முக்கூடலுக்கு வந்த முருகப்பெருமான்!

முக்கூடலுக்கு வந்த முருகப்பெருமான்!
Updated on
2 min read

மூன்று நதிகள் சங்கமமாவதைத் ‘திரிவேணி சங்கமம்’ என்பர். மணிமுத்தாறு, கோமுகி, மயூர ஆகிய நதிகள் சங்கமமாகும் இடம் கடலூர் மாவட்டத்தின் நல்லூர். இங்கே சோழர் கால கலைத்திறனுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது வில்வனேஸ்வரர் கோயில்.

வில்வனேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பிகையும் கிழக்கு நோக்கித் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். இங்கே முருகப் பெருமான் பெரிய திருவுருவமாகக் காட்சியளிக்கிறார். இது இக்கோயிலின் சிறப்பு.

புராணச் சிறப்பு: கயிலையில் பார்வதியோடு வீற்றிருந்த சிவபெருமான் முன் முருகப் பெருமான் கைகூப்பி வணங்கி நிற்பதைப் புரிந்துகொண்ட சிவபெருமான் தவம் கலைத்து, முருகனின் கோரிக்கையைக் கேட்டார்.

“அசுரர்களை வதம் செய்ததால், வீர ஹத்தி தோஷம் என்னைத் தாக்கியுள்ளது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய எனக்கு அருள வேண்டும்” என முருகன் முறையிட்டார்.

“மூன்று நதிகள், சங்கமிக்கும் நடுநாட்டில் உள்ள வில்வ வனத்தில் உறையும் எம்மை வழிபட்டால் உனது தோஷம் மறைந்து போகும்” என்றார் சிவன்.

உடனே மயிலேறி அவ்விடம் வந்தார் முருகன். நடுநாட்டில் உள்ள திருத்தலத்தின் எதிரே மூன்று நதிகள் சங்கமிக்கும் ஆற்றில் நீராடி சிவனைப் பூசித்தார். அப்போது வில்வமரங்களுக்கு நடுவே வில்வனேஸ்வரராகக் காட்சியளித்து, அருள்பாலித்த சிவபெருமான், முருகனின் வீர ஹத்தி தோஷத்தை நீர்த்துப்போகச் செய்தார்.

சூரியனைக் கண்ட பனிபோல் தோஷம் நீங்கி நின்ற முருகனிடம் சிவன், “எம்மைத் தரிசித்து நீ பூசித்த இத்திருத்தலத்திலேயே, எம்மைப் பூசித்த திருக்கோலத்திலேயே, வடதிசை நோக்கி நின்று எம்மைத் தரிசிக்க வரும் பக்தர்களின் தோஷங்களைத் தீர்ப்பாயாக” என்று கட்டளையிட்டார். அன்று முதல் ஒரு கையில் வேலுடனும் மறு கையில் சேவல் கொடியுடனும் வட திசை நோக்கி முருகன் அருள்பாலிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.

ஞானம், கிரியா, பிரம்மா: கருவறையைச் சுற்றி சுற்றாலை மண்டபங்கள் உள்ளன. அதில் அறுபத்து மூவர் உள்ளனர். பின்புறம் பிராண தியாகர் லிங்கமும், தண்டபாணி, லட்சுமி நாராயணர், மகாலட்சுமியும் உள்ளனர். கருவறைக் கோட்டங்களில் விநாயகர், தென்முகன், மாதவப்பெருமாள், பிரம்மன், துர்க்கை உள்ளனர். இறைவியின் கருவறையைச் சுற்றி ஞான சக்தி, கிரியா சக்தி, பிரம்மா சக்தி எனச் சிலைகள் உள்ளன. இறைவியின் முகப்பு மண்டபத்தையொட்டி வீரபத்திரர் தெற்கு நோக்கியுள்ளார்.

திருக்கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முக மண்டபம் ஆகியவை உள்ளன. சோழர் காலத் தூண்களைக் கொண்டுள்ள மகா மண்டபத்தில், வடக்குப்புறம் ஒரு தூணில் கல்வெட்டு காணப்படுகிறது. அதில், ‘பொய்கை நாட்டுத் திருவையாறு’ என்னும் கல்வெட்டுத் தகவல் உள்ளதால், பொய்கை நல்லூர் என்பதை பொய்கை, நல்லூர் என இரு தலமாக அழைக்கப் பொருந்தும். சோழர் காலத்தில் பெரும்பான்மையான கிராமங்கள் நல்லூர் என்றே அழைக்கபட்டுள்ளன.

அமைவிடம்: விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் உள்ள கண்டப்பங்குறிச்சியில் இருந்து வடக்கே 4 கி.மீ. சென்றால் நல்லூர் வரும். விருத்தாசலத்திலிருந்து சேலம் செல்லும் பேருந்தில் ஏறி, கண்டப்பங்குறிச்சியிலும், சென்னையில் இருந்து வேப்பூர் வந்திறங்கி, கண்டப்பங்குறிச்சி சென்று அங்கிருந்து நல்லூர் வில்வனேஸ்வரர் கோயிலுக்குச் செல்லலாம். காலை 9 முதல் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். இருகால பூஜைகள் தினசரி நடைபெறும். மாசிமகப் பெருவிழா இக்கோயி லில் கொண்டாடப்படும் சிறப்பான வைபவம்.

- murugavel.n@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in