

மலை சார்ந்த பகுதிகளில் மட்டுமே சாத்தியம் என்றிருந்த மிளகு சாகுபடியானது, வெப்பம் மிகுந்த மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டை பகுதியிலும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. சமவெளியான இந்த பகுதியில் ஏராளமான விவசாயிகள் மிளகு சாகுபடி செய்து பொருளாதாரத்தில் வலுப்பெற்றுள்ளனர். சமவெளி பகுதியில் மிளகு சாகுபடி செய்வதில் பிற பகுதி விவசாயிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டம் வழிகாட்டி வருகிறது.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு வடக்குப்பட்டியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மிளகு சாகுபடியில் ஈடுபட்டு வரும் முன்னோடி விவசாயியான க.பாலுசாமி கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கும் முன்பு காகிதம் தயாரிக்கும் தொழில் தொடர்பாக கேரளாவுக்கு சென்றிருந்தபோது அங்கிருந்து மிளகு கன்றுகளை வாங்கி நடவு செய்தேன்.
அதில் அபரிமிதமான விளைச்சல் கிடைத்தது. அதன் பிறகு, படிப்படியாக சாகுபடி பரப்பை அதிகரித்து சுமார் 8 ஏக்கரில் இப்போது மிளகு சாகுபடி செய்கிறேன். பிற மரங்களில் பற்றி வளரக்கூடிய பண்பு கொண்ட மிளகு, செடி மற்றும் கொடி என 2 வகைகளில் உள்ளன.