

உயிரினங்கள் அனைத்துக்கும் ஆதாரமாக விளங்குவது மண். ஒரு சென்டிமீட்டர் உயிருள்ள மண் உருவாவதற்குப் பல நூறு ஆண்டுகள் தேவைப்படுகின்றன. தற்காலத் தீவிர விவசாய முறைகளாலும், ரசாயனப் பயன்பாட்டினாலும், இயற்கைப் பேரிடர்களாலும் மண்ணின் சத்துக்கள் கரைந்து, மண் மலடாகி வருகிறது.
வருங்காலத் தலைமுறைக்கு வளமான பூமியை விட்டுச் செல்லவும், விவசாயத்தில் நிலையான லாபத்தைப் பெறவும் மண்வளத்தைப் பாதுகாப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். அதற்கான வழிமுறைகளை விவசாயிகள் அவசியம் செயல்படுத்த வேண்டும்.
வரப்புகளை உயர்த்துதல்
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நிலப்பரப்பும் அருகாமையில் ஓடும் ஓடை அல்லது ஆற்றை நோக்கிச் சரிவாக உள்ளது. அதிக மழையின் போது ஏற்படும் மண்ணரிப்பினால், பல்வேறு இயற்கை நடவடிக்கைகளால் வளப்படுத்தப்பட்ட விவசாயத்துக்கு ஆதாரமான பொடிமண் (மேல் மண்), ஆறுகள் அல்லது ஓடைகளை நோக்கிக் கடத்தப்படுகிறது.
இதனால் வளமான மண் துகள்களை மீண்டும் உருவாக்குவதற்கு அதிகப் பணமும் காலமும் விரயமாகிறது. எனவே, நிலத்தின் மண் துகள்களை அந்தந்த நிலத்திலேயே சேகரிக்க மண் வரப்புகளை உயர்த்தி அமைப்பது மிக முக்கியமாகும்.
பசுந்தாள் உரங்கள்
ஈரம் மற்றும் இடுப்பொருள்களை மண் தக்க வைத்துக்கொள்ளப் பசை போன்று செயல்படவும், களைக்கொல்லிகளால் பாதிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கவும் பசுந்தாள் உரங்கள் பயன்படுகின்றன. விவசாய நிலங்களின் அமிலகாரத் தன்மை (pH) 6.5 முதல் 8 வரை இருக்கும் நிலங்களில் பசுந்தாள் உரமாகச் சணப்பையும், 8க்கு மேல் உள்ள நிலங்களில் தக்கைப்பூண்டையும் விதைத்து வளர்க்க வேண்டும்.