

ஏற்காடு செம்மநத்தத்தில் உள்ள தோட்டத்தில், காபி, மிளகு பயிர்களுடன் இயற்கை விவசாயி பிரேமலதா.
போட்டிகள் நிறைந்த இன்றைய வணிகமயச் சூழலில், இயற்கை விவசாயம் என்பது விவசாயிகளுக்கு மிகவும் சவாலான விசயமாகிவிட்டது. இயற்கை விவசாயம் தொடங்கும் காலகட்டத்தில் மிக அதிகமான செலவு, கூடுதல் மனித உழைப்பு, ஆள்பற்றாக்குறை, உழைப்புக்கேற்ற பலன் கிடைக்க இரண்டு, மூன்று ஆண்டுகளாவது பொறுமையுடன் காத்திருக்க வேண்டிய நிலை என இயற்கை விவசாயத்தில் பல சிக்கல்கள் உள்ளன.
இந்த சிக்கல்கள் இல்லாமல், ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வது என்பது எளிதானது. இயற்கை விவசாயத்துடன் ஒப்பிடும்போது செலவு குறைவு, மகசூல் அதிகரிப்பு, உடனே சந்தையில் விற்கும் வாய்ப்பு, வீரிய ஒட்டு ரக விதைகள் உள்ளிட்ட இடுபொருட்கள் எளிதாகக் கிடைப்பது போன்ற காரணிகளை விவசாயிகள் தங்களுக்கு சாதகமானவை என கருதுகிறார்கள்.
இயற்கை விவசாயத்தைப் பொருத்தமட்டில், சூழலியலுக்கு கேடு விளைவிக்காத விவசாயம் என்பதில் தீவிர ஈடுபாடும், எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், தொடர்ந்து விடாப்பிடியாக இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்களால் மட்டுமே, அடுத்த சில ஆண்டுகளில் லாபகரமான சாகுபடியை செய்ய இயலும்.
அத்தகைய தீவிரமான இயற்கை விவசாயிகளில் ஒருவர்தான் சேலம் மாவட்டம் ஏற்காடு செம்மநத்தம் கிராமத்தில் 3.5 ஏக்கர் தோட்டத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பிரேமலதா (57), பிஎஸ்சி (விலங்கியல்) பட்டதாரியான இவர், விவசாய பின்புலமற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்போது முழுநேர இயற்கை விவசாயியாக திகழ்கிறார். அவரது தோட்டத்தில் 342 மிளகு கொடிகளை பராமரித்து வரும் பிரேமலதா, இயற்கை விவசாயத்தில் 2.70 டன் மிளகு (பச்சை) மகசூல் எடுத்து அசத்தியுள்ளார்.