ஸ்ரீ கிருஷ்ணர் அருள்பாலிக்கும் வட இந்தியக் கோயில்கள்

ஸ்ரீ கிருஷ்ணர் அருள்பாலிக்கும் வட இந்தியக் கோயில்கள்
Updated on
4 min read

ஸ்ரீகிருஷ்ணனின் பிறப்பைக் கூறுவதுதான் ஜென்மாஷ்டமி. தென்னிந்தியாவில் செப்டம்பர் 6 அன்றும் வட இந்தியாவில் அதற்கடுத்த நாளும் கிருஷ்ணனின் பிறப்பு கொண்டாடப் படுகிறது. வட இந்தியக் கோயில்களில் கிருஷ்ணன், ராதாவின் தாக்கம் அதிகம். நந்தகுமாரன் வளர்ந்த பிருந்தாவனத்தில் காணவேண்டிய கோயில்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

வட இந்தியாவில் தென்னிந்திய பாணியில் கட்டப்பட்டிருக்கும் ரங்கநாதர் கோயில்கூட இருக்கிறது. வட இந்தியாவில் இருக்கும் ஸ்ரீ ராதா மதன்மோகன் கோயில், பங்கே பிகாரி மந்திர், ஸ்ரீ கிருஷ்ண பலராம் மந்திர், மதுவன், கோவிந்த தேவ்ஜி கோயில் ஆகிய ஐந்து கோயில்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன் கோயில்: கிருஷ்ணனின் கொள்ளுப்பேரன் வஜ்ரநாபன் இந்தக் கோயிலை முதன் முதலில் கட்டினான். பிருந்தாவனத்தின் மிகப்பழைமையான கோயில் இது.

யமுனா நதிக் கரையில் 50 அடி உயரக் குன்றின் மீது நகரா பாணியில் இந்தக் கோயில் எழுந்துள்ளது. பின்னொரு காலத்தில் மறக்கப்பட்டது. மண்ணால் மூடப்பட்டது. பொ.ஆ.(கி.பி.)1580இல் சனாதன கோஸ்வாமி என்பவர் இதனைக் கண்டறிந்து புதிய கோயிலாக மாற்றினார்.

முகலாய மன்னர்களின் படையெடுப்பால் இந்தக் கோயிலுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், மூலவர் விக்கிரகம் கரௌவ்லி என்கிற இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. ஒருகட்டத்தில் அதைத் திருப்பிக் கேட்டபோது, மறுக்கப்பட்டது. இதனால், பொ,ஆ. 1748இல் புதிதாக உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ மதன் மோகன், ராதா, லலிதா எனப்படும் கோபி ஆகிய மூவர் உள்ளனர். கோஸ்வாமி கட்டிய ஆறு கோயில்களில் இதுவும் ஒன்று. சிவப்புக் காரைகல்லில் 20 மீட்டர் உயரத்தில் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

ஸ்ரீ இஸ்கான் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோயி ல்: இஸ்கான் இயக்கத்தினர் முதன்முதலாகக் கட்டிய கிருஷ்ணன் கோயில் என்னும் பெருமையைப் பெற்றது, ராமன் ரெட்டி என்னும் இடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயில். கிருஷ்ணர், பலராமர் சகோதரர்களுக்கு ஸ்ரீ சுவாமி பிரபு பாதா ஒரு கோயில் கட்ட விரும்பினார். அதன்படி எழுந் த கோயில் இது.

கோயிலின் உள்ளே மத்தியில் உயர்த்தப்பட்ட மேடையில் கர்ப்பக்கிரகம். இதில் கிருஷ்ணர், பலராமர் சிலைகள் உள்ளன. இவர்களுக்கு வலப்பக்கத்தில் அவர்களின் இளம் வயது நண்பர்களின் சிலைகளும் உள்ளன. இடப்புறம், சைதன்ய மகாபிரபு உள்ளார். எல்லாமே சலவைக்கல் சிலைகள். கண்கள் மலர ரசித்து தரிசிக்கலாம்.

ஸ்ரீ பங்கே பிகாரி கோயில்: பிருந்தாவனத்தின் பிரபலமான கோயில்களில் ஒன்று. ராதா வல்லப் கோயிலுக்கு அருகில் உள்ளது. ராஜஸ்தானி பாணி கட்டிடக் கலையில் இந்தக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளே கர்ப்பகிரகத்தில் கிருஷ்ணன், திரிபங்கா நிலையில் குழந்தையாக நின்றுகொண்டிருக்கிறார். இங்கே சப்தம் எழுப்புவதற்கு மணி, சங்கு போன்றவை பயன்படுத்தப்படுவதில்லை. காரணம், குழந்தைக்கு சப்தம் ஆகாதாம்.

‘பங்கே’ என்றால் நின்ற கோலத்தில் மூன்று இடங்களில் வளைந்தபடி காட்சி தருபவர் எனப் பொருள். ‘பிகாரி’ என்றால் சுகவாசி. இவரை ‘குஞ்ச் பிகாரி’ எனவும் செல்லமாக அழைக்கின்றனர். இங்கே தினமும் மூன்று கால பூஜை உண்டு. முதல் காலம்: காலையில் ஸ்நானம் செய்வித்து, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்து பூஜை நடக்கிறது.

இரண்டாவது காலம்: கிருஷ்ணனுக்கு உணவு படைக்கும்போது நடக்கும் பூஜை. மூன்றாவது காலம்: மாலை தூங்கச் செய்யும்போது நடத்தப்படும் பூஜை. அருகில் தனி சந்நிதிகளில் தேவகி, ருக்மணி உள்ளிட்டோரின் சிலைகள் உள்ளன. கைகளில் கங்கணம், கால்களில் சலங்கை, கழுத்தில் மணிமாலைகள் என எல்லாரும் வியந்து பார்க்கும்படி இருக்கிறார் கிருஷ்ணர்.

ஸ்ரீ நிதி வன் (ம துவன்) - ராதா, கிருஷ்ணன் மற்றும் கோபியர் பொழுதுபோக்குகிற இடம். துளசிக் காடுகளும் மரங்கள் அடர்ந்தும் காணப்படும் இடமான இந்த மதுவன், மாலை ஏழு மணிக்கு மூடப்படுகிறது. இன்றைக்கும் இங்கு ராசலீலா நடப்பதாகப் பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது.

ஸ்ரீ கோவிந்தாஜி கோயில்: பிருந்தாவனில் உள்ள ஸ்ரீ கருட கோவிந்தாஜி கோயில் வித்தியாசமானது. இங்கே கிருஷ்ணனைக் கருடன் மீது அமர்ந்த கோலத்தில் தரிசிக்கலாம். இது தவிர, பிரேம் மந்திர் கோயிலில் ராதாவுடன், ராமர், சீதை இருப்பதைக் காணலாம். இந்தக் கோயில் ஒரு கலைப் பொக்கிஷம். இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்.

இவை தவிர, ராதா, ராமன் கோயில், ராதா தாமோதர் கோயில், ராதா கோபிநாத், ராதா வல்லப் எனப் பல கோயில்கள் உள்ளன. பர்கானாவில் ராதாவுக்கென்றே ராதா ராணி கோயில் உள்ளது. இதிலும் கிருஷ்ணன் உள்ளார்.

கோவர்த்தனத்தில் கிருஷ்ணன் சுண்டு விரலால் தூக்கிய மலையின் மேல் பகுதியை மட்டும் இங்கு காணலாம். இங்கெல்லாம் கோவர்த்தன பூஜை மிகவும் சிறப்பாக நடக்கும். இவற்றையெல்லாம் முடித்துக்கொண்டு மதுரா வரலாம்.

பிருந்தாவன் கோயிலிலும் தனியாக கிருஷ்ணன் பிறப்பு கொண்டாடப்படுகிறது. வடநாட்டில் பத்ர பாதா மாதத்தின் கிருஷ்ணபட்ச அஷ்டமி அன்று கிருஷ்ணனின் ஜனனம் நடக்கிறது. மதுராவிலும் பிருந்தாவனிலும் கிருஷ்ணன் பிறப்புக்குப் பத்து நாள்கள் முன்பிருந்தே நகரம் களைகட்டிவிடும். ராசலீலா உள்பட கிருஷ்ணன் சார்ந்த பல நிகழ்வுகள் நாடகமாகவும் நடனமாகவும் நடித்துக் காட்டப்படும்.

பலர் விரதம் இருந்து நாள் முழுவதும் கிருஷ்ணன் சார்ந்த கதைகள், பகவத் கீதையைப் படித்து கிருஷ்ணன் பிறப்பு நடந்த பின் விரதம் முடிப்பர். மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலை முதன்முதலில் கட்டியவர் கிருஷ்ணனின் கொள்ளுப் பேரன் வஜ்ர நாபன். கோயிலின் உள்ளே சென்றால், கேசவதேவ் கோயிலைத் தரிசிக்கலாம். அதுவும் கிருஷ்ணன்தான்.

அடுத்து, பகவத் பவன். இங்கு ஆறு அடி உயர ராதாகிருஷ்ணன் சிலையைத் தரிசிக்கலாம். வலது பக்கம் பலராமர், சுபத்ரா, ஜகந்நாதர் ஆகியோர் உள்ளனர். கருடஸ்தம்பர், சைதன்ய மகா பிரபு, ஹனுமான், துர்கா, சிவலிங்கம் என அனைத்தும் இதனுள் உள்ளன.

ஸ்ரீ கிருஷ்ணர் ஜென்மாஷ்டமியை ஒட்டி மதுரா, பிருந்தாவன் ஆகிய இரண்டு இடங்களிலும் அலங்கார விளக்குகள், பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் உறியடி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. உறியடியில் வெண்ணெய், உலர்ந்த பழங்கள் என எல்லாம் உண்டு.

சரியாக 12 மணிக்கு மணி அடிக்கிறது. தயாராக வைத்திருக்கும் கிருஷ்ணன் சிலையை சிறைப் பகுதியிலிருந்து வெளியே எடுத்து வந்து அதற்குப் பால், தயிர் அபிஷேகம் செய்கின்றனர். சிலையைத் துடைத்துப் புத்தாடைகளை அணிவிக்கிறார்கள். பிறகு, குழந்தையை அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் கொண்டுவந்து வைத்து லேசாக ஆட்டுகின்றனர்.

அப்போது பெண்கள் தாலாட்டு உள்படப் பல பாடல்களைப் பாடுகிறார்கள். பாட்டு முடிந்ததும் பஞ்சாமிர்தம். 56 வகையான பண்டங்கள் ஒரு பெரிய தட்டில் வைத்து நைவேத்தியத்துக்கு எடுத்து வரப்படுகிறது. அவற்றைக் கொண்டு தீபாராதனை நடைபெறுகிறது. இத்துடன் நிகழ்ச்சி முடிகிறது.

- radha_krishnan36@yahoo.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in