வீடு திரும்பச் சொல்கிறார். அவர்களும் அப்படியே செய்து வீடு திரும்புகிறார்கள். இறந்த மகன் வீட்டில் உயிருடன் இருக்கிறார். இப்படியொரு நம்பிக்கையைப் பெற்றது இத்தலம். இத்திருக்கோயில் விநாயகருக்கு ‘ஆண்ட விநாயகர்’ என்கிற பெயரும் உண்டு.
ஆண் நாகம் வழிபாடு செய்த தலங்கள் பலவுண்டு. பெண் நாகம் வழிபாடு செய்த தலம் திருப்பனந்தாள் மட்டுமே. துர்க்கைக்கும் தனிச் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கி உள்ள அருணஜடேஸ்வரர் கோயிலின் வாயிலில் கோபுரம் உள்ளது. இதன் கீழ்ப்புறத்தில் ‘நாக கன்னிகை தீர்த்தம்’ உள்ளது.
கோயிலின் வெளிப்பிரகாரத்தின் கீழ்ப்பக்கத்தில் தலவிருட்சமான பனை மரமும் அதன் அருகில் தாடகை வழிபட்ட சிவலிங்கமும் இருக்கின்றன. மூலவரான அருணஜடேஸ்வரர் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. இவ்விறைவனுக்குச் செஞ்சடையப்பர், தாளவனேஸ்வரர், ஜெகநாதர் என்னும் வேறு பெயர்களும் உண்டு.
வடக்கில் மேற்கு நோக்கிய பெரிய நாயகியின் சந்நிதி இருக்கிறது. நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபாடு செய்வதற்கு உகந்த தலமாக அருணஜடேஸ்வரர் ஆலயம் சொல்லப்படுகிறது. குறிப்பாகப் பெண்களுக்கான தோஷ நிவர்த்திக்குரிய தலம் என்பது இதன் கூடுதல் சிறப்பு. சோழ நாட்டு வடகரைத் தலமாகிய இது திருவிளையாடல் புராணத்திலும் சுட்டப்பட்டுள்ளது.
பக்தியால் நிமிர்ந்த தலை: தாடகை என்னும் பெண் பிள்ளைப்பேறு வேண்டி இறைவனை வழிபட்டுவந்தாள். ஒரு நாள் இறைவனுக்கு மாலை சாற்றும்போது, ஆடை நெகிழ அதனை இரு முழங்கைகளாலும் பற்றிக்கொண்டு மாலை சாத்த முடியாமல் வருந்தினாள். அவளின் பக்தி கண்டு இரங்கினான் இறைவன். அவள் மாலை சூட்டுவதற்கு வசதியாக இறைவன் தனது தலையைச் சாய்த்து மாலையை ஏற்றுக்கொண்டான். அதனால் இறைவனின் தலை சாய்ந்து இருந்தது.
அதைக் கண்ட மன்னர் தலையை நேர் நிறுத்த படையும் யானையும் கொண்டு முயன்று பார்த்தார்; முடியவில்லை. ஆனால் குங்கிலியக் கலிய நாயனார் சிவலிங்கத்தில் கயிற்றைப் பிணைத்துக் கயிற்றின் மறுமுனையை தம் கழுத்தில் கட்டி இழுக்க இறைவன் தலை நேரானது என்பர்.
ஆலயத்துள் அலங்கார மண்டபம், தீர்த்தவாரி மண்டபம், வாகன மண்டபம், 16 கால் மண்டபம் ஆகியவை உள்ளன. 16 கால் மண்டபத்தில் தாடகைக்காக வளைந்துகொடுத்த இறைவனின் தலையை குங்கிலியக் கலிய நாயனார் நிமிர்த்தியது சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. குங்கிலியக் கலிய நாயனாரின் சந்நிதி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் மேற்குக் கோபுரத்தின் தெற்குப் பக்கத்தில் உள்ளது.
தாடகை ஈச்சரம்: ‘கண்பொலி நெற்றியினான் திகழ் கையிலொர் வெண்மழுவான் …. / தண்பொழியில் சூழ்பனந்தாட் டிருத் தாடகை ஈச்சரமே’ எனும் தேவாரப் பாடலில் திருஞானசம்பந்தர் திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் இறைவனையும் ஊரின் சிறப்பினையும் விளக்குவதை அறியலாம். தாடகை பூசித்து வந்தமையால் இத்தலத்தைத் திருஞானசம்பந்தர் ‘திருத்தாடகை ஈச்சரமே’ என குறிப்பிடுகிறார்.
உடலில் தோன்றிய பல பிணிகளையும் நீக்கும் வல்லமை உடையவன் இவ்விறைவன் என்பதை ‘சூழல்வினையும் சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும் பாழ்பட வேண்டுதிரேல் மிகு ஏத்துமின்’ என குறிப்பிடுகிறார் திருஞானசம்பந்தர்.
கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டின் மூலம் இத்திருக்கோயிலை திருப்பனந்தாள் நக்கன் தரணி என்பவர் கட்டியதாக அறியமுடிகிறது. சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் இத்திருக்கோயிலை எடுப்பித்ததாகத் தெரிகிறது. கல்வெட்டுகளில் இறைவனின் பெயர் திருத்தாடகை ஈச்சரத்து மகாதேவர், திருத்தாடகேச்சரத்துப் பெருமான், திருத்தாடகேச்சரத்து நாயனார் என வழங்கப்படுகிறது. முதல் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டில் இருந்து இறைவியின் பெயர் ‘பெரிய நாச்சியார்’ என்பது தெரியவருகிறது.
இறைவியின் கோயிலைக் கட்டியவர் வெண்கூருடையார் அன்பர்க்கரசு மருத மாணிக்கமான வில்லவராசன் என்கிற செய்தி இக்கோயில் மகா மண்டபத்து வாசலில் தென்பக்கம் உள்ள கல்வெட்டால் புலனாகிறது. பிரம்மன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், சந்திரன், சூரியன், ஆதிசேடன், நாக கன்னிகை, தர்மசேனன், தாடகை, குங்கிலியக் கலிய நாயனார், நாகுன்னன் உள்ளிட்ட பலரும் இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றார்கள்.
பனையின் தாளில் இறைவன் எழுந்தருளி இருத்தலால் ‘பனந்தாள்’ எனப்பட்டது. பாடல் பெற்ற தலமாதலால் ‘திருப்பனந்தாள்’ ஆயிற்று. தல விருட்சத்தின் பக்கத்தில் இருக்கும் கிணற்றில் நாக கன்னியர் வந்து வழிபட்டதாக ஒரு ஐதிகம் உண்டு. கடந்த ஜூலை மாதம் இக்கோயிலுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.
அருணஜடேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் - அணைக்கரை வழித்தடத்தில், கும்பகோணத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
- packiyasri2010@gmail.com