

என்னிருந்து என்னையவன் மீட்டுத் தந்தான்
என்முகத்தை இன்னதென்று காட்டித் தந்தான்
நாம் தேடுவது கடவுளையா? இல்லை! நம்மை! ஆம், நம்மை நாம் எப்போதோ தொலைத்துவிட்டோம். நம்மை நாம் மறந்து போய்விட்டோம். புதிய புதிய அடையாளங்களைப் புனைந்து கொண்டோம். அவற்றுக்குப் பொதுவாக இன்னோர் அடையாளத்தையும் ஏற்படுத்திக்கொண்டு, அதைத் தேடவும் தொடங்கினோம். அது உண்டென்றும், இல்லையென்றும், சண்டை போட்டுக் கொண்டே காலத்தைக் கழித்தோம். கடவுளையும், நம்மையும் கோட்டை விட்டோம்! இதற்கு, சத்தியம் என்றோ, கடவுள் என்றோ பெயர்வைத்துக் கொண்டோம்.
அதை வெவ்வேறு விதமாக அழைக்கத் தொடங்கி, அதுதான் சரி, இதுதான் தவறென்று ஓயாமல் நம்மோடு நாமும் சண்டை போடத் தொடங்கி, அதில் வெறித்தனமான சுவாரசியம் கொண்டு, அந்தத் தேடலையும் மறந்துவிட்டோம் என்பதே!
எப்படியெல்லாம் நம்மைத் தொலைத்தோம்! - ஒரு கூட்டம் நடக்கிறது. பெரியவர்கள் வழக்கம்போல் ஏதோ கருத்து மோதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அங்கே யாருடையதோ, ஒரு குழந்தை கால்பாவாமல் நடந்து வருகிறது. சண்டைகளெல்லாம் ஒருகணம் நின்றுபோய் அனைவருடைய கண்களும், கவனமும் அந்தக் குழந்தையின் மீது குவிகின்றன. ஏன் தெரியுமா? அந்தக் கள்ளங் கபடமற்ற இதயம் பளபளக்கும் வெள்ளையுள்ளம், நாம் என்றைக்கோ தொலைத்துவிட்ட தூய்மையை, நம்முடைய இயல்பான வெகுளித் தன்மையை நினைவுபடுத்துகிறது. ஏதோ ஒன்று ஆழ நெஞ்சில் நெருடுகிறது.
அதுதான் நம் இயல்பென்றால், அதை நம்மால் எப்படித் தொலைக்க முடிந்தது? குழந்தையாய் இருந்தபோது நமக்கு எதைப் பார்த்தாலும் ஆச்சரியம் இருந்தது. அதனால் பனித்துளியைக் கண்டாலும், பாம்பைக் கண்டாலும், வேறுபாடு பாராட்டாத ஆனந்தம் இருந்தது. பிறகு, அறிவு என்று நாம் நம்பிக்கொண்டிருக்கின்ற தகவல் கூளங்களின் நடுவே அந்தக் குழந்தையைத் தொலைத்துவிட்டோம்.
அந்தக் குழந்தையை இப்போது வெளியே, பொருள்களில் தேடுகிறோம். இந்த உலக வாழ்க்கையில் யாரை வெற்றி பெற்றவர்களாகக் கருத முடியும் தெரியுமா? தாங்கள் சார்ந்த துறைகளில் அவர்கள் எவ்வளவு சிறந்து விளங்கினாலும், தங்களுக்குள் இருக்கும் அந்தக் குறும்புக்காரக் குழந்தைக்கு வயதாகி விடாமல் பார்த்துக் கொண்டவர்களே உண்மையான சாதனையாளர்கள். மற்றெல்லாம் வள்ளுவர் சொன்ன ‘ஆகுல நீர பிற’தான் என்பதை உணர்வோம்.
எதை வேண்டுமானாலும் நீங்கள் தேடிக் கண்டறிந்து விடலாம். ஆனால் நீங்கள் தொலைத்தது உங்களை என்னும்போது எப்படி அதைக் கண்டறிவது? அதுவும், அது பொருளாக இல்லாத போது! அதற்குத்தான் குரு தேவைப்படுகிறார்.
நம்முடைய சத்தியத்தை நம்மூலமே நாம் உணரச் செய்பவரே குரு. அவரைக் காட்டிலும் ஒரு தொண்டரை நாம் பார்க்க முடியாது.
‘உன் குரு உனக்கு என்ன கொடுத்தார்’ என்று பலரும் என்னைக் கேட்பதுண்டு. நானென்ன சொல்வேன்? ‘கொடுத்தாரா! மொத்தமாக என்னை நிர்மூலமாக்கிவிட்டு, இடிபாடுகளின் நடுவே ஓர் இன்ப மலராக என்னை விட்டுவைத்தார்,’ என்றுதான் சொல்லவேண்டும்.
உணர்வுகள், அவை எத்தனை உன்னதமானவையாக இருந்தாலும், அவை உணர்வுகளே. அடையாளங்கள், அவை எவ்வளவு அழகாக இருந்தாலும் அவை தடைகளே. ஆற்றாமை, அது என்னதான் நேர்மையாக இருந்தாலும் அது ஒரு திரையே. இவற்றையெல்லாம் உரித்து உரித்துக் களைபவரே குரு. இந்த நடவடிக்கையில் நமக்கு முதலில் அதிர்ச்சியும், பிறகு ஆச்சரியமும், தொடர்ந்து ஆனந்தமும், அதற்கெல்லாம் மேலாக அமைதியும் விளைவதே நம் அனுபவம்.
நமக்கு நாம் அடையாளங்கள் சூட்டிக்கொண்டு அவற்றை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டதுடன் நிற்காமல், கடவுளுக்கும் அது என்னதென்றே அறியாமல் ஏதேதோ அடையாளங்கள் சுமத்தினோமே! மகிழ்ந்தோமே, நெகிழ்ந்தோமே, அவை போதாதபோது பிரமை தட்டி நின்றோமே! அந்த அடையாளங்களையும் சமரசமின்றித் தகர்த்தெறிகிறார் குரு!
நம்மைப் போல் குரு: எல்லாம் தீர்ந்த நிலையில், நம்முள், கடவுள் என்கின்ற பேருண்மையை, அவர் தன்வடிவில் காட்டுகிறார். `இந்த மெய்ப்பொருளையா நாம் வெறும் மனிதரென்று நினைத்தோம்?' என்று நாம் வியக்கும்போது புன்னகை செய்தபடி மறைகிறார். அவரும் மறையும்போதுதான் அதே மெய்ப்பொருள், செம்பொருள், பேருண்மை, பரம்பொருள் என்று மேலும் பெயர்கள் சூட்டிப் பார்த்த அது நாமே என்று உணர்கிறோம்.
அந்தத் தருணம்வரை தொடர்பவரே குரு.
குருவும் இறையும் ஒன்று, இதைக்
கொள்வோம் மனத்தினில் நன்று!
நம்மிடையே வாழ்ந்து, நம்மோடு உணவையும், காற்றையும் பகிர்ந்துகொண்டு, நம்முடன் தேநீர் அருந்தி, பத்திரிகைகள் படித்து, அரசியல் விவாதித்து, அங்கும் இங்கும் பயணம் செய்து, கோயிலில் நின்று கும்பிட்டு, கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருந்து, வாய்விட்டுச் சிரித்து நம்மைப் போலவே வாழும் குரு, நம்மில் ஒருவர் அல்ல என்பதை உணர்வோம். நம்மை நமக்கு உணர்த்த வேண்டும் என்னும் கருணையினால் அவர் நம்மைப் போல் தென்படுகிறார்.
தான் தேகமல்ல என்ற தெளிவுடன்தான் அவர் இத்தனைச் செயல்களிலும் ஈடுபடுகிறார். அவருடைய தேகம் என்பது ஒரு வரம்பு - அவருக்கல்ல, நமக்குத்தான்! இந்த உடம்பு நாமில்லை என்பதை நமக்கு உணர்த்தத்தான் அவர் உடம்பெடுத்து வருகிறார்.
என் வாழ்க்கையில், என்னுடைய அனுபவங்களின் சார்பில் விளைந்த என் பார்வையில் குருதான் எனக்குக் கண்முன் தெரியும் கடவுளாகத் தோன்றுகிறார். அவர் மூலமே என்னால் எதிலும் கடவுள் தன்மையைக் கண்டு பருகுவது சாத்தியமாகிறது.
உள்ளி லிருந்தெனை உந்தி இழுப்பான்
வெளியி லிருந்தெனை உள்ளே தள்ளுவான்
என் குருவே இறைவன்! அவன்
என் உயிரின் தலைவன்!
என்னைப்போல் உங்களுக்கும் குரு வாய்க்க வேண்டும் என்பதே, என் குருவிடம் நான் செய்துகொள்ளும் பிரார்த்தனை!
(தரிசனம் நிகழும்)
- tavenkateswaran@gmail.com