

தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்குப் பகுதியான கோவில்பட்டி கோட்டம் கரிசல் மண் நிறைந்தது. இங்கு வடகிழக்கு பருவமழையை மட்டுமே நம்பி மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகால பருவநிலை மாற்றத்தால் மழை பொய்ப்பது அல்லது அதிகமாகப் பெய்வது என விவசாயம் பெரும் சவாலாக மாறியுள்ளது.
கடும் சிரமத்துக்கு இடையே மகசூல் எடுத்தாலும், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
இந்தத் துயரங்களுக்கு மாற்றாக, இப்பகுதி மானாவாரி விவசாயிகள் பட்டுப்பூச்சி வளர்ப்புத் தொழிலைக் கையில் எடுத்துள்ளனர்.
கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளம் கிராம விவசாயிகள் 1980-களிலேயே இத்தொழிலை முதன்முதலில் தொடங்கினர். அப்போது சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்தத் தொழில், தற்போது 20 பண்ணைகளாக விரிவடைந்துள்ளது.
இதற்காக விவசாயிகள் தங்கள் நிலங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில், பட்டுப்புழுவின் முதன்மை உணவான மல்பெரி பயிரைச் சாகுபடி செய்கின்றனர்.
வளர்ப்பு முறை
இளம் பட்டுப்புழு வளர்ப்பு மையங்களில் (Chawkie Rearing Centre) இருந்து புழுக்களை வாங்கி வரும் விவசாயிகள், அவற்றை முறையான குளிரூட்டப்பட்ட பண்ணைகளில் வைத்துப் பராமரிக்கின்றனர்.
அறையின் தட்பவெப்ப நிலையைக் கண்காணித்து, மல்பெரி இலைகளை உணவாக அளிப்பது தொழிலாளர்களின் முக்கியப் பணியாகும். புழுக்கள் கொண்டுவரப்பட்ட முதல் 3 நாட்கள் உணவளித்து, பின் 3 நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டும் உணவளிக்கின்றனர்.
சுமார் 15 நாட்களுக்குப் பிறகு புழுக்கள் கூடுகட்டுவதற்காக ‘வளைகள்’ வைக்கப்படுகின்றன. அடுத்த 5 நாட்களில் புழுக்கள் தன் வாய் வழியாக ஜெல்லி போன்ற நூலை உமிழ்ந்து, சிலந்தி வலை போலக் கூடுகட்டத் துவங்குகின்றன.